கர்ப்பமான காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன்; நீதிமன்றத்தில் நடந்த திருமணம்!

0

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி (28). அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரியும் (23) ராம்கியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமானார். எனவே, தன்னைத் திருமணம் செய்துகொள்ளக் கூறி ராம்கியிடம் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். ஆனால் ராம்கியோ, கஸ்தூரியை திருமணம் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து வந்துள்ளார். இதையடுத்து, இதுபற்றி கஸ்தூரி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

நீதிமன்றம்

Also Read: பெண் விமானப் படை அதிகாரிக்கு இரு விரல் பரிசோதனை, உயர் அதிகாரிகளின் அலட்சியம்; வெளிவந்த அதிர்ச்சிகள்!

ராம்கியை அழைத்துப் பேசிய மகளிர் போலீஸார், கஸ்தூரியை திருமணம் செய்து கொண்டு, இருவரும் சந்தோஷமாக வாழுமாறு கூறி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனாலும் மனம் மாறாத ராம்கி கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ள மறுக்கவே, ராம்கி மீது பாலியல் வன்கொடுமை வழக்கினை பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கானது, ஆலங்குடி உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் பின்பு இந்த வழக்கு புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு வந்த ராம்கி தன் காதலியைத் தான் திருமணம் செய்துகொள்வதாக நீதிபதியிடம் கூற, ராம்கிக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார் நீதிபதி.

ஆனாலும், அதன் பின்பும் ராம்கி கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ளாததால், ஜாமீனை ரத்து செய்து மீண்டும் ராம்கியை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை நாடியும் ராம்கிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதற்கிடையேதான், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி நீதிபதி அப்துல் காதரின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்கி தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி கைவிட்ட காதலியைத் திருமணம் செய்துகொண்டால், கண்டிப்பாக ஜாமீன் கிடைக்கும் என்று ராம்கியிடம் கூற, கஸ்தூரியை தான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ராம்கி நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்ற நீதிபதி காதலியைத் திருமணம் செய்துகொள்ள ராம்கிக்கு அனுமதி அளித்தார். கஸ்தூரியும் சம்மதம் கூறியுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட ராம்கி - கஸ்தூரி

Also Read: உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

இதையடுத்து, ராம்கிக்கு இந்த முறை உடனடியாக நீதிமன்றத்திலேயே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள காதலி கஸ்தூரிக்குத் தாலி கட்டினார் ராம்கி. தொடர்ந்து, திருமணம் முடிந்த நிலையில் ராம்கி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் வழங்குவது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளைதான் முடிவெடுக்க வேண்டும். எனவே, மதுரை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ராம்கிக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3B7Gw2R
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*