விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில், தி.முக 18 வார்டுகளிலும், ம.தி.மு.க 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க., அ.ம.மு.க., சுயேச்சை ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மையான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், பெரும்பான்மையான இடத்தைக் கைப்பற்றி சாத்தூர் நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. சாத்தூர், முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் சுகுணா. இவரது கணவர் நாகராஜ். இவர், சாத்தூர் நகராட்சி அலுவலகத்தில் துப்புறவு மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
சுகுணா- நாகராஜ் தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், சாத்தூர் நகராட்சித் தேர்தலில் 19வது வார்டில் சுகுணா, அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது தன் மனைவியுடன் 19வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார் நாகராஜ். சுகுணா, ஏற்கெனவே இதே வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதால், இந்த தேர்தலிலும் எப்படியும் தன் மனைவி வெற்றி பெற்று விடுவார் என அனைவரிடமும் நம்பிக்கையுடன் சொல்லி வந்தார்.
கடந்த 19-ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது 19-வது வார்டில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட சுகுணா, 215 வாக்குகள் பெற்றார். தி.மு.க வேட்பாளர் சுபிதா,595 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து தன் மனைவி தேர்தலில் தோற்றதால், மன உளைச்சலில் இருந்த நாகராஜ், விஷம் அருந்தியுள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார் இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் நிலையப் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
”இந்த மாசத்தோட நாகராஜ் பணி ஓய்வு பெற இருந்தார். வாக்கு எண்ணும் போதே தன் மனைவி, தி.மு.க வேட்பாளரை விட வாக்கு வித்யாசத்துல தொடர்ந்து பின்னடைவாக இருந்ததைச் சொல்லி புலம்பிட்டு இருந்தார். ரிசல்ட் அறிவிச்சதும் வாடின முகத்தோட கவுண்டிங் சென்டரை விட்டு வெளியே வந்தார். யாருகிட்டயுமே பேசலை. எலக்ஷன்ல தோற்ற கவலை யாருக்கும் இருக்கத்தான் செய்யும். ஆனா, இப்படி தற்கொலை செஞ்சுக்குவார்னு யாருமே எதிர்பார்கலை” என்றனர் அப்பகுதியினர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/S0HwY7y
via
