அ.தி.மு.க, தி.மு.க நேரடியாக போட்டியில்லை. ஆனாலும், கோவை தெற்கு தொகுதியில் நாள்தோறும் அனல்பறக்கும் விதமாக அரசியல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு திராவிட கட்சிகளும் கூட்டணியில் உள்ள தங்களது தேசிய கட்சிகளுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கின. அதன்படி அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
Also Read: கோவை தெற்கு தொகுதி மட்டுமல்ல..! - கமல்ஹாசன் போடும் கொங்கு ஸ்கெட்ச்
இருவரும் வெற்றிக்கான கணக்கீடுகளில் மூழ்கியிருந்தபோது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் இருமுனைப் போட்டி தீவிரமாக இருந்தாலும், இங்கு மும்முனைப் போட்டி வெறித்தனமாக இருக்கிறது. கமல் வேட்பாளராக அறிவித்ததால், வானதி சீனிவாசன் களப்பணிகளில் இன்னும் வேகம் காட்டுகிறார். ஆளுங்கட்சி மீதான அதிருப்திகளே தன்னே கரை சேர்த்துவிடும் என மயூரா ஜெயக்குமார் நம்புகிறார்.
ஆரம்பத்தில், கமல் வருகை குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை மட்டுமே பிரிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களும், கமலுக்கு பெருகிவரும் ஆதரவும் கோவை தெற்கு தொகுதி கள நிலவரத்தை மாற்றியிருக்கிறது. மூன்று வேட்பாளர்களின் செயல்பாடுகளை இங்கு காணலாம்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் தனித்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் மூன்றாவது இடத்தை பிடித்தார். தோல்வியடைந்தாலும் தொகுதிக்குள் தொடர்ந்து பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தார். தேர்தல் நெருங்க, நெருங்க களப்பணிகளில் இன்னும் வேகம் காட்டினார். ஒரு கட்டத்தில் தொகுதியை விட்டு நகராமல் இடைவிடாமல் பிரசாரத்தில் இறங்கினார்.
இதனால், அவரது தொண்டை பாதிக்கப்பட்டு வானதி சோர்வடைந்தார். தொகுதிக்குள் கணிசமாக இருக்கும் சிறுபான்மை மக்களும் கூட, பா.ஜ.க-வாக இருந்தாலும் வானதி பரவாயில்லை என்று சொல்கிற அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருந்தது உண்மை.
தனது பவரை பயன்படுத்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க தேசிய இளைஞரணி தலைவர் எம்.பி தேஜஸ்வி எம்.பி, நடிகர்கள் ராதாரவி, நமீதா, கலாமாஸ்டர் என்று பிரபலங்களை இறக்கி பரப்புரை வியூகம் அமைத்தார். இதனால், மற்ற வேட்பாளர்களுக்கு வானதி கடுமையான போட்டியை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அது மார்ச் 31-ம் தேதிக்கு முன்புதான். 31-ம் தேதிக்கு பிறகு கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்ஸிடிவ் நகரமான கோவையில், பா.ஜ.க பைக் பேரணியில் டவுன்ஹால் பகுதியில் மசூதி அருகே கோஷம் போட்டது, கடை அடைக்க சொல்லி வியாபாரிகளை மிரட்டியது, கல்வீச்சு சம்பவங்கள் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்திவிட்டன.
இதையடுத்து, வானதி சீனிவாசன் மற்றும் அந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாமல், அமைதியை விரும்பும் கோவை மக்கள் பலரையும் யோசிக்க வைத்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த உடனேயே காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதேபோல, கமல்ஹாசனும் அன்றைய தினமே பாதிக்கப்பட்ட செருப்பு கடைக்கு சென்று, செருப்பு வாங்கி தனது ஆதரவை தெரிவித்து ஸ்கோர் செய்துவிட்டார்.
வானதி சீனிவாசன் மற்றும் அவர் கணவர் மீது சமூக வலைதளங்களிலும் பரவும் குற்றச்சாட்டு வீடியோவும் அவர்களுக்கு தலைவலியை கொடுத்துள்ளன. இந்த காரணங்களால், வானதி தரப்பில் பதற்றம் அடைந்துள்ளனர். சிறு சம்பவத்தை வேண்டுமென்றே பெரிதாக்குகின்றனர் என்றும், இஸ்லாமியர்கள்தான் முதலில் கோஷம் எழுப்பினர் என்றும் பா.ஜ.க சொல்லும் விளக்கங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
Also Read: பைக் பேரணி, வெறுக்கத்தக்க கோஷம், கல்வீச்சு - யோகி ஆதித்யநாத் கோவை வருகை ரிப்போர்ட்!
கமல் மற்றும் மயூரா சென்ற அதே கடைக்கு அமைச்சர் வேலுமணி சென்று சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். ஆனால் வானதியோ, பா.ஜ.க-வினரோ அதை செய்யவில்லை. தொகுதியில் அ.தி.மு.க மூலம் அவர்களது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்பதுதான் பா.ஜ.க-வின் கடைசி அஸ்திரமாக பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், இதே தொகுதயில் தி.மு.க கூட்டணியில் இரண்டாவது இடம் பிடித்தார் காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார். அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி மீதான அதிருப்தி, தொகுதிக்குள் கணிசமான உள்ள சிறுபான்மை மக்கள் வாக்குகள் மூலம் இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றுவிடலாம் என்று மயூரா போராடி இந்தத் தொகுதியை வாங்கினார்.
