கன்னியாகுமரி:`மோடி தமிழகம் வரும்போதெல்லாம் பாஜக-வின் ஓட்டு குறைகிறது' - ஸ்டாலின்!

0

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்தார். அப்போது கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டசபை தொகுதி தி.மு.க வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி சட்டசபை தி.மு.க வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், ``வரும் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். நாடாளுமன்ற தேர்தலில் விஜய் வசந்துக்கு கைச்சின்னத்திலும், நாகர்கோவில் சட்டசபை தேர்தலில் சுரேஷ்ராஜனுக்கும், கன்னியாகுமரி தொகுதியில் ஆஸ்டினுக்கும் உதயசூரியன் சின்னத்திலும் வாக்களியுங்கள். கருணாநிதி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சுரேஷ்ராஜன். அப்போது அவர் உங்களுக்கு செய்திருக்கும் வளர்ச்சிப்பணிகளை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள். ஆஸ்டின் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சட்டசபையில் அவர் எழுந்தாலே ஆளும்கட்சியினர் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர் ஆணித்தரமாக, உறுதியாக எடுத்து வைக்கும் வாதங்களையும், அவர் எதிர்கட்சியில் இருந்து ஆற்றிய பணிகளையும் மறக்க முடியாது.

ஸ்டாலின் பிரசாரம்

சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டத்துக்கு வந்திருக்கிறார். ஊர்ந்து சென்றவர் ஊர் ஊராக சென்றுகொண்டிருக்கிறார். நான் சொன்னதற்கு, ஊர்ந்து செல்ல பாம்பா பல்லியா எனக் கேட்கிறார். பாம்புக்கடியின் விஷத்தை விட துரோகத்துக்கு விஷம் அதிகமாக இருக்கும். குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரைக்கூட தேர்ந்தெடுக்காததால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை என்கிறார். ஓட்டுப்போடவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்த முதலமைச்சரை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுக்கவில்லை அதனால உங்களுக்கு திட்டங்கள் வரல என வாய்கூசாமல் சொல்கிறார். அவரை தேர்ந்தெடுக்கலாமா. அவரது தொகுதியான எடப்பாடியிலேயே அவர் ஒன்றும் செய்யவில்லை. அவரை முதலமைச்சராக அமர வைக்கக்கூடாது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``இங்கு டெல்லி பிரதிநிதின்னு ஒருத்தர் இருக்கிறார், தளவாய்சுந்தரம். அவர் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தொழில் ரீதியான பார்ட்னராக இருக்கிறார். அவருக்கு குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. அவர் குமரி மாவட்டத்துக்கு எதாவது செய்திருக்கிறாரா. தளவாய் சுந்தரம் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர், சசிகலாவால் டெல்லி பிரதிநிதியாக்கப்பட்டவர். சசிகலா காலை வாரிவிட்டவர் இப்போது எடப்பாடி கூட இருக்கிறார். தேர்தலுக்கு பிறகு எடப்பாடி காலை வாரிவிட்டு, பா.ஜ.க-வில் போய் சேர்ந்துவிடுவார். அவரது உதவியாளர் கிருஷ்ண குமார் வீடியோ நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். அவரது வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிச்சா இல்லியா.

Also Read: ``பொம்மைகள் தயாரிக்கும் மையமாக தமிழகம் இருக்கும்'' - திருப்பூரில் பிரதமர் மோடி உரை!

நான் தக்கலைக்கு வந்த போது உறுதியாக துறைமுகத்தை அமைக்க மாட்டோம் என்றேன். அதன்பிறகு வந்த முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் சரக்குப்பெட்டக மாற்றுமுனையம் வராது என்றார். நான் ஆதாரத்துடன்தான் வந்திருக்கிறேன். 20.02.2021 அன்னைக்கு அதிகாரபூர்வமான மத்திய துறைமுகத்தின் டெண்டர் விளம்பரம் வந்திருக்கு. தெளிவாக அந்த விளம்பரத்தில் இருக்கிறது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் விளம்பரம் வந்திருக்கிறது. இதுகூட தெரியாத முதல்வர் நமக்க்கு தேவையா. இப்ப வராதுன்னு சொல்லுவாங்க, ஆனா தேர்தலுக்கு பிறகு கொண்டுவருவார். அடுத்து நிச்சயம் நாம் ஆட்சிக்கு வருவோம், துறைமுகத்துக்கு அனுமதி தரமாட்டோம்.

ஆரல்வாய்மொழியில் ஸ்டாலின் பிரசாரம்

தமிழகத்துக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வருகிறாரோ அப்போதெல்லாம் பா.ஜ.க-வுக்கு வாக்கு குறைகிறது. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றார்கள். எதிர்கட்சியாக இருக்கும்போது ஆண்மைமிக்க பிரதமர் இல்லை அதனால்தான் அண்டைநாடு சீண்டி பார்ப்பதாக மோடி நமது மன்மோகன் சிங்கை பார்த்து சொன்னார். 2014-ல் மோடி பிரதமராக வந்து ஏழு வருஷமாக ஆகிவிட்டது. இந்திய இலங்கை மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். ஆனால், இன்னும் மீனவர்கள் மீதான தாக்குதல் நடக்கத்தான் செய்கிறது. தமிழகத்தில் நம் ஆட்சி அமைந்தபிறகு மீனவர்கள் நலன் காக்க அனைத்து நடவடிக்கையும் எடுப்போம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/39oCiI7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*