புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (30). இவருக்கும் கறம்பக்குடியைச் சேர்ந்த நந்தினி (25) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகியிருக்கிறது. திருமணமானது முதல் இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 20-ம் தேதி முதலே பாண்டித்துரையைக் காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் பாண்டித்துரையைத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, பாண்டித்துரையின் தாய் மீனாட்சி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் மகனைக் காணவில்லை என்று கூறி புகார் கொடுத்தார். மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பாண்டித்துரையைத் தேடி வந்தனர்.
கணவன்-மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் நந்தினியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
Also Read: கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை; சக மாணவன் செய்த கொடூரம்!
விசாரணையில், "கடந்த மாதம் 20-ம் தேதி எனக்கும் எனது கணவருக்குமிடையே சண்டை ஏற்பட்டது. அதில், பாண்டித்துரை எனது கழுத்தை நெரித்துக் கொலை செய்யப் பார்த்தார். அப்போது, ஆத்திரமடைந்த நான் அருகே கிடந்த அரிவாளை எடுத்து தலையில் பின்பக்கமாக வெட்டினேன். மயங்கி விழுந்து இறந்துபோனார். என்ன செய்வதென்று தெரியாமல் கடைசியாக, சடலத்தை அப்படியே தூக்கிக்கொண்டு போய் கிணற்றில் வீசினேன்" என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
நந்தினி கொடுத்த தகவலின்படி கிணற்றுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நந்தினியைக் கைது செய்த போலீஸார், பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராற்றில் கணவனை மனைவி கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3A57Oph
via
