முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்தாண்டு கந்தசஷ்டித் திருவிழா இன்று (25-ம் தேதி) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 1 மணிக்குத் திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் இரண்டாம் பிராகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்திற்கு வந்தடைந்தார். காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டித் திருவிழா தொடங்கியது.
9 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி - தெய்வானை அம்பிகைகளுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்குச் சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பிற கால பூஜைகள் நடந்து வருகின்றன. கந்தசஷ்டித் திருவிழா முதல் நாளான இன்று, சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு சுவாமி சிலைக்குப் பட்டு சாத்திக் கோயில் நடை சாத்தப்படுகிறது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
இரண்டாம் திருவிழா முதல் ஐந்தாம் நாள் திருவிழாவரை அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும் தொடங்குகிறது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறும். தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 3 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுவார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் சுவாமி- அம்பாள் கிரிப்பிராகார வீதியில் வலம் வந்து திருக்கோயிலை வந்தடைவர்.
6-ம்திருவிழாவான வரும் 30-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். பின்னர் யாகசாலையில் தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்வா. அங்கு மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமியும், அம்மனும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருள்வர். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும்.
மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்வார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். சூரசம்ஹாரத்திற்குப் பிறகு சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் சுவாமியும், அம்பாளும் கிரிப்பிராகாரம் வழியாகக் கோயில் வந்தடைவர். 7-ம் திருவிழாவான 31-ம் தேதி மாலை இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமானுக்கும், தெய்வானை அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நிகழும்.
திருவிழா நாள்களில் பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பக்திச் சொற்பொழிவு கோயில் கலையரங்கில் நடக்க இருக்கின்றன. திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருவதால், இந்தாண்டு கோயிலின் உட்பிராகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால், கோயில் வளாகத்தில் ஒரு லட்சம் சதுர அடியில் 18 இடங்களில் தற்காலிகத் தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் பயன்பாட்டிற்காக 237 கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளன. டிரோன் கேமிரா மூலமும் கண்காணிப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலில் பக்தர்கள் பாதுகாப்புடன் நீராடுவதற்கு வசதியாக கடலோரப் பாதுகாப்புப் படையினர் 15 பேர் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு சஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்பதால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் பிராகாரத்தில் அங்கப்பிரதட்சஷணம் செய்தும், காவடி தூக்கியும் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகிறார்கள். திரும்பும் திசையெங்கும் கந்த சஷ்டி கவசம், அரோகரா கோஷம் என கோயில் வளாகமே பக்திச் சிலிர்ப்போடு காட்சி அளிக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/7xA8lmO
via
