திருவாரூர் ஆழித்தேர்: 92 வகை அலங்காரங்கள்... மரக்கட்டுமானம் 350 டன்; மலர், காகித அலங்காரம் 50 டன்!

0
ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் எனப் போற்றப்படக்கூடிய திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதன் மொத்த உயரம் 96 அடி. இதன் மரக்கட்டுமானம் மட்டுமே 350 எடை கொண்டது. தேர் திருவிழாவின் போது அலங்கரிக்கப்படும் மலர், காகிதம் உள்ளிட்டவற்றின் எடை 50 டன். இது மட்டுமல்ல, திருவாரூர் ஆழித்தேரின் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

திருவாரூரில் உள்ள தியாகராஜர் சுவாமி திருக்கோயில் இந்திய அளவில் புகழ்மிக்கது. இக்கோயிலில் உள்ள தியாகராஜர் தேர், ஆசிய அளவில் மிகப்பெரிய தேர் எனப் போற்றப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய தேர்த் திருவிழாவை தரிசிக்க, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இங்கு நடைபெறக்கூடிய தேர்த் திருவிழா, உலக அளவில் பிரசித்திப் பெற்றது.

திருவாரூர் ஆழித்தேர்

இத்திருக்கோயில் பலநூறு ஆண்டுகள் பழைமை மிக்கது. சைவ சமய மரபின் தலைமை பீடம் என இக்கோயில் போற்றப்படுகிறது. கோயில் 5 வேலி, குளம் 5 வேலி... கோயிலுக்கு நிகரான பரப்பில், இதன் திருக்குளம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இக்கோயிலில் நடைபெறக்கூடிய ஆழித்தேர்த் திருவிழா உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக இத்தேர் விளங்குகிறது. மக்கள் வெள்ளத்தில் உருண்டு வரக்கூடிய பிரமாண்டத் தேர் என்பதால் மக்கள் இத்தேரை ஆழித்தேர் என அழைக்கின்றனர்.

‘ஆரூரா... தியாகேசா’ என்று பக்தர்கள் முழக்கமிட பிரமாண்டமான தேர் ஆடி அசைந்து வருவதைக் காணும் மக்கள் கூட்டம் பக்தி பரவசத்தில் மூழ்கும். இந்த ஆண்டு 15.3.22-ம் நாள் பங்குனி 1-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில்தான் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆழித்தேரின் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இதன் உளவாரப் பணிக்குழுவின் தலைவர் கனகசபாபதியிடம் நாம் பேசியபோது பல ஆச்சர்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

‘’இக்கோயிலின் பழைமையான தேர், 1925-ம் ஆண்டு எரிந்து போனதால், 1930-ல் புதிய தேர் செய்யப்பட்டு, 145-ம் வருடம் வரை ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு ஏனோ, தேர்த் திருவிழா நடத்தப்படவில்லை. அந்தத் தேர் சிதிலடமைந்ததால், 1970-களின் தொடக்கத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலில் இரும்புச் சக்கரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட தேர் இதுதான். திருச்சி பி.ஹெச்.எல். நிறுவனம் இரும்புச் சக்கரங்களை உருவாக்கிக் கொடுத்தது. அதற்கு முன்பு இருந்த தேரில் மரத்தாலான 10 சக்கரங்கள் இருந்துள்ளன. 1970-களில் செய்யப்பட்ட திருவாருர் ஆழித்தேர் வடிவத்தில்தான் சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது.

உளவாரப் பணிக்குழுவின் தலைவர் கனகசபாபதி

கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பாலங்களில் இத்தேரின் உருவம் பொறிக்கப்பட்டிருகுக்கும். இக்கோயிலின் கும்பாபிசேகத் திருப்பணிகளின் காரணமாக, 1983-88 வரை, தேர்த் திருவிழா நடத்தப்படவில்லை. 1993-க்கு முன்பு வரை இத்தேரின் நான்கு சக்கரங்களும் கட்டிங் டைப்பில் கூர்மையாக இருந்ததால், சாலையில் பதிந்துவிடும். ஜாக்கி வைத்துத் தூக்குவார்கள். இதனால் தேர் சுற்றி வந்து நிறைவு பெற 2-3 நாள்கள் ஆகிவிடும். இப்பிரச்னைக்கு தீர்வு காண, 1993-ம் வருடம் இத்தேரின் முன் பக்க சக்கரங்கள், பலூன் வடிவத்தில் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இத்தேர் சிதிலமடைந்ததால், 2010-ம் ஆண்டு 3 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இத்தேரில் நடவாசனம், பத்மாசனம், தேவாசனம், சிம்மாசனம் என மொத்தம் நான்கு அடுக்குகள் உள்ளன.

இதன் மொத்த உயரம் 96 அடி. இதன் கலசத்தில் இரண்டு வெள்ளிக் குடைகள் அமைக்கப்படும். உலகில் வேறு எங்கும், தேர் கலசத்தில் வெள்ளிக் குடைகள் கிடையாது. இத்தேரில் 64 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கட்டுள்ளது. ரிக், யஜூர், சாமம், அதர்வனம் ஆகிய நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு குதிரைகளையும் கொண்டிருக்கும். இத்தேரில் 400 மரச் சிற்பங்கள் உள்ளன. இத்தேரின் நிலையான எடை 350 டன். தேர்த் திருவிழாவின் போது, சுமார் 2500 மூங்கில்கள் மற்றும் 150 கட்டுகள் நைலான் கயிறால் மேல் கட்டுமானம் அமைக்கப்பட்டு, பூக்கள், காகிதம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்படும்.

ஆழித்தேர்
குந்தியாலம், கொடியாலம், பாம்புயாலம் உள்பட மொத்த 92 அலங்காரங்கள் செய்யப்படும். இவற்றின் எடை சுமார் 50 டன். இத்தேரில் இதுபோல் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. ஆழித்தேர் உலா வரும் போது இதனைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி. பக்திப் பரவசம் மேலோங்கும்’’ எனத் தெரிவித்தார்.

ஆழித்தேர், திருவாரூரின் சிறப்பு மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகத்தின் பெருமை மிகு சிறப்பாகும்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/rq82ITo
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*