கொரோனா வைரஸ் காரணமாக கோவையைச் சேர்ந்த ஷாஜகான் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், ஷாஜகான் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் முத்தூஸ் என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரது மகன் நதீமிடம் ரூ.11.50 லட்சம் கட்டணம் கேட்டதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ளார். இதுகுறித்து நதீம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் தந்தைக்கு கொரோனா உறுதியானதும் முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம்.
Also Read: கோவை:`நாங்கதான் தடுப்பூசிக்கு டோக்கன் கொடுப்போம்' - திமுக-வினர் அட்ராசிட்டி; மக்கள் அவதி
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தினோம் அடுத்த சில நாள்களில் எனக்கும் தொற்று உறுதியானது. எனவே, மீண்டும் ரூ.50,000 கட்டணம் செலுத்தினேன். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட 21 நாள்களில் என் தந்தை இறந்துவிட்டார்.
அவரது பில் தொகை மட்டும் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் என்று கூறிய மருத்துவமனை, அதனை நாங்கள் செய்திருந்த காப்பீட்டு நிறுவனத்திடம் பெற்றுக்கொள்வதாக கூறினர். ஆனால், கூடுதல் பில் தொகையை காப்பீட்டு நிறுவனம் செலுத்தவில்லை. அதனால் எனது தந்தையின் உடலை எங்களிடம் கொடுக்காமல் அலைக்கழித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தந்தை உடல் எங்களுக்கு கிடைத்தது. இது தவிர எனக்கு ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் பில் தொகை கேட்டுள்ளனர். இதுகுறித்து ஆட்சியரிம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதேபோல சுங்கம் பகுதியில் உள்ள மனு மருத்துமனையில் காதர் என்பவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க 20 நாள்களுக்கு ரூ.20 லட்சம் கட்ட வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. காதர் குடும்பத்தினர் ரூ.16 லட்சம் கட்ட, மீதம் உள்ள ரூ.4 லட்சத்தை கட்டினால்தான் உடலை தருவோம் என்று மருத்துவமனை நிர்வாகம் கறார் காட்டியுள்ளது.
கடைசியில் அரசு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து உத்தரவிட்ட பிறகுதான் உடலை ஒப்படைத்தனர். இதேபோல, துடியலூர் பகுதியில் உள்ள லட்சுமி மருத்துவமனை, சுந்தராபுரம் பகுதியில் உள்ள FIMS மருத்துவமனை மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக முத்தூஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 4 தனியார் மருத்துவமனைகளில் வட்டாட்சியர் தலைமையில் குழு அமைத்து கோவை மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு தனியார் மருத்துவமனையும் எவ்வளவு தொகை நிர்ணயிக்க வேண்டும்? என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இதையடுத்து, அரசு அறிவித்துள்ள தொகையைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனைகள் கட்டண கொள்ளை தொடர்பாக, கட்டுப்பாட்டு அறை 1077, 1800 425 3993 மற்றும் covidcomplaints@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 9488440322 என்ற எண்ணின் வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3cdEu6H
via
