“அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடுவதே எங்களின் குறிக்கோளாக இருந்தது. அதற்காக உண்மையாக போராடவும் செய்தோம். ஆனால் மக்களின் பிரச்னையை எந்த அரசாங்கம் தீர்த்திருக்கிறது. அணுசக்தி ஆபத்தில்லை என்று ஒருவரும் கூறிவிடமுடியாது. முதலிரண்டு உலைகளுக்கு நாங்கள் போராடியது போய் இப்போது எட்டாவது உலைக்கான ஒப்பந்தம் வரை போடப்பட்டுள்ளது. என்றைக்கிருந்தாலும் எங்களுக்கான மரணக்குழிதான் இது. வாழும் ஒவ்வொரு நாளையும் ஒருவித பயத்துடனே கடத்திக்கொண்டிருக்கோரும்” இடிந்தக்கரை கடற்கரை போராட்டத்தில் துணிச்சலாக முன்னின்ற சுந்தரின் வார்த்தைகளில் பய உணர்வோடு சேர்த்து ஒருவித மெல்லிய களைப்பும் இழையோடுகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான இந்த மக்கள் போராட்டம் நடைபெற்று இந்த ஆண்டோடு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. போராட்டத்தின் தற்போதைய நிலை, இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலையால் அம்மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசினேன்.
“ வழக்குகள் போடப்பட்டு ஊரைவிட்டு வெளியேற முடியாதபடி செய்தது, எங்கே பயணம் செய்தாலும் உளவுத் துறையை பின்னால் அனுப்பிவிடுவது. இப்படி எத்தனையோ நெருக்கடிகள். எங்கள் குழந்தைகளால் சுதந்திரமாக பள்ளிக்குகூட சென்றுவர முடியவில்லை. எங்களுக்கு வேண்டாம் என்பதை வலியுறுத்தி அரசாங்கத்தைப் எதிர்த்துப் போராடினோமே தவிர வேறு எந்த தப்பை செய்தோம். போராட்டம் மிகத் தீவிரம் அடைந்தபோது மண்ணைத்தான் வீசினோமே தவிர எங்களிடம் ஒரு ஆயுதமும் இருந்திருக்கவில்லை. அன்றைக்கு கண்ணீர் புகை குண்டுகள் எங்களை நோக்கி வீசப்பட்டபோது எங்கள் பக்கம் கடல் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பலரும் இறந்து போயிருப்போம். நியாத்திற்காக போராடிய எங்களில் பலரும் தேச துரோக வழக்குகளுக்கு உள்ளானோம். இந்நாட்டை பற்றி வேறு நாட்டிற்கு காட்டி கொடுத்தோமா என்ன. என் மண் எனக்கு வேண்டும் என்று சொல்வது குற்றமா “ என்று உணர்ச்சி பொங்க பேசும் சுந்தரி உண்மையில் அந்த ஊரை சேர்த்தவர் கிடையாது.
ஆம், அவர் திருமணமாகி வந்த ஊர்தான் இடிந்தகரை. அதற்கு முன்பாக இதை பற்றிய எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை. 2011-ஆம் ஆண்டில் ஜப்பான் ஃபுகுஷிமா அணு விபத்துக்குப் பிறகுதான் இதன் தீவிரத் தன்மை குறித்து அந்த ஊர் மக்களுக்கு தெரியவந்திருக்கிறது. முதல்கட்டமாக உண்ணாவிரதம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்த அதன் 12-வது நாளில் பலரும் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். “ அந்த சம்பவம் என்னை ரொம்பவும் பாதித்தது . நாம் எதுக்கு வாக்களிக்கிறோம், நமக்கு ஆதரவாக யாரும் வருவதில்லையே என்று என் மனசாட்சி ரொம்பவும் உறுத்த மேடைகளில் பேசத்தொடங்கினேன். அதன் பிறகு இந்த போராட்ட களத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை” என்று தான் போராட்ட களத்தில் முதன் முதலாக நுழைந்தது பற்றி கூறுகிறார் சுந்தரி.
