திருவட்டாறு கோயிலில் 36 ஆண்டுக்கு முன் கொள்ளைபோன 4.5 கிலோ தங்கம்! அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பு

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்றது திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களில் 76-வது கோயில் திருவட்டாறு. 22 அடி நீளத்தில் அனந்த சயனமாக மேற்கு நோக்கி பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழைமையானது இந்தக் கோயில். முன்பு திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபபுரத்தை தலைமையிடமாகக்கொண்டு ஆண்ட சமயத்தில் தங்கள் குல தெய்வமாக இந்தக் கோயில் மூலவரை வழிபட்டனர்.

கடுகு சர்க்கரை யோகம் என்ற மூலிகையால் அமைக்கப்பட்டுள்ள மூலவருக்கு திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக் காலத்தில் தங்கக் கவசம், மாலை என முழுவதும் தங்கத்தால் அலங்கரித்தனர். பின்னர், திருவிதாங்கூர் மன்னர்கள் தங்கள் தலைமை இடத்தை திருவனந்தபுரத்துக்கு மாற்றிய பிறகு திருவட்டாறு கோயிலின் வடிவில் பத்மநாபசுவாமி கோயிலை அமைத்தனர். திருவட்டாறு கோயிலில் கடந்த 1974 ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை சுமார் பத்து ஆண்டுக்காலமாக அர்ச்சகர்களின் உதவியுடன் சுவாமியின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. சுமார் 11.500 கிலோ கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என அந்தச் சமயத்தில் கூறப்பட்டது.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்

தங்க அங்கியைக் கொள்ளையடித்துவிட்டு அந்தப் பகுதியில் தகரத்தில் மஞ்சள் பெயின்ட் பூசி சுவாமி மீது வைத்திருக்கிறார்கள். இந்தக் கொள்ளை தொடர்பாக புகார் எழுந்ததும், 1992-ம் ஆண்டு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து 1993-ம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. கோயில் பூசாரியாக இருந்த கிருஷ்ணன் நம்பூதிரி முதலில் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கு சம்பந்தமாக 127 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு 34 பேர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சுவாமியின் நகைகளைக் கொள்ளையடித்தவர்கள் அதை விற்பனை செய்த நகைப் பட்டறைகளில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தியது. அதில் 4.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்றுவந்தது. அதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட நாலரை கிலோ தங்கம் ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேர் வயது முதிர்வு காரணமாகவும், தற்கொலை செய்துகொண்டும் மரணம் அடைந்தனர். 27 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

கோர்ட்டிலிருந்து பெறப்பட்ட தங்கம் எடுத்துச் செல்லப்பட்ட பெட்டி

அதில், குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின்னரும் மீட்கப்பட்ட தங்கம் ஆவணக் காப்பகத்திலேயே இருந்தது. இந்தநிலையில், ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்தநிலையில், 4.5 கிலோ தங்க நகைகளை நாகர்கோவில் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டியான் இன்று அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவல் குழு தலைவர் சிவகுற்றாலம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் அந்த நகைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலிலுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ud6KxQ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*