“இதையெல்லாம் கேக்கணும்ங்க. நாங்க எல்லாம் கட்சிக்கு வந்து 30 வருஷம் ஆச்சு. நாங்கதான் சீனியாரிட்டி.. நாங்க எல்லாம் கீழ உக்காந்துட்டு இருக்கோம். அந்தம்மா நேத்துதான் கட்சிக்கு வந்துருக்கு. எந்த பொறுப்புலயும் இல்ல. ஆனா, மேடைல ஏறி உக்காருராங்க. வசதியானவங்கனா மேல உக்கார வைப்பாங்களா?. எப்ப வந்தாலும் அந்தம்மா இப்படிதான் பண்றாங்க.
Also Read: `என் வைரல் மீம்களை ஃபார்வர்டு செய்வதற்கு முன்..?' - கோவை அ.தி.மு.க. உறுப்பினர் சோனாலி
கட்சி வேலை செய்யட்டும். அப்பறம் மேல வரட்டும். வரவேற்கறோம். போராட்டம், உண்ணாவிரதம் பண்ணி வந்தவங்க நாங்க. எதுவுமே பண்ணாம ஷோ விட்டு வந்தா ஸ்டேஜ்ல உக்கார வைப்பீங்களா?”.
கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் இந்த அர்ச்சனை வார்த்தைகள் விழுந்தன. முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே மேடையில் இடம் என்று கூறிவிட்டனர். இந்நிலையில், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் சோனாலி பிரதீப், கையில் ஒரு பார்சலுடன் நின்று கொண்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி என்ட்ரி கொடுப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சோனாலி மேடையில் ஏறி அமர்ந்துவிட்டார். “சீனியர்கள் இருக்கும்போது, அவரை எப்படி மேடையேற்றலாம்?” என்ற ஆத்திரத்தில் அதிமுக மகளிர் நிர்வாகிகள் சோனாலியை திட்டி தீர்த்தனர்.
இதுகுறித்து அதிமுக பெண் நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “வேலுமணி கட்சியை சரியாகதான் நடத்துகிறார். எங்கு அவரின் நிகழ்ச்சி நடந்தாலும், சோனாலி காரில் வந்து ஆஜராகிவிடுவார். அவர் இருப்பது கவுண்டம்பாளையம் தொகுதி. ஆனால், வேலுமணி நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் கையில் ஸ்வீட், புக் போன்ற பரிசுகளுடன் வந்துவிடுவார். சில மாதங்களுக்கு முன்பு வ.உ.சி பூங்காவில் ரூ.7 லட்சத்துக்கு ஏதோ நிகழ்ச்சி நடத்தியதாக வேலுமணியிடம் சோனாலி கூறிவந்தார்.
‘எதுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ கிட்ட கேட்டு பண்ணுங்க.’ என்று வேலுமணி சொல்லிவிட்டார். சோனாலியை போல பாசறை நிர்வாகிகள், அவ்வளவு ஏன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கூட கீழேதான் அமர்ந்திருந்தனர். சோனாலி குறித்து யாரிடம் சொன்னாலும், ‘அமைச்சர்கிட்ட (வேலுமணி) பேசிக்கோங்க.’ என்று நழுவி விடுவார்கள்.
நேற்று கூட பல மூத்த நிர்வாகிகள் சொல்லியும் அவர் மேடையில் இருந்து இறங்கவில்லை. தன்னுடைய இருப்பை வேலுமணியிடம் பதிவு செய்வதற்காக தான் இப்படி செய்து கொண்டிருக்கிறார். ‘உங்களைவிட எல்லாரும் சீனியர்கள். அட்ஜெஸ்ட் பண்ணி போங்க.’ என்று வேலுமணியும் கூறிவிட்டார். அதை எல்லாம் சோனாலி கண்டுகொள்வதாய் இல்லை. சோனாலி மேயர் பதவிக்கு முயற்சி செய்வதாக கூறுகின்றனர்.
கட்சியில் இறங்கி வேலை செய்யட்டும். எங்களைப் போல ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளட்டும். அதைவிடுத்து, நேரடியாக ஸ்டேஜில் ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, பொக்கே கொடுப்பது போன்றவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்றனர்.
இதுதொடர்பாக விளக்கம் கேட்க சோனாலி பிரதீப்பை தொடர்பு கொண்டோம். “அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. நான் நேற்று கீழே தான் அமர சென்றேன். ஆனால் கீழே இடமில்லை. சீட் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் அப்பாவுடன் நீண்ட ஆண்டு காலமாக இருந்த ஒரு அண்ணா, என்னை மேடையில் ஏற்றி அமர வைத்துவிட்டார். இதற்கு முந்தைய நிகழ்ச்சியிலும் அவர்தான் மேடையில் அமர வைத்தார்.
நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்காமல், மேடையில் அமர வைத்துவிட்டார். மற்றபடி அவர்கள் சொல்வது போல பணத்தை வைத்து எல்லாம் எதுவும் செய்வதில்லை. கடவுள் எங்கள் தேவைக்கு பணம் கொடுத்திருக்கிறார். அவ்வளவுதான்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lMZTIK
via
