தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புகள் குறித்து விவசாயிகளின் கருத்துகளைக் கேட்டோம்.
Also Read: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"
கரும்பு விவசாயிகளின் நலன்களுக்காக நீண்டகாலமாக போராடி வரும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் சுவாமிமலை சுந்தர விமலநாதனிடம் பேசினோம். ``தி.மு.க 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், தாங்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், கரும்புக்கு டன்னுக்கு 4,000 ரூபாய் கொள்முதல் விலை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தார்கள். இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையோடு, தி.மு.க-விற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், நிச்சயமாகம் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும்" என எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
ஆனால் 2,750 ரூபாயிலிருந்து 2,900 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வெறும் 150 ரூபாய்தான் கூடுதலாக கிடைக்கப்போகிறது. 2016-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில், அதவாது ஐந்தாண்டுகளுக்கு முன்பே கரும்பு டன் ஒன்றுக்கு 2,850 ரூபாய் வழங்கப்பட்டது.
அதன் பிறகு தமிழக முதல்வராக வந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டு தற்போது 2,750 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 4,000 ரூபாய் என்ற விலைக்கு வழங்கினால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். ஏற்கனவே விரக்தியில் இருக்கும் விவசாயிகளை தற்போதைய அறிவிப்பு கவலை அடையச் செய்துள்ளது.
கரும்பு உற்பத்தியில் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்காததால் பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இதனை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதனால் கரும்பு உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2012-ம் ஆண்டு 255 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டது. அது படிப்படியாக குறைந்து தற்போது 82 மெட்ரிக் டன்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உழைப்புக்கேற்ற லாபம் இல்லையென்றால் எப்படி கரும்பு விவசாயிகள் இதில் நீடிப்பார்கள்?
Also Read: வேளாண் பட்ஜெட்: `பழங்குடிகளும் இனி பயன்பெறுவர்!' - சிறுதானிய பதப்படுத்தும் மையத்திற்கு வரவேற்பு
விவசாயிகள் உற்பத்தி செய்து கொடுத்த கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் 1,200 கோடி ரூபாய்க்கும் மேல் நிலுவை வைத்துள்ளன. இதனை பெற்றுத் தருவது குறித்தும் இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதுவும் ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்.
தஞ்சை மாவட்டம் மருத்துவக்குடியைச் சேர்ந்த கரும்பு வீவசாயி நல்லதம்பியிடம் தற்போதைய விலை அறிவிப்பு குறித்து நாம் கேட்டபோது, ``ஒரு ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்ய, 70,000 ரூபாய் செலவாகிறது. இதில் சராசரியாக 45 டன் கரும்பு மகசூல் கிடைக்கிறது.
தற்போது புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விலையான 2,900 ரூபாய் என்ற அடிப்படையில் கணக்கீட்டால், 1,30,500 ரூபாய்தான் வருமானம் கிடைக்கும். இதில் செலவு போக குறைவான அளவுதான் லாபமாக கிடைக்கும். இதில் எங்களது 13 மாத கால உழைப்பு, முதலீடு அடங்கியுள்ளது. மாதத்திற்கு 6,000 ரூபாய் கூட வருமானம் கிடைப்பதில்லை. ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் விலை கொடுத்தால் கட்டுப்படியாகும்’’என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fZOnqQ
via
