கச்சத்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேரை எல்லை கடந்து வந்ததாக இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, ராமேஸ்வரம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க இந்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மீனவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கும் மீனவர்கள் மீட்கப்படும் வரை மீன்பிடித் தொழில் நிறுத்தத்தை மீனவர்கள் அறிவித்திருக்கிறார்கள். மீனவர்களின் இந்த அறிவிப்பால் ராமேஸ்வரத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இலங்கை கடற்படையின் இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் சீன இருப்பதாகத் தேசிய பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறது.
Also Read: Tamil News Today: ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 42 பேரை விசைப்படகுகளுடன் சிறைபிடித்த இலங்கை கடற்படை!
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பியிடம் பேசினோம். ``இலங்கைக்கான சீனத் தூதர் ராணுவ அதிகாரிகளுடன் கடந்த 17-ம் தேதி இந்திய - இலங்கைக்கு இடைப்பட்ட பாக் நீரிணைப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பாகிஸ்தான் தூதர் யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய அரசு, சீன தூதர் இந்திய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ஆய்வு செய்ததைக் கண்டிக்கவில்லை.
சீன தூதரும், அதிகாரிகளும் பருத்தித்துறை கடற்பகுதியில் ஆய்வு செய்தனர். 'இங்கிருந்து இந்தியா எவ்வளவு தூரம்?' எனச் சீன தூதர் கேட்டிருக்கிறார். அதற்கு '30 கிமீ' என இலங்கை ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னர், மன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படைப் படகில் தனுஷ்கோடி எல்லை தெரியும் வரை பயணம் செய்து, இலங்கை எல்லைக்குள் இருக்கும் மூன்றாம் தீடையில் இறங்கி ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு வெளிநாட்டு அதிகாரி இந்திய - இலங்கைக்கு இடையேயான பாக் நீரிணைப்பகுதியில் நம் எல்லை வரை வந்து ஆய்வு செய்தது இதுவே முதல் முறை. அதுமட்டுமின்றி பாக் நீரிணையில் ராமர் பாலம் என்று மக்கள் நம்பும் பகுதியைச் சீன தூதர் குழு ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
மன்னார் பகுதி மீனவர்களுக்கு 20 பில்லியன் ரூபாய் மதிப்பில் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களைச் சீன தூதர் கொடுத்து உதவியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே, இந்திய - இலங்கை மீனவர்களிடையே பிரச்னைகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு சில இலங்கை அரசியல் தலைவர்கள் செயல்பட்டு வரும் சூழலில், சீன தூதர் பாக் நீரிணைப்பு பகுதியில் ஆய்வு செய்து மன்னார் மீனவர்களுக்கு உதவி இருப்பது மறைமுகமாக இலங்கை மீனவர்களை இந்திய மீனவர்களுக்கு எதிராகத் தூண்டி விடும் செயல் என இலங்கையிலுள்ள சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரதிநிதிகளும் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில்தான், நேற்று ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவு அருகே பாரம்பர்ய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை விசைப்படகுகளுடன் பிடித்துச் சென்றிருக்கிறது.
சீன தூதர் பாக் நீரிணைப் பகுதியில் ஆய்வு செய்த ஓரிரு நாள்களில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது இந்திய மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே, இந்திய ஆளுமைக்கு உட்பட்ட பாக் நீரிணைப்பில் யாழ்ப்பாணம் அருகிலுள்ள நெடுந்தீவு, நைனாதீவு, அயினதீவுகளில் மின்சார உற்பத்தி நிறுவனம் தொடங்க சீனா முயன்றபோது இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அந்த அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மன்னார் பகுதி மீனவர்களுக்கு மட்டும் உதவுவதன் மூலம் இந்திய அரசுக்கு எதிராக இலங்கை மீனவர்களைச் சீனா தூண்டுகிறது. இந்திய மீனவர்களைப் பிடித்து இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தச் சீனா முயல்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள், இதில் சரியான நடவடிக்கை எடுத்து 43 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் மீட்டுத் தருமாறு வலியுறுத்துகிறோம்" என்றார்.
43 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததைத் தொடர்ந்து, தற்போது தொழில் நிறுத்தம் அறிவித்திருக்கும் ராமேஸ்வரம் வட்டார மீனவர் சங்கங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றன.
from மாவட்ட செய்திகள்
via
