"வெற்றியின் விடிவெள்ளி கோவை தெற்கில் முளைக்கிறது. மாநிலம் முழுவதும் நம்மவர்களின் வெற்றிக்கு அது கட்டியம் கூறுகிறது. இருண்ட வானம் ஒளிக்குத் தயாராகிறது. தமிழ் மக்களே, நீங்களும் தயார்தானே..?" மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் களம் இறங்குவதற்கான அறிவிப்பு வெளியானவுடன் அவர் போட்ட ட்வீட் இது.
Also Read: அ.தி.மு.க., தி.மு.க-வை அசைத்துப் பார்க்குமா கமல் கூட்டணி?
ஆலந்தூரில் போட்டியிடுகிறார், பரமக்குடியில் போட்டியிடுவார் என்றெல்லாம் வெளியான தகவல்களுக்கு தடை போட்டுவிட்டு, கோவை தெற்கு தொகுதியை டிக் அடித்திருக்கிறார் கமல்ஹாசன். இதன் பின்னணியில், மக்கள் நீதி மய்யத்தின் கொங்கு சென்டிமென்ட்டும் இருக்கிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கிய ஓராண்டிலேயே மக்கள் நீதி மய்யம், 2019-ம் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியது. அப்போது கமல்ஹாசன் போட்டியிடவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் தமிழகத்தின் நகர்பகுதிகளில், அதிலும் முக்கியமாக கொங்கு மண்டலத்தில் டீசன்டான வாக்குகளை பெற்றது மய்யம்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக, கோவை நாடாளுமன்ற தொகுதியில் டாக்டர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார். கொங்கு மண்டலத்தில் பவர்புல்லாக இருந்த அ.தி.மு.க அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
முதல்வர் தொடங்கி அமைச்சர்களின் தொகுதிகளிலும் அ.தி.மு.க-வை விட தி.மு.க கூட்டணியே லீடிங்கில் இருந்தது. அதற்கு மக்கள் நீதி மய்யத்தின் வருகையும் ஒரு காரணம். கொங்கு மண்டலம் முழுவதுமே மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்தை பிடித்து கவனம் ஈர்த்தது. ஆனால், மக்கள் நீதி மய்யம் அதற்கு முன்பிருந்தே கொங்கு மண்டலத்தை குறிவைத்துவிட்டது.
2019 நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில்தான். 2016 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுக்கும், தி.மு.க-வுக்கும் 1.1 சதவிகிதம் வாக்குகள் தான் வித்தியாசம்.
அந்த வித்தியாசத்தை உருவாக்கியதில் கொங்கு மண்டலத்தின் பங்கு அதிகம். இங்கு பெரும்பாலான தொகுதிகளை அ.தி.மு.க தான் கைப்பற்றியது. அ.தி.மு.க மீண்டும் ஆட்சியை பிடிக்க அது முக்கிய காரணமாகவும் இருந்தது. 2011 சட்டமன்ற தேர்தலிலும் கூட அ.தி.மு.க-வுக்கு கொங்கு மண்டலம் பக்க பலமாக இருந்தது. அந்தக் கோட்டையை தங்கள் வசப்படுத்துவதுதான் மக்கள் நீதி மய்யத்தின் திட்டம்.
கமல்ஹாசன் தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்தற்கு சில காரணங்கள் உள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளை பெற்றது இங்கு தான் (27,000 வாக்குகள்).
கோவை மாவட்டத்தின் தலைமை செயலகம் என்றால் அது கோவை தெற்கு தொகுதிதான். கோவையின் அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமையகங்கள், ரயில்நிலையம், காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்கள், வணிக பகுதியான டவுன்ஹால் அமைந்திருப்பது தெற்கு தொகுதியில்தான். இதனால், கோவையின் மற்ற தொகுதிகளுடன் ஒப்பிடும்போது இங்கு வாக்காளர்களும் குறைவுதான். மொத்தமே 2,52, 389 வாக்காளர்கள் தான்.
குறிப்பிட்ட சாதியினர் மட்டும் அதிகம் இல்லாமல் வட இந்தியர்கள், சிறுபான்மை இன மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கும் பகுதி. முக்கியமாக, படித்தவர்கள் அதிகம் இருக்கும் பகுதி. மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் படித்தவர்களின் வாக்குகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே மக்கள் நீதி மய்யத்துக்கு கணிசமாக கிடைத்தது என்கின்றனர்.
அந்த வாக்குகளை மீண்டும் அறுவடை செய்வதற்கே தெற்கு தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். மேலும், மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தங்கவேலுவின் சொந்த ஊர் கோவைதான். அவருக்கு இந்தத் தொகுதியில் சற்று செல்வாக்கும் இருக்கிறது. மேலும், கமல் சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்திருந்தபோது மாஸான கூட்டம் கூடியிருந்தது.
இந்தக் காரணங்களால், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அதிக விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனால், தீவிரமாக ஆலோசித்து, கமல் தனது முதல் தேர்தலில் கோவையில் களமிறங்க உள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் பி.ஜே.பி, காங்கிரஸ் போட்டியிட உள்ளன. பி.ஜே.பி-யில், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் களம் காண அதிக வாய்ப்புள்ளது. அதனால், கமல் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, மக்கள் நீதி மய்யம் அங்கு பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. கமலின் வருகை தெற்கு தொகுதியில் மட்டுமல்லாமல், அருகில் உள்ள தொகுதிகளுக்கும் அதன் தாக்கம் இருக்கும் என்று மய்யத்தினர் நம்புகின்றனர்.
அதனால்தான், அந்தக் கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், புதுச்சேரி மாநில துணை தலைவர் தங்கவேல் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மக்கள் நீதி மய்யத்தின் கொங்கு பிளான் கைக்கொடுக்குமா? என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3qEKUQJ
via
