கரூர்: `இந்த ஒவ்வொரு மரமும் எங்களுக்கு ஆசான்!' - குறுங்காடு அமைத்து அசத்தும் தலைமை ஆசிரியர்

0

``நான் இந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர். இந்தப் பள்ளியில் படிக்கும் 220 மாணவர்களுக்கும் நான் எவ்வளவோ விஷயங்களைப் போதிக்கிறேன். ஆனா, அதில் கிடைக்காத திருப்தி, நாங்க உருவாக்கியிருக்கிற இந்தக் குறுங்காட்டால கிடைச்சுருக்கு. இதுல உள்ள ஒவ்வொரு மரமும் எனக்கும் மாணவர்களுக்கும் ஆசானா இருந்து எவ்வளவோ படிப்பினைகளைக் கொடுத்திட்டு இருக்கு. `மரங்கள் இல்லைன்னா, மழை இல்லை' என்பதை மாணவர்களுக்கு வெறும் வார்த்தைகளில் கற்பிக்காம, இந்தக் குறுங்காட்டில் உள்ள ஒவ்வொரு மரத்தைக் கொண்டும் மாணவர்களுக்கு புரிய வைக்கிறேன்" என்று உற்சாகமாகப் பேசுகிறார் பொன்னுசாமி.

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள தே.இடையப் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார் பொன்னுசாமி. மிகவும் வறட்சியான இந்தக் கிராமம் மற்றும் அதைச்சுற்றியுள்ள 32 குக்கிராமங்களை உள்ளடக்கி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அரணாக அமைத்திருக்கிறது. வெளியில் இருந்து இந்தக் கிராமத்துக்கு வந்துபோக மூன்றே மூன்று வழிகள்தான் உள்ளன. மிகவும் வறட்சியான பகுதி இது.

பொன்னுசாமி உருவாக்கிய குறுங்காடு

அப்படிப்பட்ட இடத்தில்தான், 10 சென்ட் இடத்தில், 20 வகையான 70 மரங்களைக் கொண்ட குறுங்காட்டை வளர்த்து, பள்ளியைச் சுற்றி பச்சையத்தை உருவாக்கியிருக்கிறார். பூச்சிகள், புழுக்கள், பறவைகள், சிலந்தி என்று அந்தக் குறுங்காட்டில் பல்லுயிர் பெருக்கமும் உருவாக ஆரம்பித்திருக்கிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உருவாக்கிய வானகம், இந்தக் கிராமத்துக்கு அருகில்தான் உள்ளது.

குறுங்காட்டில் இருக்கும் மரங்களோடு அளவளாவிக் கொண்டிருந்த பொன்னுசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

``நான் ஆசிரியராக இருந்தாலும், என் குடும்பத்தின் பூர்வீகத் தொழில் விவசாயம்தான். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மீதுள்ள ஈடுபாட்டால 2011-ம் ஆண்டிலிருந்து வானகத்துக்குப் போக ஆரம்பிச்சேன். அப்போ, கடவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரா பணியாற்றினேன். மாணவர்களையும் அங்க அழைச்சுட்டுப் போவேன்.

`நம்ம ஊரெல்லாம் காய்ஞ்சு கிடக்கு. ஆனா, வானகத்துல நல்லா மரம் வளருதே, எப்படி சார்?'னு கேட்பாங்க. அப்போதான், நம்மாழ்வார் ஐயா பத்தியும், இயற்கையை மனித சக்திகள் சிதைச்ச விவரங்களையும் சொல்வேன். அதனால், மாணவர்களின் உதவியோட இயற்கை சார்ந்து ஈடுபட்டுக்கிட்டு வந்தேன். இந்த நிலையில்தான், 2017-ம் ஆண்டு தே.இடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பணிமாறுதல்ல வந்தேன்.

இங்க உள்ள மாணவர்களையும் அடிக்கடி வானகத்துக்கு அழைச்சுட்டுப் போவேன். அங்கப் போன மாணவர்கள், `நம்ம பள்ளியிலும் இதுபோல் மரங்களை உருவாக்கணும்'னு சொன்னாங்க. இந்தப் பகுதியே வறட்சியான பகுதி. அதனால், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வரும் குழாய் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்தியது போக மீதியுள்ள தண்ணீரில், கடந்த 17 மாசத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை சம்பா பயிர் பண்ணினோம்.

சிலந்தி வலையோடு பொன்னுசாமி

Also Read: பனங்கிழங்கு உற்பத்தி, கரும்பு ஜூஸ், கருப்பட்டி விற்பனை... ஈரோடு இளைஞரின் `விவசாயி' அவதாரம்

அதோடு, பள்ளி வளாகத்துல வெறுமனே கிடக்கும் 10 சென்ட் நிலத்தில், 70 மரக்கன்றுகளை நட்டோம். அரசு, ஆலமரம், வேம்பு, மகாகனி, பனை, அலமென்டானு 20 வகையான மரங்களை நட்டோம். அதை மாணவர்களே கண்ணும் கருத்துமா கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க. மாணவர்களுக்கு வெறுமனே, `மரங்களின் நன்மைகள், மரம் இல்லையென்றால், மழையில்லை' என்று சொல்வதில் புண்ணியமில்லை.

