ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க கூட்டணி 10 தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறது. அரக்கோணம், கே.வி.குப்பம், வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. ‘வெற்றி உறுதி’ என அக்கட்சியினரால் கணிக்கப்பட்டிருந்த வேலூர், அணைக்கட்டு தொகுதிகளிலும்கூட அ.தி.மு.க பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க-வுடனான கூட்டணி, தி.மு.க ஆதரவு அலை, அ.தி.மு.க மீதான அதிருப்தி என பல்வேறு காரணங்கள் வாசிக்கப்பட்டாலும், வேலூர் போன்ற ஒரு சில தொகுதிகளில் நிர்வாகிகளின் துரோகத்தால் அ.தி.மு.க வேட்பாளர்கள் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக கொந்தளிக்கிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள்.
தோல்விக்குப் பின்னால் யார் மீது குற்றம் சாட்டியும் பிரயோஜனம் கிடையாது. என்றாலும், தேர்தல் பிரசாரத்தின்போதே... எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து உள்ளடி வேலைப் பார்த்த சில நிர்வாகிகளின் பெயர்களை பொது வெளியில் போட்டுடைத்தார்கள் வேலூர் அ.தி.மு.க-விலுள்ள மூத்த நிர்வாகிகள். அந்த வகையில், முதலில் அடிபட்ட பெயர் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வேலூர் மண்டல செயலாளர் ஜனனீ சதிஷ்குமார். வேலூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.கே.அப்புவுக்கும், ஜனனீ சதிஷ்குமாருக்கும் நேரடியாகவே மோதல் இருக்கிறது. ஜனனீ சதிஷ்குமார் தனது கட்டுப்பாட்டிலிருந்த ஐ.டி விங்கை தேர்தல் பிரசாரத்தின்போது முடக்கி வைத்திருந்ததாக வேட்பாளர் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அதற்கு அ.தி.மு.க தலைமையோ, ``தேர்தல் நேரத்தில் நடவடிக்கை எடுப்பது சரிவராது. வாக்கு எண்ணிக்கை முடியட்டும். துரோகம் செய்த நிர்வாகிகளை களையெடுத்துவிடலாம்’’ என்று கூறிவிட்டதாம். ஆனால், இன்னமும் நடவடிக்கை பாயாதது தோல்வியடைந்த வேட்பாளர் தரப்பினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. ``அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் மாநகர மாவட்டச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்பு வகிக்கிறார். மாவட்டச் செயலாளராகவுள்ள ஒருவரையே தோற்கடிக்க உள்ளடி வேலைப் பார்த்தவர்கள் மீது கட்சித் தலைமை இன்னமும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? என்பதுதான் தெரியவில்லை" என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள் சிலர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மண்டல செயலாளரான ஜனனீ சதிஷ்குமார். எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுப்பது போன்ற புகைப்படத்தை வேலூர் அ.தி.மு.க நிர்வாகிகள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார் ஜனனீ சதிஷ்குமார். அந்த புகைப்படத்தை பார்த்த எஸ்.ஆர்.கே.அப்புவின் ஆதரவாளர்கள், ஜனனீ சதிஷ்குமார் மீது நேரடியாக விமர்சனங்களை வாரி இறைக்கத் தொடங்கினர். ‘‘வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு தொகுதியில்கூட பிரசாரம் செய்யவில்லை. வேட்பாளருடன் இருந்தது கிடையாது. பச்சைத் துரோகி’’ என்று ஜனனீ சதிஷ்குமார் குறித்து வாட்ஸ்-அப் குழுக்களில் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கின்றனர்.
இதையடுத்து, அ.தி.மு.க-வின் சில வாட்ஸ்-அப் குழுக்களிலிருந்து வெளியேறிவிட்டார் ஜனனீ சதீஷ்குமார். ஆனாலும், சமூக ஊடகங்களில் அவர் மீதான சாடல் இன்னும் ஓயவில்லை.
