`நீ ரொம்ப அழகா இருக்க!’ - புகாரளிக்கச் சென்ற இளம்பெண்ணை மசாஜ் செய்ய அழைத்த புதுச்சேரி போலீஸ்?!

0

புதுச்சேரி, லாஸ்பேட்டை காவல் நிலைய கட்டுப்பாட்டிற்குட்பட்ட பகுதியில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார் அந்த இளம்பெண். அந்த கணவர், தாழ்வு மனப்பான்மை காரணமாக தனது மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி கண்மூடித்தனமாக அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருப்பதாக கூறப்படுகிறது. கணவன் அடிப்பதால் ஏற்படும் வலியை தாங்க முடியாத அந்தப் பெண், கடந்த ஜூன் மாதம் வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்கிறார். அங்கு தனது கணவர் தன்னை அன்றாடம் அடித்து கொடுமை படுத்துகிறார் என்றும், அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் கூறியதுடன் அவரை அழைத்து எச்சரிக்கும்படியும் அழுதிருக்கிறார்.

மசாஜ்

அதையடுத்து வழக்கறிஞர் ஒருவருடன் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற அந்தக் கணவரை ’தனியாக’ அழைத்துப் பேசிய அதிகாரிகள், அவரை எச்சரிக்காமல் அந்தப் பெண் கொடுத்த புகாரை வாங்காமல் ‘உன் கணவர் ரொம்ப நல்லவர். அவருடன்தான் நீ வாழ வேண்டும்’ என்று அட்வைஸ் செய்திருக்கின்றனர். அத்துடன் மேலும் தேவை என்றால் குடும்ப நல நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டனர்.

நியாயம் கிடைக்கும் என்று சென்ற இடத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியுடனும், ஏமாற்றத்துடனும் வீட்டுக்கு திரும்பினார் அந்தப் பெண். அதன்பிறகு வழக்கமான அடி உதைகளுடன், சைக்கோத்தனமாக செயல்களையும் அரங்கேற்றியிருக்கிறார் அந்த கணவர். இந்நிலையில்தான் ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் அந்த பெண்ணை மிருகத்தனமாக தாக்கியதால் வலியுடன் காவல்துறை அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு அழுதிருக்கிறார். அதையடுத்து லாஸ்பேட்டை காவல்துறைக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி அரசு

அதையடுத்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் காவல்நிலையத்திற்கு வரும்படி கூறியிருக்கின்றனர். ஆனால் அங்கும் அந்தப் பெண்ணிடம் எந்த புகாரையும் வாங்காமல், இருவரிடமும் பேசி அனுப்பியிருக்கின்றனர். வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் கணவர் அடித்ததால் மதியம் ஒரு மணிக்கு மீண்டும் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்ற அந்தப் பெண், ’நான் கொடுத்த புகாரை ஏன் நீங்கள் வாங்கவில்லை.

என்னால் அவர் அடிப்பதை தாங்க முடியவில்லை. என் புகாரை வாங்குங்கள். நான் விவாகரத்துப் பெற வேண்டும்’ என்று அழுதிருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட தலைமைக் காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை அமர வைத்துக் கொண்டு அனைத்து காவலர்களையும் மதிய சாப்பாட்டிற்காக போகும்படி உத்தரவிட்டிருக்கிறாராம்.

உரையாடல்

அனைவரும் சென்றுவிட்ட பிறகு அந்தப் பெண் குறித்த அனைத்து தகவல்களையும் கேட்ட அந்த காவலர், ‘உன்னை பார்த்தால் ரெண்டு புள்ளைக்கு அம்மா மாதிரி தெரியலையே. நீ சிகப்பா இவ்ளோ அழகா இருக்க. ஆனால் உன் வீட்டுக்காரன் கருவாடு மாதிரி இருக்கான். அவன்கூட வாழ்ந்து நீ ஏன் கஷ்டப்படனும் ? உனக்கு நான் வேலை வாங்கித் தர்றேன். உன்னையும் உன் குழந்தைகளையும் நான் பாத்துக்கறேன். நம்மக்கிட்ட நிறைய வக்கீலுங்க இருக்காங்க. உனக்கு நானே டைவர்ஸ் வாங்கித் தர்றேன்.

இனிமே நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ்” என்று கூறி திடீரென்று அந்தப் பெண்ணின் கையை பிடித்திருக்கிறார். அவர் வெடுக்கென்று கையை இழுத்துக்கொள்ள, “உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா ?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு, ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று அந்தப் பெண் கூற, ‘அதுக்கென்ன நான் கற்றுக்கொடுக்கிறேன்’ என்று கூலாக கூறிவிட்டு, எந்த உதவியாக இருந்தாலும் தனக்குப் போன் செய்யும்படி தனது இரண்டு எண்களையும் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

