திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆண் குழந்தை... `வெற்றிக்கு முன்னரே பரிசு’ - நெகிழும் கணவர்

0

தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் சுறு சுறுப்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இன்று பிரசவலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. வெற்றிக்கு முன்னரே பரிசு கிடைத்து விட்டதாக அந்த பெண் வேட்பாளரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

குழந்தை பிறந்த பெண் திமுக வேட்பாளர்

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் 51-வது வார்டில் திமுக சார்பில் டாக்டர் அஞ்சுகம் பூபதி போட்டியிடுகிறார். இவர் திமுகவில் தஞ்சை மத்திய மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருக்கிறார். இவரின் கணவர் வெற்றிக்குமார் திகவில் மாநில இளைஞரணி துணை செயலாளராக இருக்கிறார். இவர்களுக்கு மூன்றரை வயதில் கயல் என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நிறைமாதிரியான கர்ப்பிணியான அஞ்சுகம் பூபதிக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட திமுக தலைமை சீட் வழங்கியது. பிப்ரவரி 25-ம் தேதிக்குள் குழந்தை பிறந்து விடும் என அறியப்பட்ட நிலையிலும் தினமும் காலை, மாலை என இரண்டு வேளையும் ஆறு மணி நேரம் வரை நடந்தே சென்று பிரசாரம் செய்து வந்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி

தான் ஒரு மகப்பேறு மருத்துவர் என்பதால் எந்த பயமும் இல்லாமலும், சோர்வும் அடையாமல் அஞ்சுகம் பூபதி பிரசாரம் செய்வதற்கு உதவியாக இருந்தது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பிரசாரத்திற்கு கிளம்பிய அஞ்சுகம் பூபதிக்கு பிரசவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருளானந்த நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மதியத்திற்கு மேல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையறிந்த அவரின் ஆதரவாளர்கள் மருத்துவமனை முன் திரண்டனர். தாய் மற்றும் சேய் நலமாக இருப்பதாக டாக்டர் அஞ்சுகம் பூபதியின் கணவர் வெற்றிக்குமார் எல்லோரிடத்திலும் தெரிவித்தார்.

வெற்றிக்குமாரிடம் பேசினோம், ``தலைமையின் மீது விசுவாசம் கொண்ட அஞ்சுகம் பூபதிக்கு தலைமை நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்கியது. ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் அஞ்சுகம் பூபதி. அவருடன் பக்கபலமாக நின்று கட்சியினர் வேலை செய்து வந்தனர். அஞ்சுகம் பூபதிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக வாக்கு கேட்டு செல்லும் போது எங்க வார்டை சேர்ந்த மக்கள் கூறி வந்தனர்.

கணவருடன் டாக்டர் அஞ்சுகம் பூபதி

இந்த சூழலில் பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு என் மனைவி அஞ்சுகம் பூபதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னரே எங்களுக்கு பரிசு கிடைத்து விட்டது. இதை கேள்விப்பட்ட கட்சியினர் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் மீண்டும் அஞ்சுகம் பூபதி பிரச்சார களத்துக்கு செல்வார்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/cIlvuEo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*