தஞ்சாவூர்: மூன்று பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை! - செல்போன்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்

0

தஞ்சாவூரில், இந்து மதத்தை பற்றி சமூக வலைதளங்களில் தவறாக கருத்துக்களை பதிவிட்டதாகவும், கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாகவும் கூறி இஸ்லாமியர்களான மூன்று பேரின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் மூன்று பேரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் நடத்திய உறவினர்கள்

கிலாபத் இயக்கத்தை சேர்ந்த அப்துல்காதர் என்பவரை ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவதாகவும் கூறி என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சை கீழவாசல் மகர் நோன்புசாவடி தைக்கால் தெருவை சேர்ந்த மெக்கானிக் அப்துல் காதர், முகமது யாசின், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்த அகமது ஆகியோருக்கு கிலாபத் இயக்கத்தில் தொடர்பிருப்பதாக சிறையில் இருப்பவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

சோதனை நடத்தப்பட்ட அப்துல்காதர்

இதனை தொடர்ந்து தஞ்சாவூர் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் தனி தனி குழுக்களாக பிரிந்து சென்று இன்று காலை 5 மணியிலிருந்து மூன்று பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட சோதனையை கண்டித்து மகர்நோன்பு சாவடியில் உள்ள அப்துல்காதர் வீடு அமைந்திருக்கும் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை எனவும் கோஷமிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியிலும் மற்றும் மூன்று பேர் வீடுகளுக்கும் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சோதனையின் போது வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தபடி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் குறிப்பிட்ட அந்த மூன்று பேரிடமும் விசாரணை செய்தனர். அவர்களுக்கு கிலாபத் இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறதா? மன்னை பாபா கூறியது உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தஞ்சாவூரில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள்

முடிவில், அப்துல்காதர், முகமது யாசின், அகமது ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். மேலும் அப்துல்காதரின் ஆதார் கார்டு, பேன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அப்துல்காதர் கூறுகையில், ``சுமார் 2,000 பேர் வசிக்கும் பகுதியில் திடீரென காலை 5.30 மணிக்கு என்.ஐ.ஏ-விலிருந்து வருவதாக கூறி அதற்கான பேப்பரை காட்டி சோதனை மேற் கொண்டனர். சரி என்னுடைய வக்கீலை தொடர்பு கொள்வதாக தெரிவித்தேன். ஆனால் சோதனை முடியும் வரை யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என கூறி விட்டனர். அதன் பிறகும் என்னுடைய வக்கீலிடம் பேச விடாமல் மிரட்டும் விதமாக கையெழுத்து போடுங்க என்றனர்.

பாதுகாப்பு பணியில் போலீஸ்

என்னுடைய ஆன்ட்ராய்டு அல்லாத பட்டன் செல், ஆதார் அட்டை, பேன் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை எடுத்து சென்றனர். செல்ல கொடுத்திடுங்க என்றதுக்கு தர முடியாது சொல்லியதுடன் விவரம் கேட்டதுக்கு எதுவாக இருந்தாலும் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு வந்து பேசிக்கங்க” என கூறி விட்டு சென்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kAShzYa
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*