உலகம் முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர், இந்த நூற்றாண்டின் மூன்றாம் உலகப்போராகப் பேசப்படுகிறது. வல்லரசு நாடுகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது தொடுத்து வரும் போரால் அந்நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டு மீதான போரை நிறுத்தக்கோரி பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்து வருகிறது. உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைன் நாட்டில் இருந்து தமிழகம் திரும்ப விரும்புவோரின் செலவை அரசே ஏற்கும் என்று ஒரு அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் பதற்றமான சூழ்நிலையில் இருந்து விடுபட்டு தமிழகம் திரும்பிய தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மருத்துவ மாணவர்கள் 5 பேர் இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினர். உயிர் பிழைத்து வந்த அவர்களை மருத்துவ மாணவர்களை அவரின் உறவினர்கள் கட்டி ஆரத்தழுவி வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தனித்தனியே அவரவர் ஊர்களுக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.
இதில் மருத்துவ மாணவி ஹரிணியிடம் பேசினோம், “ எனக்குச் சொந்த ஊரு கோவில்பட்டி. சொந்த ஊர்ல மேல்நிலைக்கல்வி முடிச்சதுமே 'நீட்' கோச்சிங் முடிச்சு, நீட் டெஸ்ட் எழுதினேன். அதுல 233 மார்க் எடுத்து தேர்வானேன். தொடர்ந்து, உறவினர் ஒருவரோட ஏற்பாட்டுல உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் அருகில் உள்ள 'வின்னிஸ்டா நேஷனல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க எனக்கு சீட் கிடைச்சுது. இதற்காக மூணு வருஷத்துக்கு முன்னால உக்ரைனுக்குப் போனேன். இப்போ 3-வது வருஷம் படிச்சுட்டு வர்றேன். இந்த நிலையில்தான் போன பிப்ரவரி மாசம் 20-ம் தேதிக்கு மேல் உக்ரைனில் போர் நடக்கும் சூழல் உண்டானது.
நாடே பரபரப்பாக காணப்பட்ட நிலையில் நானும் என்னுடன் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் என்ன செய்யுறதுன்னே தெரியாம விழிப்பிதுங்கி நின்றோம். யூனிவர்சிடி நிர்வாகமும் நாடு திரும்ப விரும்புபவர்கள் உடனடியாகப் புறப்படலாம்னு அறிவிச்சாங்க. எங்க யூனிவர்சிடியில கிட்டத்தட்ட 3,000 பேருக்கு மேல் மருத்துவம் பயின்று வந்தோம். சுமார் 200 பேர் எல்லாருமே அவசர அவசரமா உடைமைகளை எடுத்துக்கிட்டு புறப்பட்டோம். எந்த நேரம் வேண்டுமானாலும் எங்க பகுதியில் தாக்குதல் நடக்கலாம்ங்கிற பதற்றமான சூழ்நிலையில 26-ம் தேதி, உக்ரைன் நாட்டின் எல்லைக்கு இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் மூலம் வாகனத்தில் வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து ருமேனியா நாட்டுக்கு 8 கிலோமீட்டர் தூரம் மைனஸ் 7 டிகிரி குளிரில் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு நடந்தே சென்றோம். கை, கால், விரைத்து கடும் குளிரில் நடுங்கிய சில மாணவர்கள் அயர்ந்து விட்டனர். இருந்தாலும் உயிரை கையில பிடிச்சுக்கிட்டு ’ருமேனியா’ நாட்டின் அகதிகள் முகாமிற்கு வந்து சேர்ந்த பிறகுதான் சற்று நிம்மதி கிடைத்தது. ஏராளமான இந்தியர்கள் அகதிகளாக வெளியேறி ருமேனியா நாட்டுக்கு வந்து சேர்ந்ததால் அவர்களை அவர்கள் ஒவ்வொருவரையும் ஒருங்கிணைத்து தனித்தனி குழுவாக அந்தந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக நாங்கள் அகதிகள் முகாமில் 3 நாள்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்னும் எங்கள்போல் பல மருத்துவ மாணவர்கள் அந்நாட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். அவங்க எல்லாரையும் மீட்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கணும்.
அங்கு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது. அதை வாங்கித்தான் உணவருந்தினோம். பின்னர், மூன்று நாட்கள் கழிச்சு மார்ச் 2-ம் தேதி ருமேனியா நாட்டிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டோம். பின், அங்கிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து, தூத்துக்குடிக்கும் விமானத்தில் வந்து சேர்ந்துள்ளோம். சொந்த ஊர் திரும்பிய பிறகுதான் முழுமையான மன நிம்மதி கிடைத்துள்ளது. ருமேனியா நாட்டின் அகதிகள் முகாமில் இருந்து என்னுடன் தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவ மாணவர்கள் புறப்பட்டு வந்தனர்.
உக்ரைன் நாட்டுல நிலவும் போரின் பதற்ற சூழ்நிலையால் கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு போலந்து நாட்டில் கல்வி பயில ஏற்பாடு செய்து தருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்பதில் எங்களுக்கு ஐயப்பாடு உள்ளது. ஏனெனில் , எங்கள் பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இன்னும் வகுப்புகள் கூட ஆரம்பிக்கப்படாத நிலையில் தான் போர் தொடங்கியுள்ளது. அம்மாதிரியான மாணவர்கள் உடனடியாக மாற்று சான்றிதழ் பெற்று அண்டை நாடுகளில் மருத்துவ கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகள் ஒரு பகுதியில் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஏற்கனவே மருத்துவ படிப்பில் சேர்ந்து மூன்று ஆண்டுகள், நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்த என் போன்றவர்களின் நிலைதான் என்னவாகும் என்பதில் ஐயப்பாடு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் தணிந்து மீண்டும் அமைதியான சூழலுக்கு திரும்பவேண்டும். கல்விக்காக மட்டுமல்ல, மனித உயிர்களின் நலனுக்காகவாது இந்த போரை இருநாடுகளும் நிறுத்த வேண்டும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/ny8d0al
via
