மதுரையை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ``கடந்தாண்டு ஜனவரி-1ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது துணை ஆட்சியர், டி.எஸ்.பி உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. வேலையில் சேர வேண்டும் என முயற்சி எடுத்து நானும் விண்ணப்பித்திருந்தேன். முதல்நிலைத் தேர்வு, எழுத்து தேர்வு, உள்ளிட்டவைகளில் பங்கேற்று நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் டிசம்பரில் வெளியிடப்பட்ட பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை.
தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் நான் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைநிலை கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தொலைநிலைக் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு வழங்குவது பொருத்தமாக இருக்காது.
தொலைநிலை கல்வியில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியில் பயில்கின்றனர். சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே இவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருத இயலாது. டி.என்.பி.எஸ்.சியின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20% இட ஒதுக்கீட்டை பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும்.
தமிழ் வழியில் பயின்றதற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். தொலைநிலை கல்வியில் அல்லாமல் கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பட்டியல் வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ``7 நபர்கள் மட்டுமே கல்லூரிக்கு சென்று முழுமையாக தமிழ் வழியில் பயின்றவர்கள். மற்றவர்கள் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக தொலைதூரக் கல்வியில் மூலம் தமிழ் வழியில் பயின்று உள்ளனர்” என கூறினர். மேலும் சட்டவிரோதமாக மதுரை காமராஜர் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்வழி பயின்றதற்கான சான்றிதழ் பெற்று பலர் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றுள்ளார் என தெரிவித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``500 நபர்களுக்கு போலியாக சான்று வழங்கப்பட்டது குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக 3 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், 500 பேருக்கு போலி சான்றிதழ் வழங்கிய விசாரணை தொடர்பான லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்புத்துறை காவல்துறையினர் அறிக்கையையும், துறை சார்ந்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூறியுள்ளனர்.
மேலும், ``மாநில மொழிகளில் தொழில் துறை படிப்புகளை மாணவர்கள் பயில்வது மூலம் அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணிபுரிய முடியும். ஆங்கிலத்தில் படிப்பதன் மூலமே உலகம் முழுவதும் சென்று வேலை செய்ய முடியும். எனவே மாநில மொழியில் தொழில்துறை சார்ந்த படிப்புகளை கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும்” என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/34m1rRh
via
