
ஆந்திர மாநில முதலமைச்சர் மகள் தனது திருமணத்தன்று, காதலரான தெலங்கானா மாநில முதலமைச்சரின் மகனோடு வெளியேறிவிடுகிறார். கோபமைடைந்த ஆந்திரா முதலமைச்சர் தன் நீண்ட கால நண்பரான தெலங்கானா முதலமைச்சரை எதிர்க்கிறார்.
அவரின் மகனை கொல்ல நினைக்கிறார். இந்த அசைன்மென்ட் நாயகன் ராம் பொத்தினேனிக்கு கொடுக்கப்படுகிறது. இதற்காக தெலங்கானா முதலமைச்சரின் மகள் ஶ்ரீலீலாவிடம் பழகுகிறார். அண்ணனின் நிச்சயதார்த்திற்கு வருமாறு அழைப்பு விடுக்க, வீட்டிற்கு வந்து, இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார் இவர், இரண்டு மாநில முதலமைச்சர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் போன்ற பல கேள்விகளுக்கான பதிலை பன்ச் வசனங்கள், சுமார் 200 பேரை வெட்டி, 50 பேரை ஈட்டியால் குத்தி, 60 பேரின் கை, கால்களை உடைத்து அவர்களை காற்றில் பறக்கவிட்டு ஒரு ரிவெஞ்ச் கதையாக நீள்கிறது இந்த 'ஸ்கந்தா'.
நாயகன் ராம் பொத்தினேனி ஆக்ஷன் ஹீரோவாக படம் முழுக்க ஆக்ரோஷமாக இருக்கிறார். இதில் இவருக்கு ஆறேழு இன்ட்ரோ காட்சிகள். சட்டை அணியும் ஷாட்டை கூட ஸ்லோ மோஷனில் காட்டியிருக்கிறார்கள். ஸ்டன்ட், டான்ஸ் இரண்டிலும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால், மாஸாக வசனம் பேசும் காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. இயக்குநர் பொயப்படி ஶ்ரீனுவின் நாயகர்கள் வழக்கத்தை விட கொஞ்சம் ஆக்டிவாகத்தான் இருப்பார்கள். எந்த வசனம் பேசினாலும் அதை பன்ச் டயலாக் மாதிரியே பேசுவார்கள். இதிலும் அதுதான் நடந்திருக்கிறது. எல்லோரும் சூனா பானா (பாலையா) ஆகிட முடியுமா? 'டீ வேணுமா?' என்று கேட்டால் கூட, 'டீ...... வேணுமா.....' என்று ஆகாயத்துக்குக் கேட்குமளவுக்கு அடி வயிற்றில் இருந்து கத்துகிறார்கள். இதில் அவருக்கு இரண்டு லுக் இருக்கிறது. மற்றொரு லுக்கில் ஹீரோவை போல இல்லாமல் வில்லனை போல் தெரிகிறார்.
நாயகியாக ஶ்ரீலீலா. நடிப்பதற்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரம் அல்ல இவருக்கு. கமர்ஷியல் தெலுங்கு படங்களில் பெரும்பாலும் ப்ளாஷ்பேக் கேட்பதோ அல்லது ப்ளாஷ்பேக் சொல்வதோதான் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் வேலை. இதிலும் அப்படிதான். சின்ன சின்ன ரியாக்ஷன்களிலும் பாடல்களிலும் இறங்கி சிக்ஸர் அடித்திருக்கிறார். படத்தில் பிரதான கதாபாத்திரங்கள் என்னவோ ஆறேழுதான். ஆனால், அடியாட்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் நிரம்பி வழிகிறார்கள். இடம் போதாமல் திரைக்கு வெளியே கூட நான்கைந்து பேர் இருந்திருப்பார்கள். ஷரத் லோகிதாஸ்வா, அஜய் பர்கர் ஆகியோருக்கு `ரே.... செம்பேஸ்தானுரா...' டைப் வசனங்கள்தான். அதை சரியாக செய்திருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக கெளதமி நடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு சொல்லும்படி ஒரு வசனம் கூட இல்லை.
