தூத்துக்குடி, ஆதிபராசக்திநகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி மோட்சம். இவருக்கு ஒரு மகனும் 5 மகள்களும் உள்ளனர். இவரின் கணவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார். இந்த நிலையில், இவரின் மகன் ராமராஜ், மோட்சத்தின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், மகனிடம் இருந்து தனது சொத்துக்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மோட்சத்தை அவரது மகள் ஈஸ்வரி, பைக்கில் அழைத்து வந்திருந்தார். சுயமாக நடக்க இயலாத நிலையில், தன் மகள் உதவியுடன் மெது மெதுவாக நடந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். மோட்சத்திடம் பேசினோம், ”17 வருசத்துக்கு முன்னாலயே என் கணவர் உடல்நலக்குறைவால இறந்து போயிட்டாங்க.
அவர் இறந்ததுக்குப் பிறகு அவர் பேருல உள்ள சொத்துக்களை எம் பேருக்கு மாத்தினாங்க. என் பேருக்கு மாத்தினப்பவவே எம் பேருக்கு வேண்டாம். அதை 6 பங்கா வச்சு எல்லாப் பிள்ளைகளுக்கும் கொடுத்திடாம்னு சொன்னேன். ’நீங்க இருக்குற வரைக்கும் எங்களுக்கு எந்த சொத்தும் தேவையிலம்மா’ன்னு பெண் பிள்ளைகள் பெருந்தன்மையாச் சொன்னாங்க. ஆனா, எம் பேருல சொத்துக்களை மாத்தினது எம் மகனுக்குத் தெரியாது.
கணவர் இறந்ததுக்குப் பிறகு என் மகன்தான் என்னைக் கவனிச்சுக்கிட்டான். சொத்துக்களை என் பேருல மாத்தினது தெரிஞ்ச பிறகு, பேரன், பிள்ளைகளைக் காரணம் காட்டி என்னை ஏமாற்றி எம் பேருல உள்ள சொத்துக்களை அவன் பேருக்கு மாத்திக்கிட்டான். சரி போகட்டும்னு பார்த்தா, ஒரு கட்டத்துல என்னையே வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டான்யா.
எனக்கு வயசு 77 ஆகுது. என்னால சுயமா நடக்கக்கூட முடியாது. உடல்நிலையும் சரியில்ல. சாப்பாட்டுக்கும் வழியில்ல. மருந்து, மாத்திரை வாங்குறதுக்கும் முடியல. இந்த நிலைமையில, நான் இப்போ அனாதையா ஆயிட்டேன். என்னோட கடைசி மகள்தான் இப்போதைக்கு என்னை கவனிச்சுக்கிறா. எத்தனை நாளுக்குதான் மகளோட வீட்டுல இருக்க முடியும்? முடியாத காலத்துல ஒரு பெத்த தாயை இப்படி அலைய விடலாமா?
என்னால தாங்கிக்க முடியல. ’பெத்த மனசு பித்து, பிள்ளை மனம் கல்லு’ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த நிலையிலும் மகனோட ஆதரவைத்தான் என் மனசு விரும்புது. ஆனா, என் மகன் வீட்டுக்குள்ள என்னை அனுமதிக்கலை. என்னை ஏமாற்றி அபகரிச்சுக்கிட்ட சொத்துக்களை திரும்ப மீட்டுத்தர கலெக்டர் ஐயாதான் நடவடிக்கை எடுக்கணும்” என்றார் கண்ணீருடன்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3FOaRGy
via
