சென்னை டு தஞ்சை; 2 லாரிகள்! - அ.ம.மு.க-வினரின் ரூ.12 லட்சம் மதிப்பிலான குக்கர் பறிமுதல்

0

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளின் தற்போதைய ஆட்சி காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையின் ஆட்சி காலம் வரும் மே மாதம் 24-ம் தேதியுடன் நிறைவு பெரும் நிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரே கட்டமாகச் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.

குக்கர் எடுத்து வந்த வாகனம்

தி.மு.க, அ.தி.மு.க என்ற இரு பிரதான கட்சிகளும் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு செய்வதில் தீவிரமாக இருக்கும் சூழலில், அ.ம.மு.க சத்தமே இல்லாமல் அவர்களது சின்னமான குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காகக் காய் நகர்த்திக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

குக்கரில் வேலு. கார்த்திகேயனின் படம்

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகேயுள்ள சமத்துவபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் கும்மிடிப்பூண்டியிலிருந்து தஞ்சை நோக்கி இரண்டு லாரிகள் வந்துள்ளது. ஒரு லாரியை அதிகாரிகள் நிறுத்திய போது, சார், "இதுல ஒண்ணும் இல்ல. வெறும் அட்டைப்பெட்டிதான் இருக்குது" எனக் கூறி விட்டு வேகமாகக் கிளம்பிச் சென்றுள்ளது.

பரிசுப்பொருட்கள் ஏற்றி வந்த வாகனம்

சற்று நேரம் கழித்து பின்னே வந்த மற்றொரு லாரியை போலீஸார் மறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் குக்கர் இருப்பதும் அதில் தஞ்சை மாவட்ட அ.ம.மு.க-வினர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா என ஜெயலலிதா படம்,டி.டி.வி.தினகரன் படம், மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு. கார்த்திகேயனின் படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

இதை பார்த்ததும் தேர்தல் பறக்கும் படையினர் திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்குத் தொடர்பு கொண்டு முதலில் சென்ற லாரியை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் பிடித்து அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இரண்டு லாரிகளிலும் 12 லட்சம் மதிப்பிலான 3 லிட்டர் குக்கர்கள் இருந்தது தெரிய வந்தது. இதில் 220 பெட்டிகளில் 3,520 எண்ணிக்கையிலான 3 லிட்டர் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அ.ம.மு.க-வின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன்

இதுகுறித்து அ.ம.மு.க-வின் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயனிடம் பேசினோம். ”அம்மாவின் ஒவ்வொரு பிறந்த நாள் விழாவிற்கு நாங்கள் நலத்திட்ட உதவிகள் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் பரிசுப் பொருட்களைக் கொடுக்க திட்டமிட்டுத் தொடர்ந்து கொடுத்தும் வருகிறோம். இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவித்துவிட்டதால். இன்று காலை லாரியை பிடித்துவிட்டார்கள். அவ்வளவு தான். எங்களிடம் சரியான ஆவணங்கள் இருக்கிறது. தேர்தலுக்காகப் பரிசுப்பொருட்கள் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சின்னம்மா மற்றும் தினகரனின் முகம் போதும். நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3aWnQZh
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*