சாதாரண கதையை எடுத்துக்கொண்டு, அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி பொடி, பருப்பு பொடி என எல்லாவற்றையும் பரபரவென மழைச்சாரல் மாதிரி தூவி, ஆங்காங்கே குடைமிளகாய், கேரட், பீன்ஸ் போன்றவற்றை நறுக்கிப்போட்டு, தேவைக்கேற்ப உப்பை போட்டு, அடுப்பை ஹை ஃப்ளேமில் வைத்து அப்படியொரு பிரட்டு, இப்படியொரு பிரட்டு என பிரட்டி போட்டு, தொட்டுக்கொள்ள டொமாட்டோ கெட்ச்சப் வைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு. 'நல்லாயிருந்தா சொல்லுங்க. இன்னொன்னு பண்ணித்தரேன்' என்பது போல சீக்வெலுக்கான லீடையும் கொடுத்து 'நன்றி மீண்டும் வருக !' என போர்டு போட்டு முடிக்கிறார்.
படத்தில் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கலாம். ஆனா, இதில் ஸ்டன்ட் காட்சிகளுக்குள் படத்தை வைத்திருக்கிறார்கள். 'அகண்டா'வின் இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு - ஸ்டன்ட் இயக்குநர் ஸ்டன் சிவா கூட்டணியில் உருவான ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் பயங்கரமாக பேசப்பட்டது. அகண்டா வைபிலிருந்து இன்னும் அவர்கள் வெளியே வரவில்லை போல. 'வழி நெடுக காட்டுமல்லி' என்பது போல படம் நெடுக ஆக்ஷன் தான். ஒருவர் திரையில் சும்மா நிற்கிறார் என்றால், அடுத்த ஷாட்டில் அவர் முகத்தில் பன்ச் விழுகிறது. 'வார்டன்னா அடிப்போம்' என்ற வடிவேலுவின் காமெடியை போல, ஃப்ரேமில் இருந்தாலே அடி விழுகிறது, ஈட்டி பாய்கிறது. ஜவுளி கடைகளில் பில்லிங் செக்ஷனில் படபடவென ரசீதில் சீல் குத்தப்பட்டு அதை பையோடு சேர்த்து ஸ்டாப்ளர் பின் அடிக்கப்பட்டு அத்தனை வேகமாக நகர்த்துவார்கள். அப்படி எதிர்க்க யார் வந்தாலும் குத்தி கிழித்துக்கொண்டு போகிறார்கள். அளவாக இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். பீட்சா, பர்கரில் 'Cheese Overloaded' என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அது போல, இதில் ஆக்ஷன் ஓவர்லோடடாக இருக்கிறது.
ஸ்ட்னட் காட்சிகளில் சந்தோஷ் டீடேகின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. அதே போல, செட்டில் நடக்கும் பாடல்களில் எல்லாம் லைட்டிங்கில் மெனக்கெட்டிருப்பது தெரிந்தது. நிறைய ஸ்லோ மோஷன் ஷாட்களை தவிர்த்திருக்கலாம். ஸ்டன்ட் காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருக்கலாம். ஒரு கட்டத்தில் 'நீங்க சண்டை போட்டுக்கிட்டு இருங்க. போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்திடுறேன்' என்று மைன்ட் வாய்ஸ் தோன்றுகிறது. தமனின் இசையில் 'சிட்டு சிட்டு' பாடல் கவனிக்க வைக்கிறது. 1000 வாலா பட்டாசு நான்கை ஒன்றாக வைத்து வெடிப்பது போல பின்னணி இசையால் ஸ்பீக்கர்கள் தீப்பிடிக்கின்றன.
கார சட்னி நன்றாக இருக்கும் என்பதால் அதை மட்டும் சாப்பிட முடியுமா ? இட்லியோ தோசையோ வேணும்தானே ! அதுபோல, மசாலா படங்களுக்கு புகழ்பெற்றவர் பொயப்படி ஶ்ரீனு. அதற்கென்று மசாலா மட்டும் இருந்தால் எப்படி ? எமோஷன் வொர்க்கானால்தான் ரிவெஞ்ச் வொர்க் அவுட்டாகும். இதில் உணர்வுகள் சரியாகக் கடத்தப்படாதது மைனஸ். கதாபாத்திரங்களின் ஆழம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. இந்த மாதிரியான படங்களில் லாஜிக் பற்றி யோசிக்க தேவையில்லைதான். ஆனால், அடிப்படை லாஜிக் கூட இல்லையென்றால் கேள்வி எழத்தானே செய்யும் ? பக்கா மாஸ் எண்டர்டெயினர் என்ற கேட்டகரியில் பல படங்கள் சமீபமாக கவனம் பெற, 'ஸ்கந்தா' - ஒரு ஆவரேஜான டோலிவுட் மசாலா படமாக மட்டும் பதிவாகி போட்டியில் கலந்துகொண்டதற்கான சான்றிதழைப் பெறுகிறதே தவிர பரிசுகள் கிடைக்கவில்லை.
from Movie Reviews
Umn news