மரங்களை வளர்த்து, அதன் மூலமாக இயற்கையை சீரமைத்தால், அதை மாணவர்கள் இயல்பாக உணர்ந்து தெளிவாங்கனு நம்பினேன். நம்மாழ்வார் அடிக்கடி சொல்லும், `தண்ணீரை பூமியில் தேடாதே, வானத்தில் (மழை) தேடு'ங்கிற வாக்கியத்தின் அர்த்தத்தை மாணவர்களுக்கு உணர்த்தினேன். அதேபோல், 25 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தப் பகுதியில் ஓடும் ஆறு, ஓடைகளில் எல்லாம் வருடத்தில் 9 மாதங்கள் தண்ணீர் போகும். அந்தத் தண்ணீரில் கெளுத்தி, அயிரைனு பலவகை மீன்கள் போகும்.

ஆனா, இப்போ கானல் நீர்தான் போகுது. காரணம், இங்குள்ள இயற்கையை சிதைச்சதுதான். அந்த விஷயங்களை எல்லாம் சொல்லி, அவங்களுக்கு இயற்கை மேல பெரிய காதலை ஏற்படுத்தினேன்.

அதனால், `இதுபோல் நிறைய காடுகளை உருவாக்கணும்'னு மாணவர்களுக்கு புரிய வச்சேன். அதனால், கொரோனா ஊரடங்கு காலத்திலும், மாணவர்கள் தண்ணீர் ஊற்றி, இந்தக் குறுங்காட்டை வளர்த்தாங்க. இப்போ, ஒவ்வொரு மரமும் குறைஞ்சது 12 அடி உயரத்தில் இருந்து அதிகபட்சம் 20 அடி வரை வளர்ந்து நிக்கிதுங்க. 220 மாணவர்களும் பள்ளிக்கு வந்ததும் ஏதோ ஒரு நேரத்துல, இந்தக் குறுங்காட்டுல உலாவிட்டுதான் அவங்கங்க வகுப்பறைகளுக்குப் போறாங்க. நான் உட்பட 9 ஆசிரியர்களும், இந்தக் குறுங்காட்டுல தினமும் காலாற நடைபோட தவறுவதில்லை.

பொன்னுசாமி உருவாக்கிய குறுங்காடு

Also Read: கரூர்: `யாருக்கும் சத்துக்குறைபாடு இருக்கக்கூடாது! பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைத்த தலைமை ஆசிரியர்

இப்படி, தரிசா வறண்டுக் கிடந்த இடத்துல திடீர்னு நாங்க குறுங்காட்டை உருவாக்கியதால, சிலந்தி, பட்டாம்பூச்சி, புழு, பூச்சி, பறவைகள்னு விதவிதமான உயிர்கள் உலாவருதுங்க. மண்ணைக் கிளறுனா மண்புழு நெளியுது. பள்ளி வளாகத்தில் இன்னும் எங்கெல்லாம் நிலங்கள் தரிசா கிடக்கோ, அதில் எல்லாம் இதுபோல் குறுங்காட்டை அமைக்க இருக்கிறோம். குறுங்காடு மட்டுமல்லாம, எற்கெனவே பள்ளி வளாகத்துல உள்ள 25 புங்கன் மரங்களையும் சிறப்பா வளர்த்துட்டு வர்றோம். அதேபோல், குறுங்காட்டை ஒட்டியே, தக்காளி, கீரை, கத்தரி, பீர்க்கங்காய்னு இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைச்சிருக்கோம். அதுல விளையுற காய்கறிகளை கொண்டுதான், மாணவர்களுக்கு சத்தான உணவு தயாரிக்கிறோம்.

அதோடு, கீழாநெல்லி, கருந்துளசி, துளசினு 10 வகையான மூலிகைச் செடிகளையும் வளர்க்கிறோம். வருங்கால சந்ததியினருக்குத் தேவையான கல்வியை கொடுத்துட்டோம்ங்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கு. தொடர்ந்து, மாணவர்களை இயற்கை சார்ந்து இயங்க வைக்கப் போறேன். இப்படி, மாணவர்களை இயற்கையை நேசிப்பவர்களாக உருவாக்கியதை நம்மாழ்வார் ஐயா உயிரோடு இருந்து பார்த்திருந்தால், ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார். அவர் சமூகத்துக்கு விதைத்துச் சென்ற விஷயங்களை, மாணவர்கள் மனசுல ஒவ்வொண்ணா விதைச்சுக்கிட்டே இருப்பேன்" என்றார் மகிழ்ச்சியாக!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/38iLm0H
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*