புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியை திட்டமிட்டு கலைத்து பா.ஜ.க ஜனநாயகப் படுகொலை செய்ததாக, மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார். அவரது உரையில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முதல்வர் நாராயணசாமி வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார். இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியை கவிழ்த்து அநாகரீக அரசியலை அரங்கேற்றி வருகின்றனர். பா.ஜ.கவின் அருவெறுப்பான, அராஜகமான, கேவலமான அரசியலை நாராயணசாமி எடுத்துரைத்தார்.
தேசத்தை பிடித்திருக்கும் பெரும் தீங்கான பா.ஜ.க, கொரோனாவை விட கொடிய நோய். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பை செய்துள்ளனர். ஒரு வகையில் காங்கிரஸுக்கு பா.ஜ.க நல்லதையே செய்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் காங்கிரஸ்- தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். புதுவை மக்களுக்கு நாராயணசாமி என்ன துரோகம் செய்துவிட்டார்? பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவந்தது துரோகமா? மக்களால் தேர்வு செய்த அரசை கலைக்க இவர்கள் யார்?
பா.ஜ.க-வின் அடாவடி அரசியலுக்கு என்.ஆர் காங்கிரஸும், அ.தி.மு.கவும் துணை நின்றுள்ளன. அவர்களையும், ராஜினாமா செய்தவர்களையும், ஓட்டு கேட்க வரும்போது வீதிக்குள் நுழையவிடாமல் மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவர்கள் காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக்கும் செய்த துரோகத்தை விட, புதுவை மக்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளனர். பா.ஜ.க விரித்த வலையில் 5, 6 பேர் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் எதிர்காலமே இல்லாமல் செய்யவேண்டும். இந்திய நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ.க சிதைத்து, சாதி வெறியை தூண்டுகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது.
எதை வேண்டுமானாலும் செய்வோம், எங்களை யார் என்ன செய்ய முடியும் என்ற அநாகரீமாகன, அறுவெறுப்பான செயலை செய்யவும் தயாராக உள்ளனர். புதுவை அரசை கலைத்திருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும் சிக்னல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க அரசு அமைந்தால் அதனையும் கலைக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கும் ஒத்திகை என்றுதான் பா.ஜ.க-வின் செயல்களை பார்க்கிறோம்.
ஆனால் தமிழகத்தில் பா.ஜ.கவின் கனவு பலிக்காது. சிலர் வேண்டுமானால் பா.ஜ.க-வுக்கு துணை செல்வார்கள். தி.மு.க தலைமையில், மதச்சார்பற்ற கூட்டணி கைகோத்து நிற்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க-வை ஓட, ஓட விரட்டி அடிப்போம்.
Also Read: `நாராயணசாமியின் ஒன்றேகால் மணி நேர உரை; ஆட்சிக் கவிழ்ப்பு!’ புதுச்சேரி சட்டசபையில் என்ன நடந்தது?
தி.மு.க தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறும். இது கூட்டணி அரசியல் அல்ல. சமூக நீதியை, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும், இந்திய நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் புதுவையில் நடைபெறும் போரட்டங்களில் பங்கேற்று வருகிறது வி.சி.க. நாராயணசாமி ஆட்சியை பறிகொடுத்திருக்கலாம். ஆனால் மிகப்பெரும் வெற்றியை வரும் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி பெறும். தமிழகம், புதுவையில் பா.ஜனதாவை வீழ்த்தி அவர்களின் முகத்தில் கரி பூசுவோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3bCGSTx
via
