திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர், தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை மன்னார்குடி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் நகரில் வசித்து வருபவர் ரெங்கராஜ். இவரது மனைவி கிரிஜா. இரவு வீட்டிற்குள் கதவை பூட்டிவிட்டு தூங்கி கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டின் கொல்லைப்புற கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் வீட்டிற்கு புகுந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தூக்கத்தில் இருந்த கிரிஜா கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடியிருக்கிறார். கழுத்தில் இருந்த செயின் அறுபட்டதை உணர்ந்த கிரிஜா, கண் விழித்துப் பார்த்து கூச்சல் போட்டிருக்கிறார். இதனால் கிரிஜாவின் கணவர் ரெங்கராஜ் பதற்றத்தோடு எழுந்து, அந்த மர்ம நபரை விரட்டிச் சென்றிருக்கிறார். அதற்குள் அந்த மர்ம அங்கிருந்து மாயமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
Also Read: காரைக்காலில் சிலை திருட்டு; மன்னார்குடியில் இரும்புக்கடை முதலாளி; 14 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!
இதுகுறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் ரெங்கராஜ் - கிரிஜா தம்பதியினர் புகார் அளித்திருக்கிறார்கள். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டு, செயினை திருடிச் சென்ற அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள். இந்த துணிகர திருட்டு சம்பவம் மன்னார்குடி பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசும் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ‘’ வீட்டிற்குள் ஆள்கள் இருக்கும் போதே, கதவை உடைத்து திருட்டு நடந்திருப்பது, இப்பகுதி மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதை உணர்த்துகிறது. இது அதீத ஆபத்தின் தொடக்கம். இதனால் பொதுமக்களும் குறிப்பாக காவல்துறையினரும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும். சமீபகாலமாக இப்பகுதிகளில் புதிய நபர்களின் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதுபோன்ற நபர்கள் தங்களது தெருவுக்குள் வருவதை மக்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அவர்களை மிகுந்த எச்சரிக்கையோடு அணுகுவதோடு, சந்தேகம் வலுவானால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். சிறிய சத்தம் கேட்டால் கூட, உடனடியாக எழுந்து, என்னவென்று பார்த்து சுதாரிப்போடு நடந்துகொள்ள வேண்டும். இது ஒருபுறமிருக்க, சமீபகாலமாக மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. எளிதாக கஞ்சா கிடைப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கஞ்சா பயன்படுத்தக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இதுபோன்றவர்களால் குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சாவை முற்றிலும் ஒழித்துக்கட்ட காவல்துறையினர், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Aw9RTr
via
