தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `அந்த 13 பேரின் இழப்பை ஈடுகட்ட முடியாது!’ - 3ம் ஆண்டு நினைவு தினம்

0

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு, ஆலைக்குப் பின்புறமுள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் முதலில் மக்களின் போராட்டம் துவங்கியது. பின்னர், அடுத்தடுத்த கிராமங்களில் மக்கள், தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தது. இப் போராட்டத்தின் 100வது நாளான மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிய மக்களின் போராட்டத்தன்று, கலவரம் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நினைவஞ்சலி

இன்று, உயிரிழந்தவர்களின் நினைவாக 3-ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்ற கிராமங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் அஞ்சலி செலுத்தினர். தி. மு.க வடக்கு மண்டல அலுவலக கூட்ட அரங்கில், தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, மகளிர் உரிமை நலன் துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல, பல கட்சியைச் சேர்ந்தவர்களும் நினைவஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்டமக்கள் கூட்டமைப்பினரிடம் பேசினோம், “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களை விட்டுப் பிரிந்த 13 பேரின் இழப்புகளுக்கு ஈடு கட்டமுடியாது. தங்களின் குடும்பத்தின் ஆணிவேர், பக்கவேர் போன்றவர்களையெல்லாம் அந்த துப்பாக்கிச்சூட்டில் பறி கொடுத்திருக்கிறோம். அவர்களின் உயிரிழப்பிற்கு தற்போது வரை நீதி எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆலை எப்போது தூத்துக்குடி மண்ணிலிருந்து அகற்றப்படுமோ அப்போதுதான் அவர்களின் ஆன்மா நிம்மதி அடையும்.

வீரவணக்க அஞ்சலி

தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர், காயம்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், ’சட்டமன்றத்தைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சிறப்புச்சட்டம் இயற்றி ஆலையை அகற்ற வேண்டும்’ என்ற எங்களின் கோரிக்கையின்படி சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்.” என்றனர்.

தூத்துக்குடி எம்பி., கனிமொழி, “தி.மு.க ஆட்சி அமைந்த 17 நாட்களில் தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போலவே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவர், பாதிக்கப்பட்டவர்கள் என 17 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையின்படி, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், மத்திய புலனாய்வுத்துறை மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளைத் தவிர ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டுள்ளது. போலீஸாரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா ஒரு லட்சமும், விசாரனைக் காலத்தில் மரணமடைந்த ஒருவரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் நிவாரணத்தொகை வழங்கப்படும் பரிந்துரையும் நிறைவேற்றப்படும்.

பாதுக்கப்பு பணியில் போலீஸார்

அத்துடன், போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றுகள் வழங்கப்படும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தி.மு.க ஒரு போதும் துணை நிற்காது” என்றார். ஸ்டெர்லைட் ஆலை, ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்கள், முக்கிய சாலைகள் என தூத்துக்குடி முழுவதும் 6 மாவட்டங்களிலிருந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 12 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 55 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3yvvBiz
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*