கோவில்பட்டி: 23 கொள்ளை வழக்குகளில் தொடர்பு; நகைக்கொள்ளையன் சிக்கியது எப்படி?

0

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, நாரைக்கிணறு, கழுகுமலை, புளியம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதமாகத் தொடர் நகைக் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த சம்பவங்கள் குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இச்சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை கண்டுபிடிக்க, புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வீடுகள், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததுடன் கிடைத்த தடயங்களை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளை பார்வையிட்ட எஸ்.பி.ஜெயகுமார்

இதில் கிடைத்த கைரேகையை இதற்கு முன்பு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த பாலமுருகனின் கைரேகை எனத் தெரிய வந்தது. இதையடுத்து பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வீடுகளிலும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், அவர் கொள்ளையடித்துப் பதுக்கி வைத்திருந்த 22 சவரன் தங்கநகைகளைப் பறிமுதல் செய்தனர். நகைக் கொள்ளையன் பாலமுருகன் சிக்கியது எப்படி என போலீஸாரிடம் விசாரித்தோம் , “கோவில்பட்டி பகுதியில் கடந்த ஓராண்டாக, வீடுகளுக்குள் புகுந்து தொடர் நகைக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட தென்காசியைச் சேர்ந்த ரவி என்ற கார்த்திக்கை சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மற்றும் கைரேகையால் உறுதி செய்து சுற்றி வளைத்தோம். விசாரணையில் அவர் 90-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

கல்யாணி புரம் கொலைமுயற்சி சம்பவத்தில் கைதான பாலமுருகன், தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள்

Also Read: கோவில்பட்டி: 90 திருட்டுச் சம்பவங்கள்; கைரேகையைால் பிடிபட்ட கொள்ளையன்; 64 பவுன் தங்க நகை மீட்பு!

அதேபோல, இந்த வழக்கில் கைதான பாலமுருகனையும் சி.சி.டி.வி கேமரா காட்சிகள், கைரேகையால்தான் எளிதாக கண்டுபிடித்தோம். கைது செய்யப்பட்ட கொள்ளையன் பாலமுருகனின் சொந்த ஊரான கடையம் அருகிலுள்ள கல்யாணிபுரத்தில், கடந்த 11.08.2019-ல் எலுமிச்சை தோட்டத்துடன் கூடிய வீட்டில் தனியாக வசித்து வந்த, சண்முகவேல் மற்றும் செந்தாமரை என்ற வயதான தம்பதியினரிடம் நகைகளைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் கொலை முயற்சியும் நடந்தது.

அதில், செந்தாமரை அணிந்திருந்த நாலே முக்கால் சவரன் தங்கச்சங்கிலி கொள்ளை போனது. அந்த வீட்டில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் அரிவாளைக் காட்டி மிரட்டியது, சண்முகவேலின் கழுத்தை நெரித்தது, கொள்ளையனை செந்தாமரை பிளாஸ்டிக் சேரால் தூக்கி அடித்து விரட்டியது உள்ளிட்டவை தெளிவாகப் பதிவாகி இருந்தது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வழக்கில் கைதான இருவரில் முதல் குற்றவாளி இந்த பாலமுருகன்தான். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்டர் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மீட்கப்பட்ட 22 சவரன் தங்க நகைகளை பார்வையிட்ட எஸ்.பி.ஜெயகுமார்

ஏற்கெனவே இரண்டு முறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளார். சி.சி.டி.வி கேமரா காட்சிப்பதிவுகளாலும், கைரேகையாலும் சிக்கினார் கொள்ளையன் பாலமுருகன்” என்றனர். கொள்ளையன் பாலமுருகனைக் கண்டுபிடித்து கைது செய்த புளியம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டியதுடன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iONBi6
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*