பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
5.30 மணிக்கு வள்ளி அம்பிகை, திருக்கோயிலில் இருந்து அலங்காரச் சப்பரத்தில் புறப்பட்டு, அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சிவகொழுந்தீஸ்வரா் ஆலயத்தில் தபசுக்காக எழுந்தருளினார். காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 2.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற உள்ளது.
மாலை 3.20 மணிக்கு திருக்கோயிலில் இருந்து உற்சவர், சுவாமி குமரவிடங்கப் பெருமான், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, சிவகொழுந்தீஸ்வரா் ஆலயம் சென்றடைந்து வள்ளி அம்பிகைக்கு தபசுக் காட்சி அளித்தார். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 'தோள்மாலை' மாற்றும் வைபவம் நடைபெற்றது.
தொடா்ந்து, சுவாமியும் அம்மனும் திருவீதி உலா வந்து, இரவு 10 மணிக்கு மேல் திருக்கோயிலில் 108 மகாதேவா் சந்நிதி முன்பு சுவாமிக்கும் வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது. திருக்கல்யாணம் என்பதால் திருக்கோயிலில் இரவு மூலவர் சுப்பிரமணியருக்கு 'ராக்கால அபிஷேகம்' நடைபெறாது என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பக்தர்கள், அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் பெற்றனர். அங்கப் பிரதட்சணம், பால்குடம், காவடியாட்டம், பஜனை, கந்த சஷ்டிக் கவசப் பாடல் என முருக பக்தர்களின் 'அரோகரா' கோஷம் செந்தூரில் ஓங்கி ஒலிக்கின்றது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு, அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா திருக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனையும் நடைபெற்றன.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/X48Kd0k
via
