தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று கும்பகோணம் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றுக்கு வந்த பொதுமக்கள் வாக்கிற்காக அ.ம.மு.க சார்பில் டோக்கன் கொடுத்ததாகவும்,உங்களிடம் ரூ2,000-த்துக்கான மளிகை பொருட்கள் வாங்கிக் கொள்ளச் சொன்னதாக கூறி பொருட்களை கேட்டனர். இதில் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர் இந்த டோக்கன் போலியானது இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தம் இல்லை என கூறியதுடன் கடை கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டினார். இதனால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் பெரியத் தெரு அருகே உள்ள பாட்ராசாரியார் தெருவில் ஷேக் முகமது என்பவர் பிரியம் மளிகை ஏஜென்ஸி என்ற பெயரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த 5-ம் தேதி இரவு தாராசுரம் பகுதியைச் சேர்ந்த சிலர் மளிகைக் கடைக்கு வந்து டோக்கன் ஒன்றை காண்பித்து மளிகை பொருள்கள் கேட்டுள்ளனர். அந்த டோக்கனில் பிரியம் மளிகை ஏஜென்ஸி என அதன் முகவரியுடன் ரூ. 2,000 என்று மட்டும் அச்சிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த ஷேக் முகமது, ``எங்களுக்கும் இந்த டோக்கனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. யார் டோக்கன் கொடுத்தார்களோ அவர்களிடம் போய் கேளுங்கள்” என திருப்பி அனுப்பிவிட்டார். இந்த நிலையில் நேற்று தேர்தல் நடைபெற்றதால் தனது மளிகைக் கடையினை அவர் திறக்கவில்லை. இதையடுத்து இன்று வழக்கம் போல் காலை கடையினை திறந்திருக்கிறார். அப்போது ஆண்கள், பெண்கள் என பலர் அதே போன்று டோக்கனை எடுத்து வந்து பொருட்கள் கேட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷேக் முகமது உடனடியாக கடையின் கண்ணாடியில், ``வேட்பாளர் கொடுத்த டோக்கனுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த டோக்கனுக்கு எங்கள் கடை எந்த பொறுப்பும் ஏற்காது' என அச்சிட்டு ஒட்டினர். இதனால் ஆர்வமுடன் ரூ 2,000 மளிகை பொருள்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து அப்பகுதி வாசிகள் சிலரிடம் பேசினோம், ``கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் பாலமுருகன். இவர் அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தீவிர பிரசாரம் செய்து வந்தார். அத்துடன் தன்னுடைய ஆதரவாளர்கள் மூலமாக தாரசுரம் பகுதியில் மளிகை கடை பெயர் மற்றும் ரூ 2,000 என அச்சடிக்கப்பட்ட டோக்கன் ஒன்றை வீடு வீடாக கொடுத்து வந்தனர்.
இதையடுத்து நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அ.ம.மு.கவினர் கொடுத்த டோக்கனை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட அந்த கடைக்கு பொதுமக்கள் சென்றுள்ளனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமும் இல்லை என கூறியவர் வரிசையாக கூட்டம் வந்ததைத் தொடர்ந்து கடை கண்ணாடியில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டிவிட்டார். மளிகை பொருள் வாங்க சென்றவர்கள் எல்லாம் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
டோக்கனுடன் வாங்க வந்த பெண் ஒருவர், `இதை நம்பி எங்க வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் குக்கர் சின்னத்துல ஓட்டு போட்டுட்டோம்’ என புலம்பியதை பார்க்கும் போது பரிதாபமாகவும் அதே நேரத்தில் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கமும் உண்டானது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல வகையில் நடவடிக்கை எடுத்தாலும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் நிலைக்கு ஏற்றார் போல் பாகுபாடின்றி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். பல்வேறு சூழ்நிலையால் பணம் கொடுக்க முடியாதவர்கள் இது போன்ற நூதன முறையை பின் பற்றுகின்றனர். அ.ம.மு.க- வினர் டோக்கன் கொடுத்து வாக்காளர்களை கவர நினைத்துள்ளார். இது போலியா அல்லது நிஜமா தருவார்களா என்பது இனிமேல் தான் தெரியும்” என்றனர்.
கடை உரிமையாளர் ஷேக்முகமது தரப்பிலோ, ``டோக்கனுடன் பொதுமக்கள் எங்கள் கடைக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். எங்களோட அனுமதியில்லாமலேயே கடையின் பெயரை டோக்கனில் அச்சடித்துள்ளனர். எல்லோருக்கும் பதில் சொல்ல முடியலை. அதனால் பிரிண்ட் அவுட் எடுத்து எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என ஒட்டி விட்டதாக” கூறி வருகின்றனர்.
டோக்கன் வாங்கிய சிலர், அமமுகவினரிடம் அது தொடர்பாக விசாரித்த போது ’நாங்க தாராசுரம் பகுதியில் டோக்கன் கொடுத்தோம். ஆனால் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக டோக்கன் கொடுக்கவில்லை. டோக்கன் கொடுக்கும் போது தேர்தல் முடிந்த பிறகு வெள்ளிகிழமையன்று அந்த இடத்துக்கு வாங்க ரூ 2,000 பணம் தருகிறோம் என சொல்லித்தான் கொடுத்தோம். ஆனால் அதனை புரிந்து கொள்ளாத சிலர் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கொடுத்தாக நினைத்து கடைக்கு சென்று விட்டனர்’ என்கிறார்களாம்.
Also Read: குக்கர் சின்னம்... சாதி ஓட்டுகள்... அ.ம.மு.க என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? #TNElection2021
இதில் ஏமாந்த பொதுமக்கள், `போலியான டோக்கனை கொடுத்து நம்மளை ஏமாற்றி விட்டனர். நம்முடைய வாக்கையும் வாங்கி விட்டனர். இதனை கொடுத்த நிர்வாகிகளிடம் போய் பேசி கொள்வோம்’ என அக்கட்சியினை சேர்ந்த நிர்வாகிகளை தேடி படையெடுத்தனர். அ.ம.மு.கவினர் பெயரில் டோக்கன் கொடுத்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uvr8cV
via
