தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே மாங்காடு ஊராட்சியில் இடைத்தேர்தல் நடந்தது. இதில், கீதா துரையரசன்(பூட்டுச்சாவி), ஜானகி செல்வராஜ்(ஆட்டோ சின்னம்) ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களுக்குள் கடுமையான போட்டியிருந்ததாக சொல்லப்படுகிறது.
மாங்காடு சுந்தரகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயசுந்தரம் (60). விவசாயியான அவரின் வீட்டிற்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த குமரேசன்(40), ``ஆட்டோவுக்கு ஓட்டுப்போடாமல், ஏன் பூட்டுச் சாவிக்கு ஓட்டு போட்டாய்?, ஆட்டோவுக்குப் போட்டிருந்தால், மாரியம்மன் கோயிலில் வந்து சத்தியம் செய்" என்று கூறி விஜயசுந்தரத்திடம் தகராற்றில் ஈடுபட்டுளார். அதோடு, குமரேசன், சுந்தரத்தின் கழுத்தை நெரிக்க, விஜயசுந்தரத்தின் மகன் சதீஸ்குமார், மனைவி ராஜலெட்சுமி ஆகிய இருவரும் தடுக்க முயன்றனர்.

ஆனாலும், குமரேசன் கொலை செய்ய முயற்சி செய்வது போல தெரிய, உடனே சதீஸ்குமார் குமரேசனின் காதைக் கடித்தார். இதில், குமரேசனின் காது துண்டானது. இதனையறிந்து அங்கு வந்த குமரேசனின் உறவினர்கள், குமரேசனின் காதை, எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு துண்டான காது இணைத்து தையல் போடப்பட்டு குமரேசனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், கழுத்து நெரிபட்டதால், விஜயசுந்தரமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’ -கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரி பெண்
இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக விஜயசுந்தரம் ஏன் ஆட்டோவுக்கு ஓட்டுப்போடவில்லை என்று வேறு ஒருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இரு தரப்பும் மாறி,மாறி போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2X2Ikva
via
