திருவையாறு தொகுதி தி.மு.க வேட்பாளர் யார் ? புதியவருக்கு வாய்ப்பா? - தஞ்சை தி.மு.க-வில் சலசலப்பு

0

தஞ்சை மாவட்டம், திருவையாறு தொகுதியில் தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் யூகமும் உச்சநிலையில் உள்ளது. இங்கு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள துரை.சந்திரசேகருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா, அதற்கு எந்தளவிற்கு சாத்தியம் உள்ளது என தி.மு.க வட்டாரத்திலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பல்வேறு யூகங்களும் விவாதங்களும் நிலவுகின்றன.

திருவையாறு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் 6 முறை போட்டியிட்ட்டு நான்கு முறை வெற்றிப்பெற்றவர் துரை.சந்திரசேகர். தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வான இவர், தஞ்சை மத்திய மாவட்ட தி.மு,க பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறார். இத்தொகுதி தி.மு.க-வில் இவர்தான் மிகவும் சீனியர். எல்லாவற்றுக்கும் மேலாக, நடிகர் சிவாஜி கணேசனை தோற்கடித்தவர் என்பது இவருக்கு கூடுதல் இமேஜ்.

1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், நடிகர் திகலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்து இத்தொகுதியில் போட்டீயிட்ட போது, தி.மு.க சார்பில் யாரை நிறுத்தலாம் என கட்சி தலைமை பரிசீலனை செய்து, துரை.சந்திரசேகரை களத்தில் இறக்கியது. நடிகர் திலகத்தை எதிர்த்து நின்று, வெற்றிப் பெறுவது என்பது சாத்தியமே இல்லை என்றுதான் அப்போது பலரும் நினைத்தார்கள். கட்சித் தலைமையும் கூட அப்படிதான் கருதியது. காரணம், அப்போது துரை.சந்திரசேகர் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாத இளைஞர். ஆனால் அந்த தேர்தலில் துரை.சந்திரசேகர் வெற்றிப்பெற்று, தமிழ்நாட்டளவில் கவனம் பெற்றார். 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகர் திலகத்தை தோற்கடித்தார்.

துரை.சந்திரசேகர்

அதற்கு அடுத்து நடந்த 1991-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் துரை.சந்திரசேகர் களமிறக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அரசியல் அலையில், துரை.சந்திரசேகர் தோற்றுப்போனார். அதன்பிறகு 1996,2001, 2006, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க சார்பில் துரை,சந்திரசேகர் களமிறக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு தேர்தலைத் தவிர மற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

2001 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக களம் இறங்கிய அய்யாறு வாண்டையாரிடம் துரை.சந்திரசேகர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது. 2011 தேர்தலில் செல்லக்கண்ணு என அழைக்கப்படும் அரங்கநாதனுக்கு தி.மு.க வாய்ப்பளித்தது. ஆனால் அவர் அ.தி.மு.க வேட்பாளர் ரத்னாசாமியிடம் தோற்றுப்போனார். 2016-ல் மீண்டும் களமிறக்கப்பட்ட துரை.சந்திரசேகர் வெற்றிப்பெற்று தற்போது சிட்டிங் எம்,எல்.ஏ-வாக உள்ளார்.

வரகூர் கார்த்திகேயன்

இந்நிலையில்தான் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இங்கு போட்டியிட, தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் துரை.சந்திரசேகர். ஆனால் இவருக்கு மீண்டும் சீட் கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள், இப்பகுதி தி.மு.க-வினர். தொகுதிக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்தையும் கொண்டு வரவில்லை. குறிப்பாக திருவையாறு நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வுக்காண எந்த ஒரு முயற்சியையும் இவர் மேற்கொள்ளவில்லை என இப்பகுதி மக்களிடம் மட்டுமல்லாமல், தி,மு.க-வினரிடமும் ஆதங்கம் நிலவுகிறது.

