`வேகமா நடந்தா மூச்சு வாங்குது' கொரோனா பாதிப்பு அனுபவத்தைக் கூறி அறிவுரை செய்த எம்எல்ஏ விஜயபாஸ்கர்

0

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் சென்னை சென்றுவிட்டார். அதன்பிறகு அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர், தொடர்ந்து மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்தார். இந்த நிலையில்தான் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, தொற்றிலிருந்து மீண்டு வந்து கடந்த சில தினங்களுக்கு முன்புதான் எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து, சொந்த ஊர் வந்த எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், யாரையும் சந்திக்காமல் வீட்டுத் தனிமையிலேயே இருந்து வந்தார்.

எம்.எல்.ஏ விஜயபாஸ்கர்

தற்போது வெற்றிக்குப் முதல் முறையாக விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, இலுப்பூர் பேரூராட்சி அலுவலகத்திலும் ஆய்வு செய்தார். அங்குப் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார். அப்போது, அங்கு விஜயபாஸ்கர் வந்திருப்பதை அறிந்த மூதாட்டிகள் சிலர் விஜயபாஸ்கரின் அருகே சென்று அவரின் கைகளைப் பற்றியவாறு நலம் விசாரித்தனர்.

`` இத்தனை நாளாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்திருக்கிறேன். அதனால், தான் உங்களை எல்லாம் சந்திக்க முடியவில்லை" என்று கூற அங்கிருந்த பெண்கள் பலரும் கண்கலங்கினர். அவர்களை சமாதானம் செய்தவர், `` கொரோனா வந்த 5 நாள் கஷ்டமா இருந்துச்சு. உடம்பு வலி இருந்துச்சு. கொஞ்சம் வேகமா நடக்க முடியலை, நடந்தா மூச்சு வாங்குது. இப்போ சரியாகிடுச்சு. எதுனாலும் பாத்துக்கலாம். எல்லாரும் தைரியமா இருங்க. முக்கியமா தடுப்பூசி போட்டுக்கோங்க" என்று அறிவுறுத்தினார்.

எம்.எல்.ஏ விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ விஜயபாஸ்கர், ``கிராம மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கூடுதல் முகாம்கள் அமைத்துத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்புப் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்க சென்னையில் சிகிச்சை மையம் அமைத்திருப்பதைப் போன்று மண்டல அளவில் சிகிச்சை மையம் ஏற்படுத்த வேண்டும். முகக்கவசம் ஆயுதம் என்றால், தடுப்பூசி பேராயுதம். எனவே, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்" எனறார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3g3xB9r
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*