`கொரோனாவிடம் தோற்றுவிடக் கூடாது’ - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

0

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்காக, சுமார் 67,680 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இதில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 18 மற்றும் 27 தேதிகளில் அந்தந்த தொகுதிகளில் உள்ள தேர்தல் பயிற்சி அரங்கங்களில் இரண்டு கட்ட பயிற்சிகள் நடந்து முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வெவ்வேறு விதமான அறிவிப்புகள் வெளிவருவதால் வாக்குச்சாவடி அலுவலர்களிடையே பல்வேறு குழப்பங்கள் தமிழகம் எங்கும் நிலவி வருகிறது.

தேர்தல்

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 27 தேதிகளில் தேர்தல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், இன்னும் சில மாவட்டங்களில் வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குச் சாவடி அலுவலர் 1-ம் நிலை ஆகியோர் மட்டும் கலந்து கொண்டால் போதுமானது எனும் அறிவிப்பு ஊடகங்களில் வெளியானது. இதனால் அலுவலர்கள் 2 மற்றும் 3 நிலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொள்வதா? வேண்டாமா? எனும் குழப்பத்தில் உள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோட்டூர் வட்டாரத் தலைவர் தங்கபாபு ‘’கொரோனா பரவல் குறித்த அச்சம் இன்னும் முழுமையாக நீங்கி விடாத சூழ்நிலையில், தமிழகம் எங்கும் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு தெளிவான ஆணையை வழங்கி தேர்தல் அலுவலர்கள் மத்தியில் நிகழும் குழப்பங்களுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மேலும், வாக்குப்பதிவு அன்று கொரோனா நோயாளிகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு நேரில் வருகை புரிந்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட கூடுதல் ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது பொதுமக்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் தேர்தல் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கை ஆகும்.

தங்கபாபு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இந்த தேர்தலில் முதன்முறையாக அளிக்கப்பட்ட தபால் வாக்கு நடைமுறையினை கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆட்பட்ட வாக்காளர்களுக்கும் விரிவுபடுத்தி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல்நலனுக்கு உத்தரவாதம் அளித்து, உயிர் காத்திட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது’’ என வலியுறுத்தினார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கொரோனா தொற்றை பற்றி கொஞ்சம் கூட மனதில் கொள்ளாமல், கொரோனா தற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல், தீவிர வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் வாக்குப் பதிவின் போது கொரோனா பரவல அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. கொரோனாவிடம் யாரும் தோற்று விடக்கூடாது என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது. இவர்களது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்குமா.... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/31GxvOj
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*