கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்ற விவசாயி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Also Read: ``கோவை மாவட்டத்தில் 3-ம் அலை பாதிப்பு அதிகமாக இருக்கும்!'' - எச்சரிக்கும் அதிகாரிகள்; என்ன காரணம்?
மேலும், கோபால்சாமி காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த முத்துசாமியை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த கோபால்சாமி சாதியை சொல்லி திட்டியதால் இந்த சம்பவம் நடந்ததாக முதலில் தகவல் வெளியானது.
இதையடுத்து, கோபால்சாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி ஆட்சியரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார்.
முத்துசாமியை விவசாயி கோபால்சாமி சாதி ரீதியாக பேசியதாகவும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காவல்துறைக்கு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.
இதைத்தொடர்ந்து, விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அன்னூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில்,.கிராம உதவியாளர் முத்துசாமி, அலுவலகத்தில் வைத்து கோபால்சாமியை தகாத வார்த்தையில் பேசி தாக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அளித்துள்ள புகாரில், “தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை வேறு ஒருவருக்கு முறைகேடாக மாற்றம் செய்தது தொடர்பாக கோபால்சாமி கேட்டுள்ளார். அப்போது, முத்துசாமி தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி திட்டி கோபால்சாமியை தாக்கியுள்ளார். இதில் கோபால்சாமி கீழே விழுந்துள்ளார்.
பிறகு வெளியில் இருந்து சிலர் வழங்கிய திட்டப்படி, தன்னை சாதியை சொல்லி திட்டுவதாக முத்துசாமி காலில் விழுந்து அழுதுள்ளார். எனவே, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முத்துசாமி கொடுத்த புகார்களை ரத்து செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
டெல்லி க்ரைம் ரிப்போட்டர் என்ற போலி பத்திரிகையாளரின் வழிநடத்துதலின் பேரில், முத்துசாமி நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை வைத்து பேரமும் பேசியுள்ளனர். முதல்கட்டமாக, கிராம நிர்வாக அலுவலர் கலைசெல்வி, முத்துசாமி இருவரும் பணியிடம் மாற்றம் செய்து, சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அன்னூர் போலி பத்திரிகையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jRETyN
via
