`தேர்தல் வாக்குறுதியை ஸ்டாலின் மீறிவிட்டார்!' - உயர்மின் கோபுர திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகள்

0

தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் திமுக அரசு விவசாயிகளை பாதிக்கக்கூடிய உயர்மின் கோபுர திட்டத்தை செயல்படுத்த தொடங்கியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது எனவும், தனது வாக்குறுதிகளை மீறி விட்டது எனவும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் கொந்தளிக்கிறார். ``இத்திட்டத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை கைவிட வேண்டும். இதற்காக தொடர் போராட்டங்களை நடத்துவோம்’’ என எச்சரிக்கிறார்.

Electric Grid

Also Read: பிரதமர் மோடி தூக்கிப்பிடிக்கும் இயற்கை விவசாயம்; இதற்கான விதை போடப்பட்டது இப்படித்தான்!

இதுகுறித்து பேசும் இவர், ``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலும், 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையிலும், பிரச்சார கூட்டங்களிலும் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், வாடகையும் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதுகுறித்து விவாதித்து முடிவெடுக்க, விவசாயிகளையும் உள்ளடக்கி குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதற்கு முன்பாக எவ்விதப் பணிகளும் தொடங்கப்படாது என கடந்த பிப்ரவரி- 21 அன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற மேற்கு மண்டல விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், தற்போது வாக்குறுதியையும் மீறி தமிழக அரசு உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டப் பணிகளை தொடங்கியுள்ளது. இது, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அப்பட்டமாக மீறும் வகையில் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில் அமைக்கப்பட்ட பவர்கிரிட், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின் கோபுரம் அமையும் இடத்திற்கு 100 சதவிகிதத்திற்கு பதிலாக 200 சதவீத இழப்பீடும், கம்பி செல்லும் இடத்திற்கு 20 சதவீதத்திற்கு பதிலாக 100 சதவீத இழப்பீடும், திட்ட பாதையிலுள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட கட்டுமானங்களுக்கு பொதுப்பணித்துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும், 100 சதவீத ஆதாரத் தொகை, மாத வாடகை, பயிர்கள் (ம) மரங்களுக்கு அரசாணை எண் 54 படி இழப்பீடு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், அனைத்து வகையான போராட்ட வழக்குகளும் தமிழக அரசால் திரும்பப் பெற்று விட்ட போதிலும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

வழக்கறிஞர் ஈசன்

தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர்மின் கோபுரம் திட்டத்தை அமைக்க தொடங்கியவுடன் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட விவசாயிகள் இணைந்து இந்த திட்டத்தை சாலையோரமாக கேபிளாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். மத்திய அரசு கொச்சியிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 1100 கிலோ வாட் திட்டத்தை 3500 கிலோ மீட்டர் தூரம் கேபிள் அமைத்துக் கொண்டு செல்லும் போது தமிழக அரசு ஏன் 765 கிலோ வாட் அளவுள்ள 300 கிலோ மீட்டர் தூரம் உள்ள திட்டத்தை கேபிளாக அமைக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பி போராடி வந்தார்கள்.

இந்நிலையில், திட்டப்பணிகளை ரத்து செய்யக் கோரியும், திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ள வெள்ளையர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தந்தி சட்டம் 1885-ஐ ரத்து செய்யக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளால் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் முடிவடையும் வரை திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என தொடர்ச்சியாக 4 மாவட்டங்களில் விவசாயிகள் 20 நாட்களுக்கும் மேலாக காத்திருப்பு போராட்டத்தை நடத்தியும், அதன் பின்பும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி, அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வீட்டின்முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. அதையொட்டி அமைச்சர், மின்சாரத் துறை உயரதிகாரிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையை ஏற்று தமிழக அரசு மேற்கொண்ட திட்ட பணியை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவிப்பு செய்தது.

Also Read: ̀ஜீரோ பட்ஜெட்' வேளாண்மை; போலி நாடகம் வேண்டாம் பிரதமரே!' - கொதிக்கும் சுபாஷ் பாலேக்கர்

அதையொட்டி திட்டப்பணிகள் நிறுத்தப்பட்டது. அதன் பின்பு தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபின்பும் திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது, ஆனால் தற்போது எவ்வித அறிவிப்பும் இன்றி தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேசாமலும் திட்டப் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். எனவே வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் உயரமான மின்கோபுரங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்’’ எனத் தெரிவித்தார். விவசாயிகளின் ஆதங்கம் குறித்து விளக்கம் பெற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ஃபோனில் தொடர்புக்கொள்ள முயன்றோம். அவர் நம்மை அழைப்பை ஏற்கவில்லை. தாமாக முன்வந்து தனது விளக்கத்தை தெரியப்படுத்தினால், அதை வெளியிட தயாராக இருக்கிறோம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/32b0NYA
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*