இதுகுறித்து, நம்மிடம் பேசிய எஸ்.ஆர்.கே.அப்புவின் ஆதரவாளர்கள் சிலர்,``எங்கள் கட்சியிலுள்ள தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதிஷ்குமார் ஏற்கெனவே கட்சிப் பணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டுவிட்டார். விரைவில் அவரிடமிருந்து கட்சிப் பதவி பறிக்கப்படும். காட்பாடி காந்தி நகரிலுள்ள அக்சீலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் ஏ.சி வசதியுடன் கூடிய `ஸ்ரீ ஜனனீ பேலஸ்’ என்ற பெரிய திருமண மண்டபத்தையும் கட்டி முடித்து திறப்பு விழாவையும் நடத்தி முடித்துள்ளார் சதிஷ்குமார். இந்த விழாவுக்கு அழைப்பு விடுத்தும் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, மாவட்டச் செயலாளர் உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் ஒருவர்கூட கலந்து கொள்ளவில்லை.
இதில், ‘டுவிஸ்ட்’ என்னவெனில் உள்ளடி வேலை செய்தமைக்காக எதிர்க்கட்சி வேட்பாளரிடம் இருந்து ஜனனீ சதீஷுக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. அதன் பிறகே புது திருமண மண்டபத்தில் பளபளக்கும் மார்பல்ஸ் கற்களைப் பதித்து குளிர்சாதன வசதியெல்லாம் ஏற்படுத்தியிருப்பதாகவும் எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. ஜனனீ சதிஷ்குமாருடன் சேர்த்து மேலும் சில துரோகிகளும் விரைவில் களையெடுக்கப்படுவார்கள்’’ என்றனர்.
இந்த நிலையில், தன் மீது துரோகிப் பட்டம் கட்டியிருப்பதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதிஷ்குமார். விரைவில் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்படலாம் என்று தகவல்கள் வருவது குறித்து ஜனனீ சதிஷ்குமாரைச் சந்தித்து விளக்கம் கேட்டோம்.
நம்மிடம் அவர், ‘‘வேலூரில் இந்த இயக்கம் வலுப்பெறுவதற்காக நான் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வளவோ பாடுபட்டிருக்கிறேன். ஐ.டி விங் மண்டலச் செயலாளராக இருக்கிற நான் வேலூர் தொகுதியில் மட்டும் கவனம் செலுத்த முடியாது. கிட்டத்தட்ட 43 தொகுதிகளில் வேலை செய்யவேண்டும். ஏற்கெனவே, வேலூரில் அ.தி.மு.க-வை வளர்த்த மூத்த நிர்வாகிகள் பலர் ஒதுங்கி நிற்கிறார்கள். என்னையும் ஒதுக்கிவிட்டு இவர்களால் இங்கு என்ன செய்ய முடியும்? என் மீது எந்த தவறும் இல்லை. நான் எதிர்க்கட்சியினருக்கு உதவியும் செய்யவில்லை. அதனால், எனக்கு எந்த பலனும் வரப்போவதில்லை. மரியாதையை மட்டும்தான் நான் எதிர்ப்பார்த்தேன். அதையே கொடுக்கவில்லையென்றால் நான் எப்படி இணைந்து செயல்பட முடியும்? இருந்தாலும், அப்புவுக்காக நானும் பிரசாரம் செய்திருக்கிறேன். அப்பு தோல்வியடைந்ததற்கு முதலில் வருத்தப்பட்டவனும் நான்தான். ‘கட்சித் தலைமை என் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறது; தி.மு.க-வுக்குச் செல்லப் போகிறேன்’ என்று மாற்றுக் கட்சியிலிருந்து வந்த ஒரு சில நிர்வாகிகள் வேண்டுமென்றே பரப்பி விடுகிறார்கள். என்னைப் பற்றி எங்கள் தலைமைக்குத் தெரியும்? எப்போதுமே தலைமைக்கு கட்டுப்பட்டவன் நான்’’ என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/33JczqQ
via
