இதுவரை கொரோனா பாதிக்காத 70 குக் கிராமங்கள்... வேலூர் ஆச்சர்யம்!

0

மருத்துவமனைகளின் நகரமான வேலூரையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கொரோனா பெருந்தொற்று. இம்மாவட்டத்தில், இதுவரை 35,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பாதிப்பும் 700-ஐ கடக்கிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமங்களில் தொற்று பரவல் கொஞ்சமும் இல்லாதது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், அணைக்கட்டு ஒன்றியத்திலுள்ள பீஞ்சமந்தை, பாலாம்பட்டு, ஜார்தான்கொல்லை ஆகிய மூன்று ஊராட்சிகளுக்குட்பட்ட 70 மலைப்பகுதி குக்கிராமங்களில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்பதுதான் வியக்கச் செய்திருக்கிறது.

மலைக் கிராமத்திலுள்ள வீடுகள்

இந்த மலைக் கிராமங்களில் மட்டும் சுமார் இருபதாயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு, விறகு சேகரிப்பு, தேன் எடுப்பது மட்டுமே இவர்களின் பிரதான தொழில். ஜார்தான்கொல்லையைச் சேர்ந்த ஒரேயொரு மாணவிக்கு மட்டும் திருவண்ணாமலையில் தங்கியிருந்தபோது, தொற்று கண்டறியப்பட்டது. அவரும், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டார்.

பொதுவாகவே, அணைக்கட்டு ஒன்றியத்தில் தினசரி பாதிப்பு 15 முதல் 20 பேர் என இருக்கிறது. மலைகளிலுள்ள இந்த மூன்று ஊராட்சிகளிலும் தொற்று பரவலோ, அறிகுறியோ இல்லாதது எப்படியென அப்பகுதியிலுள்ள வட்டார மருத்துவர்கள் சிலரிடம் பேசினோம். ``மலைகளைச் சார்ந்தே தொழில் செய்கிறார்கள். இதனால், தேவையின்றி மலைக் கிராமங்களிலிருந்து அவர்கள் வெளியில் வருவதில்லை. அப்படி வந்தாலும், வாரத்தில் ஒருநாள் ஒடுகத்தூர் சந்தைக்குத்தான் வருவார்கள்.

மலைக் கிராம மக்கள்

இப்போது, சந்தைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், நகரத் தொடர்பை முற்றிலுமாகத் துண்டித்துக்கொண்டனர். இதனால், கொரோனா பரவல் ஏற்படவில்லை. அதுமட்டுமன்றி, இயற்கையோடு ஒத்து வாழ்வதால் மாசுபடாத காற்றை சுவாசிக்கிறார்கள். இயற்கையாக விளையும் உணவுப் பொருள்களைச் சாப்பிடுகிறார்கள். மலைத்தேன் போன்றவற்றையும் எடுத்துக்கொள்வதால் இயற்கையாகவே அவர்களின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் காணப்படுகிறது. என்றாலும், கொரோனா பாதிப்பு இனியும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’’ என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ypQKe1
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*