சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு கல்லூரிக்குச் சென்ற கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது ஆணவக்கொலை என்று கோகுல்ராஜின் குடும்பத்தினரும் பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டின. இந்த கொலை வழக்கில் தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், ஜோதிமணி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, ஜோதிமணி இறந்துவிட்டார். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்திலிருந்து இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கோகுல்ராஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் ஆஜராகி வந்தார். இந்த நிலையில், தற்போது சாட்சிகள் விசாரணை முழுமையாக முடிந்தநிலையில், இன்று மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில் குற்றவாளிகள் 4 பேர் விடுவிக்கப்பட்டு தீரன் சின்னமலைக் கவுண்டர் அமைப்பின் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனை விவரம் வருகின்ற 8-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3RkWNCY
via
