மேற்குத் தொடர்ச்சி மலையில் மான், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் அரிய மூலிகைகளைக் கொண்டிருக்கும் மலையின் ஒரு பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்போரேஷன் (பி.பி.டி.சி) என்ற தனியார் நிறுவனத்தின் வசம் இருக்கிறது.
அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்ட இந்த மலையில் இருந்து உற்பத்தியாகும் நீரே தாமிரபரணி ஆறாக ஓடுகிறது. இந்த மலையில் 225 அரிய வகை தாவரங்களும் ஆயிரக்கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றன. இங்குள்ள மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் பி.பி.டி.சி சார்பாக தேயிலை பயிரிடப்பட்டுள்ளது.
மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள வனங்களில் பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக சுமார் 1,000 குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைகளாக அங்கேயே குடியிருந்து வருகிறார்கள்.
நகரப் பகுதிகளில் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று மலைப் பகுதியையும் விட்டு வைக்கவில்லை. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பலருக்கு சளி, இருமல், காய்ச்சல் உள்ளது. அவர்களில் சிலருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் முதல்கட்டமாக 13 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மலையின் உச்சியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 44 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மேலும் பலர் கொரோனா அறிகுறியுடன் இருக்கிறார்கள்.
அதனால் மாஞ்சோலை பணியாளர்களுக்கு கொரோனா பரவும் ஆபத்து அதிகரித்ததால் மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மூடப்படுவதாக பி.பி.டி.சி நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ள போதிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2QE1wMJ
via
