தஞ்சாவூர்: தந்தையின் நினைவு நாளுக்காகச் சேமித்த பணம்; கொரோனா தடுப்புப் பணிக்கு வழங்கிய மாணவி!

0

பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் மறைந்த தன் தந்தையின் நினைவு நாளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதற்காக சேமித்து வந்த பணத்தை, கொரோனா தடுப்புப் பணியின் நிவாரண நிதிக்கு பயன்படுத்துவதற்காக தஞ்சாவூர் கலெக்டரிடம் வழங்கினார். அந்த மாணவியை கலெக்டர் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.

கலெக்டர் கோவிந்தராவ்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருநீலகண்டன். இவரின் மனைவி பாக்கியலெட்சுமி. இவர்களின் ஒரே மகள் சாம்பவி தனியார் பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்புப் படித்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருநீலகண்டன் தனக்குச் சொந்தமான தோப்பில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தபோது மின்சார விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதன் பிறகு பாக்கியலெட்சுமியின் சுமை கூடியது. அவர் விவசாயப் பணிகளை மேற்கொண்டு அதில் வரும் வருமானத்தின் மூலம் தன் மகள் சாம்பவியை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் சாம்பவி உண்டியலில் பணம் சேமித்து வைத்து, அந்தப் பணத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 30-ம் தேதி வரும் தன் தந்தையின் நினைவு நாளில், தன் அம்மாவுடன் இணைந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதை கடைபிப்டித்து வருகிறார். அதற்காக இந்த ஆண்டும் பணம் சேமித்து வந்துள்ளார். அந்தப் பணம் ரூ.8,300-ஐ கொரோனா தடுப்புப் பணிக்குப் பயன்படுத்த தன் அம்மா பாக்கியலெட்சுமியுடன் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் கோவிந்தராவிடம் வழங்கினார். ``எதற்காக சேர்த்த பணம்?" எனக் கலெக்டர் கேட்க, தன் தந்தையின் நினைவு நாளுக்காகச் சேர்த்த பணம் என சாம்பவி கூறியதை கேட்ட கலெக்டர் கோவிந்தராவ் நெகிழ்ந்து பாராட்டினார்.

சாம்பவி

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கீழ் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலைபார்த்து வந்த பாக்கியலெட்சுமி, தன் கணவரின் மறைவிற்குப் பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு பெண்ணாகப் பல போராட்டங்களைச் சந்தித்து கடும் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் தன் குடும்பத்தை நடத்தி வந்த சூழ்நிலையிலும், தன் கண் முன்னால் கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவியையும் செய்யத் தவறவில்லை பாக்கியலெட்சுமி.

பாக்கியலெட்சுமிக்கு வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அனைத்தும் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலின்போது சாய்ந்தன. நிலைகுலைந்த சூழலிலும் அதற்காக அரசு நிவாரணமாக வழங்கிய பணம் ரூ.1.5 லட்சத்தில் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழை மாணவிகள் பயிற்சி பெற்று பயன்பெறும் வகையில் வாலி பால் மைதானத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இதனை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் இப்போதுவரை பாராட்டி வருகின்றனர். இதற்காக குடியரசு தின விழாவின்போது கலெக்டர் கோவிந்தராவ் பாக்கியலெட்சுமியை அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிவராண நிதி வழங்கிய மாணவி

இந்நிலையில் சாம்பவி தன் தந்தையின் நினைவு நாளுக்காக சேமித்து வைத்த பணம் ரூ 8,300-ஐ, தன் அம்மா பாக்கியலெட்சுமியைப் போலவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு கொரோனா தடுப்பு நிவாரணப் பணிக்காக வழங்கியதை, தாயைப்போலவே பிள்ளை என அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து மாணவி சாம்பவியிடம் பேசினோம். ``எனக்கு சேமிக்கும் பழக்கம் உண்டு. நான் சேமிக்கும் பணத்துல எங்கப்பா நினைவு நாள்ல ஆதரவற்றவங்களுக்கு உணவு வாங்கிக் கொடுப்பேன். ஒரு வருஷம்கூட தவறாமல் இதை செய்துட்டு வர்றோம். இப்போ கொரோனா பரவலால பலரும் கஷ்டப்படுறாங்க. சீக்கிரமே இதெல்லாம் முடிஞ்சு எல்லாரும் நல்லாருக்கணும்.

பெற்றோருடன் சாம்பவி

கொரோனா தடுப்புப் பணிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் சார்கிட்ட பலரும் நிவாரண நிதி கொடுக்குறதை டிவியில பார்த்தேன். நானும் கொடுக்க நினைச்சு, கலெக்டர் கோவிந்தராவ் சாரிடம் கொடுத்தேன். ரொம்ப சிம்பிளா இருந்த கலெக்டர் சார் என்னை பாராட்டிட்டு, `என்ன படிக்கப் போற?'னு கேட்டர். `டாக்டருக்குப் படிக்கணும்'னு சொல்ல, `அப்படியா..? டாக்டருக்குப் படிச்சு மக்களுக்கு சேவை செய்யணும்'னு உற்சாகப்படுத்தி, ஸ்வீட்ஸ் கொடுத்து வாழ்த்தினார். எல்லோரும், அம்மா போலவே பிள்ளையும் இருக்குனு சொல்றாங்க. நம்மால முடிஞ்ச உதவியை மத்தவங்களுக்குச் செய்யணும்'' என்கிறார் மழலைக் குரலில்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2SkTN6s
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*