இங்கு உள்கட்சி பூசலும் அதிகமாக உள்ளது. இதெல்லாம் ஒருபுறமிருக்க, புதிதாக யாரையாவது களமிறக்கினால்தான் தி.மு.க வெற்றி பெற முடியுமென கட்சித்தலைமைக்கு ஐபேக் அறிவுறுத்தியுள்ளதாக இப்பகுதி தி.மு.க.வினர் தெரிவிக்கிறார்கள். இங்கு போட்டியிட சீட் கேட்டு தற்போதைய சிட்டிங் எம்,எல்.ஏ துரை.சந்திரசேகர், வரகூர் கார்த்திகேயன், சித்திரகுடி திருமுருகன், செல்லக்கண்ணு, கடம்பங்குடி சீனிவாசன், பன்னீர்செல்வம், ஒரத்தூர் மனோகரன், கூனம்பட்டி பாஸ்கர், சதீஷ், சிவா உள்பட 18 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்கள். கடந்த 5-ம் தேதி நேர்காணல் நடைபெற்றுள்ளது.

சித்திரக்குடி திருமுருகன்

இவர்களில் யாருக்கு வாய்ப்பு அதிகம் ? கட்சியின் உள்விவகாரங்க்ளை நன்கு அறிந்தவர்களிடம் பேசினோம்.`` இந்த 18 பேரில் சிட்டிங் எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரை தவிர மற்றவர்கள் அதிகம் வசதி வாய்ப்பு இல்லாதவர்கள். தேர்தலில் செலவு செய்வது சிரமம். ஆனால் மற்ற 17 பேரும், நேர்காணலின் போது ஒருமித்த குரலில் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டு வந்துள்ளார்கள். அதாவது துரை.சந்திரசேகருக்கு 6 முறை வாய்ப்பு கொடுத்துவிட்டீர்கள். இந்த முறை கண்டிப்பாக புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள். தனக்கு தராவிட்டாலும் பரவாயில்லை என பலரும் இதையே தெரிவித்துள்ளார்கள். இவர்களில் சித்திரக்குடி திருமுருகன் பெயரும், வரகூர் கார்த்திகேயன் பெயரும் தீவிர பரிசீலனையில் இருக்கிறது.

சித்திரகுடி திருமுருகன், பாரம்பரியமான தி.மு.க குடும்பத்தை சேர்ந்தவர். தி,மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக பதவி வகித்தவர். கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டுக்கட்டுமான பொருள்கள் விற்பனை தொழில் செய்து வருகிறார். நேர்காணலின்போது, தனக்கு சிட் கொடுத்தால் 3சி வரை செலவு செய்வதாக உறுதி அளித்திருக்கிறார் என்கின்றனர்.

வரகூர் கார்த்திகேயன் ஓரளவுக்கு வசதி படைத்த விவசாயி. கட்சியின் ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி, ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது தந்தை மற்றும் சகோதரரும் முன்பு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார்கள் தொகுதி முழுக்க கட்சிக்காரர்களிடம் வரகூர் கார்த்திகேயனுக்கு நல்ல அறிமுகம் உள்ளது. நேர்காணலின் போது இவரும் அதே தொகையை செலவு செய்வதாக தெரிவித்திருக்கிறாராம்.

Also Read: `அண்ணனுக்குத்தான் சீட்; இல்ல அஞ்சுகத்துக்குத்தான் சீட்!’ - குழம்பி நிற்கும் தஞ்சை தி.மு.க-வினர்

இவர்கள் இருவருக்கும் இதெல்லாம் பிளஸ்ஸாக இருந்தாலும் கூட, தற்போதைய சிட்டிங் எம்,எல்.ஏ-வுக்கு கட்சித்தலைமையில் உள்ள வி.வி.ஐ.பி-களின் ஆசிர்வாதம் அதிகமாக உள்ளது. குறிப்பாக டி.ஆர்.பாலு, கேன்.நேரு ஆகியோர் இவருக்கு சீட் வாங்கி கொடுப்பதில் மிகவும் மும்மூரமாக உள்ளார்கள். துரை.சந்திரசேகர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். ஏற்கனவே இவருக்கு பல முறை தேர்தலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. அ.தி.மு.க செல்வாக்குப் பெற்ற இத்தொகுதியில் துரை.சந்திரசேகரால்தான் சமாளிக்க முடியும். இவர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளராகவும் உள்ளார். ஏற்கனவே இவருக்கு தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமும் உள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை, அரசியலில் எதுவும் நடக்கலாம்.

இத்தொகுதியில் போட்டியிடப் போவது ஜூனியரா ? சீனியரா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.’’என்கிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vgnmFF
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*