சிவகங்கை:அமைச்சர் பாஸ்கரனுக்கு சீட் மறுப்பு - தீக்குளிக்க முயன்ற ஆதரவாளர்கள்!

0

2016 -ம் ஆண்டு சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜி.பாஸ்கரன். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் சிவகங்கை, மானாமதுரையில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது. திருப்பத்தூர், காரைக்குடி தொகுதியை தி.மு.க மற்றும் காங்கிரஸ் தட்டிச் சென்றன. 2016-ல் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து அ.தி.மு.க அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னையில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த அவருக்கு சென்னை வரச்சொல்லி போன் வந்தது.

சீட்டு கிடைக்காத விரக்தியில் அமைச்சரின் ஆதரவாளர்கள்

மீண்டும் சென்னை சென்ற அவர், அமைச்சராக தொகுதிக்கு திரும்பினார். திடீர் எனக் கூப்பிட்டு அமைச்சர் பதவி கொடுத்தது பாஸ்கரனுக்கு லக்கி பிரைஸ் அடித்தது போல் இருந்தது. மாவட்டத்தில் நான்கில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க, வென்றதால் இருவரில் ஒருவர் என்ற முறையில் பாஸ்கரனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது குறிப்பிடதக்கது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ஒரு பேட்டியில் இனி நடிகர்களின் கட்சியெல்லாம் எடுபடாது. விஜயகாந்த் கட்சியின் நிலை தான் ஏற்படும், என அப்போதைய அ.தி.மு.க, கூட்டணி கட்சியான தே.மு தி.க குறித்து கருத்து தெரிவித்து தன்னையும் சர்ச்சை கருத்துகள் தெரிவிக்கும் அமைச்சர்கள் பட்டியலில் சேர்ந்துக்கொண்டார் பாஸ்கரன். அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா இப்படி ஒரு அமைச்சர் இருப்பதே எனக்கு இப்போது தான் தெரிகிறது என பேசினார். அவருக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்போது தான் தெரிந்தது.

இதே நிலை தான் தொகுதியிலும். வாஜ்பாயை தற்போதைய பிரதமர் எனக்கூறியது உள்ளிட்ட தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்துவந்தார். சில வாரங்களுக்கு முன் சிவகங்கைக்கு வந்த மு.க.ஸ்டான் தி.மு.க மேடையில், அமைச்சர் பாஸ்கரனை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பஃபூன்களின் வரிசையில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் வர முயற்சிக்கிறார் என்றார். ஸ்டாலின் சாடியது போலத் தான் உண்மை நிலையும் என்கின்றனர் இத் தொகுதி மக்கள். அமைச்சராக சொல்லிக்கொள்ளும்படியான எந்த திட்டமும் இவரால் கொண்டுவரப்படவில்லை. கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் அளவில் செய்யும் பணிகளான பஸ் ஸ்டாப், நாடக மேடை, சுகாதார வளாக கட்டிடம் கட்டும் பணிகளையே இவரும் செய்துள்ளார். மாவட்டத்தில் மணல் அள்ளும் வாய்புகளை உறவினருக்கு அள்ளிக் கொடுத்தார்.

சீட்டு கிடைக்காததால் தீக்குளிக்க முயன்ற தொண்டர்கள்

சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்ற உளவுத்துறை தகவலை வழங்கியது. அதனால் தனக்கு பதில், மகனுக்காவது கொடுங்கள் என எடப்பாடியிடம் கோரினார் பாஸ்கரன். அ.தி.மு.க சிவகங்கை மாவட்ட செயலாளரான செந்தில்நாதன், காரைக்குடி தொகுதியை கேட்டார், திருப்பத்தூர் தொகுதியை நமது அம்மா பத்திரிகை ஆசிரியர் மருதுஅழகுராஜ் குறிவைத்தார். மேலிட செல்வாக்கு மிக்க இருவரும் அமைச்சர் பதவிக்கு குறி வைப்பார்கள் என்பதால் சூழ்நிலையை புரிந்துகொண்டு தனது மகனுக்கு வாய்ப்பிருக்காது என நினைத்து மீண்டும் தானே போட்டியிடுவது என்ற முடிவில் அமைச்சர் அதற்கான வேலைகளை தீவிரமாக செய்தார். ஆனால் அவருக்கு சீட்டு கிடைக்கவில்லை அவரின் மகனுக்கும் சீட்டு கிடைக்கவில்லை.

சிவகங்கை தொகுதியில் அமைச்சர் பாஸ்கரன் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சிரமம் என்பதால், தற்போதைய மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. காரைக்குடி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டதால், சிவகங்கைத் தொகுதி செந்தில்நாதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அ.தி.மு.க வேட்பாளராக செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளது ஒருபக்கம் வரவேற்பையும், அமைச்சர் குடும்பத்தை அதிரவும் வைத்துள்ளது. இந்நிலையில் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியை அமைச்சர் பாஸ்கரனுக்கு ஒதுக்காமல் மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிவகங்கை நகர் பகுதி முழுவதும் ஊர்வலமாக சென்று கோசங்களை எழுப்பினர்.

சிவகங்கை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

பின்னர் சிவகங்கை எம்.ஜி.ஆர் சிலை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டதோடு அமைச்சரின் ஆதரவாளர்கள் 5-க்கும் மேற்பட்டோர் தீடீரென தங்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்‌. இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது ‌.

செந்தில்நாதன் ஆதரவாளர்கள் இது பற்றி கூறுகையில், " அமைச்சர் பாஸ்கரனுக்கும், செந்தில்நாதனுக்கும் ஆகாது. இருந்தாலும் கட்சி பார்வைக்காக இருவரும் நெருக்கமாக காட்டிக்கொண்டனர். காரைக்குடியில் சீட் கிடைத்து வெற்றிபெறுவார் என்று நினைத்தோம். ஆனால் அந்தத் தொகுதி பா.ஜ.க-வுக்கு கொடுக்கப்பட்டதால் மாவட்ட தலைநகர் சிவகங்கை செந்தில்நாதனுக்கு கிடைத்துள்ளது. சிவகங்கை தொகுதியில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் தொகுதியை எளிதாக கைபற்றுவார்.

அமைச்சர் ஜி.பாஸ்கரன் மற்றும் அவரது மகன் கருணாகரன்

அமைச்சர் பாஸ்கரன் தற்போது சீட்டு கிடைக்கவில்லை என்பதால் கட்சி தலைமைக்கே எதிராக திரும்பியுள்ளார். அவரது உறவினர்களையும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களையும் கொண்டு வந்து போராட்ட நாடகம் நடத்துகிறார். 500 ரூபாய் பணம், வண்டிக்கு பெட்ரோல், பிரியாணி, சரக்கு என்று எல்லாம் வாங்கிக் கொடுத்து செலவு செய்து போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளார். போராட்டத்தில் பலரும் மது போதையில் இருப்பதை நேரடியாக காண முடிந்தது. இது முழுக்க அமைச்சரின் ஏற்பாடு தான். இனி தலை கீழாக நின்றாலும் அவருக்கு சீட் கிடைக்காது” என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3rCUGV5
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*