நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பரப்புரை செய்தார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், ``கோவை மாவட்டத்துக்கு என்னென்ன திட்டங்கள் தேவையோ, அத்தனையும் கொண்டு வந்தோம். தி.மு.க ஆட்சிக்கு வந்தப் பிறகு இந்தத் திட்டப் பணிகள் எல்லாம் மந்தமாகிவிட்டது.
தி.மு.க ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை. அதற்கு அவர்களின் பொங்கல் பரிசே உதாரணம். அது எந்த நிலையில் இருந்தது என்று மக்களுக்கு தெரியும். பணத்தை மட்டும் வைத்து தி.மு.க வெற்றி பெற நினைக்கிறது.
வெளியூரில் இருந்து வந்து கொலுசு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அதை கோவை மக்கள் நம்ப மாட்டார்கள். இன்றைக்கு சட்டசபைத் தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க தான் ஆட்சியைப் பிடிக்கும். காவல்துறையை வைத்து எங்கள் நிர்வாகிகளை விசாரணை என்று அலைக்கழிக்கின்றனர். காவல்துறையினர் நடுநிலையுடன் நடந்து கொள்ளுங்கள். தி.மு.க-காரன் போல நடந்து கொள்ள வேண்டாம்.
கோவை மேயர் பதவியை கண்டிப்பாக நாங்கள்தான் பிடிப்போம். ஒவ்வொரு வீடு வீடாக போய் மக்களிடம் பேசுங்கள். தயவு செய்து பொறுப்பாளர்கள், தோழர்கள் யாரும் தூங்கக் கூடாது. எதிரணியின் சதித் திட்டங்களை முறியடிக்க வேண்டும்" என்றார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ``கருணாநிதி முதல்வராக இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தப்பிறகு ஜெயலலிதாவேதான் உச்ச நீதிமன்றம் வரை சென்று அரசாணையை பெற்று வந்தார்.
அவர் மறைந்த பிறகும் காவிரி நதி நீர் ஆணையம், முறைப்படுத்தும் குழுவை பெற்று தந்த பெருமை அ.தி.மு.க-வுக்கு தான் இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் வளர்ச்சி திட்டங்கள் நடைபெற்றன.
சட்டசபை தேர்தலின்போது தி.மு.க-வினர் 505 வாக்குறுதிகளை கொடுத்தனர். அந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிட்டனர். அ.தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையை உயர்த்தி கொடுக்க சொன்னார்கள். தற்போது அவர்கள் வழங்கியுள்ள பொங்கல் பரிசில் உள்ள அரிசியை மாடு கூட சாப்பிடவில்லை.
அதை மாட்டுக்கு வைத்தால், மாடு முறைத்துப் பார்க்கிறது. கொங்கு மண்டலம் இன்றுவரை அ.தி.மு.க-வின் எஃகு கோட்டையாக உள்ளது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/lQ08VJA
via
