`இந்த மாவட்டங்களிலெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கும்!' - இந்த ஆண்டு கோடை குறித்து புவியரசன்

0

கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. மதியம் 11 மணியைத் தொட்டாலே `ஷப்பா...’ என எல்லோரும் நிழல் தேடி ஓடுகின்றனர். ஆரம்பமே இப்படியென்றால் மே மாதமெல்லாம் எப்படி இருக்குமோ என்பதுதான் எல்லோரது கேள்வியும்.

இந்தக் கோடையில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் புவியரசனிடம் பேசினோம், ``தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதத்துக்கான வெப்பநிலை கடந்த ஆண்டு சராசரி வெப்பநிலையைவிட சற்றுக் குறைவாகத்தான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. அதற்குக் காரணம், நமக்கு கிழக்கிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கிறது. கிழக்கிலிருந்து காற்று வீசும்போது, மதிய நேரங்களில் கடல் காற்றானது உள் மாவட்டங்கள் வரை வீசக்கூடும். அப்படியான சூழலில், வெப்பநிலை அதிகமாக உணரப்படுவதற்கு வாய்ப்பில்லை. கடல் காற்று இல்லாத சமயங்களில் மட்டும் வெப்ப நிலை அதிகமாகும். அதேபோல வெப்பநிலை குறைவாக இருக்கும் எனச் சொல்வது மூன்று மாதங்களுக்குமான சராசரி அளவுதான். மற்றபடி அவ்வப்போது ஓரிரு நாள்களில் வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

வெயில்

ஏப்ரல் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஆரம்பித்து தென்மேற்குப் பருவமழை தொடங்கும் வரையிலான நாள்களில் ஓரிரு நாள்களில் மட்டும் வெப்பநிலை அதிகமாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சில உள் மாவட்டங்களிலும் அதற்கான வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டைவிட சராசரி வெப்பநிலை குறைவாக இருக்கும் என்றாலும்கூட கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

அதாவது, வெப்பநிலை சராசரியாக இருந்தாலும் கூட, அங்கு வெப்பம் அதிகமாக உணரப்படும். அதற்குக் காரணம் கடலோரப் பகுதிகளில் காற்றில் அதிகமான ஈரப்பதம் இருக்கும். காற்றில் ஈரப்பதம் இருந்தால் வெப்பத்தின் தாக்கம் குறைவாகத்தானே இருக்கும் எனச் சிலர் நினைக்கலாம். ஆனால், அது அப்படி அல்ல. மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸ். சுற்றுப்புற வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது நம் உடல் வெப்பமாக ஆரம்பிக்கும். அப்போது உடல் வெப்பத்தைக் குறைப்பதற்காக நம் உடலில் உள்ள தண்ணீரை வியர்வையாக வெளியேற்றும். அந்த வியர்வை விரைவில் ஆவியாக வெளியேறுவதன் மூலம் உடல் வெப்பநிலை சரியான அளவில் தக்கவைக்கப்படும்.

புவியரசன்

சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக இருக்கும்போது காற்றின் ஈரப்பதமும் அதிகமாக இருந்தால், வியர்வை ஆவியாவது காற்றின் ஈரப்பதத்தால் தடுக்கப்படும். நம் வியர்வை எளிதில் ஆவியாகாதபட்சத்தில் உடலின் சூடு இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் வெப்பத்தை அதிகமாக உணர்வோம். அதுவே சுற்றுப்புற வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் இருக்கும்போது காற்றின் ஈரப்பதம் எவ்வளவு இருந்தாலும் பிரச்னை இல்லை. கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால்தான், அங்கு வெப்பநிலை மிகப்பெரிய அளவில் பதிவாகதபட்சத்திலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்” என்றவரிடம் அக்னி நட்சத்திரம் என்றால் என்ன இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எத்தனை நாள்களுக்கு இருக்கும்? எனக் கேட்டோம்...

``அக்னி நட்சத்திரம் என்று தனியாக ஒரு நட்சத்திரம் கிடையாது. இந்திய வானிலை ஆய்வு மையமும் எங்கேயுமே அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கிடையாது. மார்ச் 23-ம் தேதியே சூரியன் தென் கோளத்திலிருந்து வட கோளத்துக்கு வரத்தொடங்கிவிடும். அப்படி சூரியன் வட கோளத்துக்கு வரும்போது ஏப்ரல் மாதம் இரண்டு மூன்றாவது வாரத்திலோ, மே மாதம் முதல் வாரத்திலோ சூரியனின் கதிர்கள் தமிழகப் பகுதிகளில் செங்குத்தாக விழும். அப்போது வெப்ப நிலை அதிகமாகும். அதைத்தான் அக்னி நட்சத்திரம் என்று மக்கள் சொல்கின்றனர்.

வெயில்

அப்படியான நாள்களில் காலை 11 மணியிலிருந்து மதியம் 3 மணி வரைக்கும் திறந்த வெளியில் வெயில்படும் இடத்தில் இருந்தால் உடல் சோர்வு அதிகமாக இருக்கும். சமயங்களில் ஒரு சிலர் வெப்பம் தாங்காமல் `சன் ஸ்டோக்’ ஏற்பட்டு உயிரிழப்பதற்கான வாய்ப்புகள்கூட இருக்கிறது. வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் 43 டிகிரி செல்சியஸ் என உயரும் காலகட்டங்களில் மக்கள் 11 மணியிலிருந்து 3 மணி வரைக்குக்கும் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் பருக வேண்டும். தண்ணீருடன் உப்பு எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3w6UGPJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*