``நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு!" - உற்சாகப்படுத்திய ஓ.ராஜா... கணவர் சமாதியில் கண் கலங்கிய சசிகலா

0

சசிகலா தஞ்சாவூரில் நடைபெற்ற தன் கணவர் ம.நடராசனின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுடன் எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் நிறைவேறவும், கஷ்டங்கள் விலகி ஐஸ்வர்யம் உண்டாகவும், உயர்ந்த பொறுப்புக்கு வருவதற்கும் சமாதியிலேயே கோ பூஜை செய்து வழிப்பட்டுள்ளார். இதில் கலந்து கொண்ட ஓ.ராஜா, ``நீங்க பூ தூவுங்கம்மா உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிடுச்சு" என்று சசிகலாவிடம் கூறினார்.

கணவர் ம.நடராசன் நினைவிடத்தில் சசிகலா

தஞ்சாவூர் விளார் கிராமத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே அமைந்துள்ள சசிகலா கணவர் ம.நடராசன் நினைவிடத்தில், அவருடைய நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சசிகலா கலந்து கொள்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் அவர் ஆதரவாளர்கள் நினைவிடத்தின் முன் பகுதியில் சசிகலாவை வரவேற்று பிளக்ஸ் வைத்திருந்தனர். கணவர் நினைவு நாளுக்கு வருவதை, `வருக... வருக' என்ற வாசகத்துடன் அச்சடித்திருந்ததை விரும்பாத சசிகலா அதை மட்டும் மறைக்க வலியுறுத்தியதாகவும், சசிகலா கண்ணில் படுவது போல் இருந்த பிளக்ஸ்களில் அந்த வாசகத்தை மறைத்ததாகவும் ஆதரவாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஓ.ராஜா கலந்து கொள்வார் என முன்பே தகவல் பரவிய நிலையில், காலை 5:40 மணிக்கு முதல் ஆளாக நினைவிடத்திற்கு வந்தார் ஓ.ராஜா. பின்னர், தான் உட்கார்ந்த நாற்காலியிலிருந்த தூசியை தானே துடைத்த பிறகு உட்கார்ந்தார். அப்போது ஓ.ராஜவை செய்தி புகைப்படக்காரர்கள் படம் எடுக்க முயல அவர்களிடம் கடுகடுத்தார்.

கோ பூஜை செய்த சசிகலா

`சசிகலா வருவதற்கு முன்பு, யாரும் உள்ளே நிக்காதீங்க... அவர் நிம்மதியா சாமி கும்பிடணும்' என மீடியாவைப் பார்த்து உறவினர் ஒருவர் கண்டிப்பு காட்டியதுடன், `இல்லன்னா சசிகலா சட்டுனு கோபபட்டுடுவார்' என்றும் பயமுறுத்தினார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அருளானந்த நகரிலிருந்து புறப்பட்ட சசிகலா சரியாக 6:10 மணிக்கு கணவர் நினைவிடத்திற்கு வந்தார். முன்னதாகவே வந்திருந்த ஓ.ராஜாவை பார்த்து லேசாக தலையசைத்து விட்டு உள்ளே சென்றார். அப்போது பலர் சமாதிக்குள் நுழைய முயல சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கணவர் ம.நடராசன் போட்டோவிற்கு ஏலக்காய் மாலை அணிவித்து மரியாதை செய்தார் சசிகலா. பின்னர் சமாதியிலேயே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பசு மாடு, கன்று குட்டிக்கு கோ பூஜை செய்தார். எதிரிகளை வீழ்த்தவும், நினைத்த காரியம் நிறைவேறவும், கஷ்டங்கள் விலகி ஐஸ்வர்யம் உண்டாகவும், உயர்ந்த பொறுப்புக்கு வருவதற்காகவும் பசு மாடு, கன்றுக்குட்டிக்கு சந்தனம், பொட்டு வைத்ததுடன் வேட்டி, துண்டு அணிவித்து பழம் கொடுத்து கோபூஜை செய்தார். மேலும் பசுவை ஏழு சுற்று சுற்றி வந்தார்.

சசிகலா

பின்னர் கணவர் சமாதியில் தீபம் ஏற்றியதுடன் அவர் போட்டோவுக்கு முன்பகுதியில் அமர்ந்தார். அப்போது சசிகலா அருகே வந்து உட்கார்ந்த ஓ.ராஜாவை உறவினர்கள் சிலர் பின்னுக்கு தள்ளிவிட்டனர். எரியும் தீபத்தையும், கணவர் ம. நடராசன் போட்டோவையும் பார்த்து கொண்டே இருந்த சசிகலா லேசாக கண்ணீர் சிந்தினார். அருகில் இருந்த ஒருவர் ஒவ்வொரு டிஸ்யூ பேப்பராக கொடுத்து கொண்டே இருக்க, கண்களில் வழிந்த நீரை டிஸ்யூ பேப்பரில் ஒத்தி எடுத்து துடைத்து கொண்டே இருந்தார். சசிகலா கண்கள் கலங்குவதை பார்த்த உறவினர்கள் சிலரும் லேசாக கண் கலங்கினர்.

தன் அருகில் உட்கார்ந்திருந்த சி.ஆர்.சரஸ்வதி மற்றும் பெண் நிர்வாகி ஒருவரிடம் நீண்ட நேரம் சசிகலா ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். நிகழ்ச்சியில் கிட்டதட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெரியநாயகி குழுவினர் வள்ளலாருடைய திருவருட்பா பாடல்களை பாடியதுடன், `அய்யா ம.நடராசன் உங்களை முதலமைச்சர் சீட்டுல உட்கார வச்சுட வேண்டும் என நினைச்சார். அவருடைய கனவு லட்சியம் எல்லாம் அதுவாகத்தான் இருந்தது.

ம.நடராசன் நினைவிடம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என நினைத்து வாழ்ந்த ம. நடராசன் கண்ட கனவு நிச்சயம் நிறைவேறும்' என்றனர். அப்போது பின் பகுதியில் நின்றவரின் செல்போனிலிருந்து, நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற ரிங்டோன் ஒலித்தது. அதைக்கேட்ட சசிகலா முகத்தில் லேசாக புன்னகை ததும்ப, நெகிழ்ச்சியடைந்த உறவினர்கள் இனி எல்லாமே நல்லதா நடக்கும் என உருகினர்.

அதைத் தொடர்ந்து ஓ.ராஜா சமாதியில் மாலை வைத்து மரியாதை செய்தார். அவரிடம் நடராசனின் தம்பி மகன் டாக்டர் ராஜீ பூக்கள் வைக்கப்பட்டிருந்த மூங்கில் தட்டினை எடுத்து கொடுத்தார். அதை வாங்கிய ஓ.ராஜா சசிகலாவை அழைத்து அவரிடம் பூக்களை கொடுத்து, ``நீங்க பூ தூவுங்கம்மா... உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆச்சு" எனச் சொல்ல உடனே சசிகலா பூ தூவினார். பின்னர் ஓ.ராஜா பூ தூவியதுடன் சசிகலாவுடன் நின்று குரூப் போட்டோ எடுத்து கொண்டார்.

சசிகலா,ஓ.ராஜா

அதையடுத்து, குடும்ப உறவினர்களும் குரூப் போட்டோ எடுத்து கொள்ள சரியாக 7:05 மணிக்கு சசிகலா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தன் கணவர் சமாதியில் சசிகலா இருந்ததுடன், சிறப்பு பூஜைகளையும் செய்தார். பின்னர் சசிகலா ஓ.ராஜாவுடன் சந்தித்து பேச இருப்பதாகவும் சொல்லப்பட்டது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/bnDIW8j
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*