ஆனால், கமல் என்ட்ரியால் மயூராவும் அப்செட் ஆகியுள்ளார். “கடந்தத் தேர்தலிலேயே மூன்று ஸ்வீட் பாக்ஸ்கள் வரை செலவு செய்து தோற்றுவிட்டேன். கடனாகிவிட்டதால், இந்தமுறை நான் செலவு செய்ய மாட்டேன்” என அவர் முடிவெடுத்துவிட்டார் போல.
இதனால், தொகுதிக்குள் பிரசாரத்துக்கு தலை காட்டுவதே அரிதிலும் அரிதுதான். “மயூராவை கண்டா வர சொல்லுங்க. எல்லாரும் கஷ்டப்பட்டு ஜெயிக்க முயற்சி பண்ணுவாங்க. இவர்தான் கஷ்டப்பட்டு தோக்க முயற்சி பண்றார்” என கூட்டணி கட்சிகளே அவரை கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
காசு இறக்காததால் தி.மு.க கூட்டணி கட்சிகளும் தெற்கு தொகுதியை கை கழுவி விட்டனர். தி.மு.க ஆதரவு அமைப்புகள்தான் களத்தில் ஆக்டிவாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
பேரணியில் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக சந்தித்ததை தவிர மயூராவின் செயல்பாடுகள் எதுவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இல்லை.
வானதி, மயூரா இருவருமே கமல் செய்வதை போல ரேஸ்கோர்ஸில் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, ஆட்டோவில் செல்வது, காஃபி வித் வானதி, லன்ச் வித் வானதி என்று கமலை எதிர்கொள்ள அவரது ஃபார்முலாவையே பின்பற்றியதை மக்கள் பெரிய அளவுக்கு ரசிக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது.
முக்கியமாக, துக்கடா விமர்சனத்துக்கு கொதித்த வானதி சீனிவாசன், நடிகர் ராதாரவியை கமலை கடுமையாக விமர்சித்தபோது தடுக்கவில்லை. மேலும், “கமல் லிப் சர்வீஸ்தான் செய்கிறார். அதற்கு இரண்டு அர்த்தம் உள்ளது” என்ற வானதியின் விமர்சனத்தையும் மக்கள் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.
இரண்டு தேசிய கட்சிகள், கடந்தமுறை தமிழகத்தில் நமக்கு அதிக வாக்குகள் கிடைத்த பகுதி என்று கமல் போட்ட கணக்குகள் இப்போதுவரை தவறவில்லை. அம்மன்குளம் பகுதியில் நீண்ட நாள்களாக இருந்த சாக்கடை பிரச்னையை கமல் நேரில் சென்று பார்வையிட்டார். அடுத்த நாளே அந்த பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது. அதிகாரிகள் அவசர அவசரமாக பதறி செய்த காரியம் கமல் ஸ்கோர் செய்வதற்கு வழிவகுத்துவிட்டது.
மக்கள் கூட்டத்தில் கமலின் அறுவை சிகிச்சை செய்த காலை யாரோ மிதிக்க, அதே காலில் ஹோட்டல் லிப்டிலும் அடிபட்டுவிட்டது. மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்ல, கமல் அதற்கு நோ சொல்லி வாக்கிங் ஸ்டிக்குடன் பிரசாரம் செய்து வருகிறார்.
பா.ஜ.க-வில் பெரிய புள்ளிகளை இறக்கி பிரசாரம் செய்ய கமல்ஹாசனோ, “யாரையும் இறக்கி, அதுவே சர்ச்சையை உருவாக்கிவிடக் கூடாது” என சொல்லி, கமலை மட்டுமே மையமாக வைத்து வியூகம் அமைத்துள்ளனர். அவ்வபோது சரத்குமார், சுஹாசினி, ஶ்ரீப்பிரியா தலையை காட்டி சென்றுள்ளனர்.
பிரசாரத்துக்காக மற்ற பகுதிகளுக்கு சென்றாலும் தெற்கு தொகுதியிலும் கமல் முழுவதுமாக கவனம் செலுத்தி வந்தார். கோவையில் இருந்தபடி மற்ற பகுதிகளுக்கு சென்றால், இங்கு முக்கியஸ்தர்களை பார்ப்பது, பிரசாரம் செய்வது போன்றவற்றில் பெரிய சிக்கல் ஏற்படவில்லை.
கமல் கட்சி தலைவராகவும் இருந்தாலும், அவரே இறங்கி பேசுவதை பல அமைப்பினரும், மக்களும் ஆரோக்கியமான விஷயமாக பார்க்கின்றனர். முதலில் அமைத்த அட்டவணைப்படி, கமல்ஹாசன் கடைசி மூன்று நாள்கள்தான் முழுவதும் தெற்கு தொகுதியில் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது மாறும் அரசியல் சூழ்நிலைக்கேற்ப கிட்டத்தட்ட கடைசி ஐந்து நாள்கள் தெற்கு தொகுதியில், வார்டு வாரியாக அனைத்து பகுதிகளுக்கு செல்வது போல திட்டத்தை மாற்றிவிட்டனர். இப்படி, கள நிலவரங்களை தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு கமல் அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருப்பதால், மூன்று கட்சிகளும் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றன. இதனால், மேலும் சில சம்பவங்களை எதிர்பார்க்கலாம்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Pp198e
via
