மனைவியோடு ஏற்பட்ட தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளோடு கிணற்றில் குதித்து அந்த பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயல, அந்த இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கரூர்: வெளிப்பார்வைக்கு பன்றிப் பண்ணை; உள்ளே லிட்டர் லிட்டராக கள்ளச்சாராயம் - அதிரடி காட்டிய போலீஸ்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (34). பொக்லைன் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பழனியம்மாள் என்கிற பிரியா (26). இந்த தம்பதிக்கு திருமணமாகி ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த தம்பதிக்கு ருதர்சனாஸ் (5) என்ற மகளும், கிருஷ்ணா (3) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனால், தகராறு அதிகரிக்கும்போது, முருகேசனின் மனைவி பிரியா, கணவரோடு கோபித்துக்கொண்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்றுவிடுவாராம். பிறகு, இரண்டு பேரின் உறவினர்களும் சமாதானம் பேசி, பிரியாவை முருகேசனுடன் சேர்ந்து வாழவைப்பார்களாம். இந்தநிலையில், வழக்கம்போல் கணவன், மனைவி இடையே இரவு நேரத்தில் தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், மனமுடைந்த முருகேசன், தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார். தனது இரண்டு குழந்தைகளையும் இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வெளியே சென்றிருக்கிறார். அப்படி வெளியில் சென்று அவர்கள் மூன்று பேரும், வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த பிரியா, தனது கணவர், குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளார். ஆனால் அவர்களை அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இந்த நிலையில், தோகைமலை அருகே உள்ள புதூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் மறுநாள் அதிகாலை 6 மணியளவில், 'எங்களை காப்பாற்றுங்க' என சத்தம் கேட்டிருக்கிறது.
அந்த சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள், அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, இரண்டு குழந்தைகள் கிணற்றில் பிணமாக மிதந்தனர். மேலும், ஒருவர் கைமுறிந்த நிலையில் இருந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் குளித்தலை காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், குளித்தலை காவல் நிலைய போலீஸார் மற்றும் முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், அவர்கள் கிணற்றில் தத்தளித்துக்கொண்டு இருந்தவரையும், இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். அதன்பிறகு, போலீஸார் நடத்திய விசாரணையில்தான், அவர் முருகேசன் என்றும், மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முருகேசன் உயிர் பயத்தில் அவர் தற்கொலை முடிவை கைவிட்டுள்ளார். இதையடுத்து, முருகேசனை போலீஸார் கைது செய்தனர். மேலும், முருகேசனின் இரண்டு குழந்தைகளின் உடல்களையும் மீட்ட குளித்தலை காவல் நிலைய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குளித்தலை அருகே குடும்பத்தகராறில் இரண்டு குழந்தைகளை தந்தையே கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களை அதிர வைத்திருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DCfEsM
via