இளம்பெண்

அதற்கு மறுநாள் அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீட்டிலிருந்த கதவை உடைத்து 13 பவுன் நகைகளை எடுத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியபோதுதான், காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைக் கூறி அழுதிருக்கிறார். அதையடுத்து அந்த பெண்ணை ‘இறைவி பெண்கள் பாதுகாப்பு’ என்ற அமைப்பிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தக் காவலரை கையும் களவுமாக பிடிக்க நினைத்த அந்த அமைப்பினர், அந்த காவலருக்கு போன் செய்யும்படிக் கூறி அந்த உரையாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த உரையாடலின்போது விவகாரத்துக்காக வழக்கறிஞருக்கு கொடுக்க தன்னிடம் பணம் இல்லையென்று கூறுகிறார் அந்தப் பெண். அதற்கு, ‘அதையெல்லாம் நான் பாத்துக்கறேன். அப்புறமா வாங்கிக்க சொல்றேன். அவரை கவனிச்சு அனுப்பிடுறியா ? இன்னைக்கு (ஆகஸ்ட் 11) சாயந்திரம் பஸ் ஸ்டேண்டுகிட்ட இருக்கற அந்த வக்கீல் ஆபீஸுக்கு வா’ என்கிறார். தொடர்ந்து ‘சார் அந்த ஆயில் மசாஜ் சொன்னீங்களே அது எங்க சார்?’ என்று அந்தப் பெண் கேட்க, ‘அந்த வக்கீல் ஆபீஸ்க்கு வந்துடு’ என்கிறார்.

Also Read: ``நீ அழகா இருக்க... ஐ லவ் யூடா செல்லம்..!’’ - பெண் எஸ்.பி-க்கு போலீஸ் ஐ.ஜி அனுப்பிய மெசேஜ்கள்

தொடர்ந்து ‘எண்ணெய் நான் வாங்கி வரட்டுமா?’ என்று அந்த பெண் கேட்க, ‘அதெல்லாம் பாத்துக்கலாம். சாயந்திரம் 5 மணிக்கு வந்துடு. நான் வெயிட் பண்றேன்’ என்று இணைப்பைத் துண்டிக்கிறார். மாலை 5 மணிக்கு பேருந்து நிலையத்தில் அந்த தலைமைக் காவலர் காத்திருக்க, இறைவி அமைப்பினருடன் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார் அந்த இளம்பெண். தற்போது அந்தப் பெண்ணையும், இறைவி அமைப்பின் நிர்வாகிகளையும் செல்போனில் தொடர்பு கொண்டு ’என்னை மன்னித்துவிடுங்கள். என் வாழ்க்கை வீணாப்போயிடும்’ என்று கண்ணீர்விட்டு வருகிறாராம் அந்த தலைமைக் காவலர்.

’கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என்ற புகாருடன் காவல் நிலையம் செல்லும் பெண்களுக்கு விவாகரத்து வாங்கித் தரும் சேவையை புதுச்சேரி காவல்துறை எப்போது துவங்கியது?’ என்று அதிசயித்துக் கேட்கும் லாஸ்பேட்டை பகுதி மக்கள், காவல் நிலையங்கள் அனைத்தும் முழுமையான சி.சி.டி.வி கண்காணிப்புக்குள் வந்தால் மட்டுமே இப்படியான தவறுகளை தடுக்க முடியும் என்கின்றனர்.

யார் இந்த காவலர்?

'சரக்கு' என்ற அடைமொழியுடன் வலம் வரும் இந்த காவலர், முழு நேரமும் போதையில் இருப்பவராம். கடந்த 2013-ம் ஆண்டு புதுச்சேரி காவல்துறை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகை நிருபரை தொலைபேசியில் மிரட்டியதற்காக அப்போதைய டி.ஜி.பி காமராஜ் அவர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தன் மீது நடவடிக்கை எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறி கண்ணீர் விட்டு கதறினார்.

புதுச்சேரி போலீஸ்

இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் இறைவி பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் காயத்ரி ஸ்ரீகாந்தியை தொடர்புகொண்டோம். “குடும்பத் தகராறுகளுக்காக அணுகும் பெண்களை மகளிர் காவல் நிலையங்கள் கைவிட்டுவிடுகின்றன. அதனால் காவல் நிலையங்களுக்கு செல்லும் பெண்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்கு பதிலாக, அவர்களின் பிரச்னைகளை பெரிது படுத்தும் வேலைகளில்தான் சில காவலர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த பெண்ணின் விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. கணவர் மீது புகார் கொடுப்பதற்காக சென்றபோது அங்கிருந்த காவலர் ஆயில் மசாஜ் செய்ய அழைத்திருக்கிறார். அத்துடன் தனது இரண்டு செல்போன் எண்களையும் கொடுத்து, தானே விவாகரத்து வாங்கித் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஒரு வழக்கறிஞரின் அறைக்கு வருமாறும் அழைத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக அந்த தலைமைக் காவலர் மீது எஸ்.பி உள்ளிட்ட அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் எழுத்து மூலமாக புகார் அனுப்பியிருக்கிறோம். அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். இந்த குறிப்பிட்ட காவலர் இது போன்று தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருவதாகவும் தகவல் வருகிறது. இந்த பெண் போன்று வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.” என்றார்.

Also Read: மும்பை: `பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் வாங்கிடு' - பெண் மீது ஆசிட் நிரப்பிய பலூன் வீச்சு!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/37AsbyJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*