“ நாங்கள் மின்சார உற்பத்தியை தடுத்து நாட்டின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கிறோம் என்று எங்களை சிலர் புரிந்துகொள்ளாமல் இருந்தனர். ஆனால் அப்படி மட்டும் கூறி விட முடியாது. ஏனென்றால் இது பற்றிய புரிதல் நிறைய பேருக்கு இருந்தும் அவர்களால் எங்களுக்கு குரல் கொடுக்க முடியவில்லை. காரணம் அரசாங்கத்தை எதிர்ப்பதால் சந்திக்கவேண்டி இருக்கும் வழக்குகளால் அவர்கள் தயங்கி இருக்கலாம். மேலும் எங்களை பின்னிருந்து சிலர் இயக்குவதாகக் கூறுவதுண்டு. அதற்கான அவசியமே கிடையாது. பணம் வாங்கிக்கொண்டு சில மணிநேரம் மட்டும் நடக்கும் கட்சிக் கூட்டம் கிடையாது இது. சுமார் ஐந்து வருட காலம் இதற்காக உணர்ச்சிகரமாக போராடியிருக்கிறோம். பணம் வாங்கி கொண்டு இத்தனை காலம் போராட முடியுமா. எங்கள் அருகிலேயே இவ்வளவு பெரிய ஆபத்து இருக்கும் போதும் எதுவும் செய்யாமல் நாங்கள் எப்படி இருக்க முடியும்” என்று கூறும் சுந்தரி இந்த போராட்டத்தால் மிக அதிக கஷ்டங்களை சந்தித்ததாக விவரிக்கிறார்.
“ஆண்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் யாரிடம் பேசினாலும் பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் ஒரு பெண்ணாக இதை செய்வதை நம் வீடு ஏற்றுக்கொண்டாலும் இந்த சமூகம் சும்மா இருக்காது. நமக்கு ஒரு பட்டத்தையே தந்துவிடுவார்கள். அப்படி நிறைய வேதனைகள், வலிகள்.
தொடக்கத்தில் இதை கேட்டும் போது கஷ்டமாக இருக்கும். ஆனால் பழக பழக உலகமே இப்படித்தான் என்று தெரிந்துவிடும். இன்னொருபுறம் என் குழந்தைகளை அப்படியே விட்டுச் செல்வதும் தாயாக எனக்குக் கடினமாக இருக்கும். முன்பு ஒரு சின்ன பெட்டி கடை நடத்தி வந்தேன், பீடியும் சுற்றுவேன். அனைத்தையும் மூட வேண்டி இருந்தது. நான் சிறை செல்லும்போது என் இரு குழந்தைகளுக்கும் சகோதரர்கள் வீட்டில் சில மாதங்கள் இருந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் மதுரையில் தொடர்ந்து 60 நாட்கள் கையெழுத்து போட வேண்டி இருந்தது. சுமார் ஆறு மாதம் கழித்து தான் நான் வீட்டிற்கே வந்தேன். அதனால் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டேன்.புதிதாக ஊறுகாய் தொழில் ஒன்றை தொடங்கி அதுவும் சரிவராமல் போக இப்போது வீட்டிலேயே சிறிய அளவில் இட்லி வியாபாரம் செய்து வருகிறேன். ஊரிலுள்ள பெரும்பாலான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதால் எனக்கு அப்போது தனிப்பட்ட உதவி ஏதும் கிடைக்கவில்லை. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஏனென்றால் எல்லா மக்களுக்குமான போராட்டம் இது.”
ஆனால் அணுக்கழிவு மையம் அமைக்கப்படும் என்ற இப்போது அறிவிப்பு வெளியானபோது மக்களிடையே பெரிய எழுச்சி ஒன்றும் ஏற்படவில்லை. இதற்கான காரணத்தையும் கூறுகிறார் சந்தரி “ மக்கள் பலரும் தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளாலேயே சோர்ந்து போய் உள்ளார்கள். இந்த அணுமின் நிலையம் கட்டிய பிறகு இந்த கடலை நம்பி பெரிதாக எந்தத் தொழிலும் இல்லை. எங்களுக்கு அதிகம் கிடைத்துக்கொண்டிருந்த கல் இறால், சிங்கி இறால் ஆகியவையும் பாலம் கட்டிய பிறகு கிடைப்பதில்லை. அதேபோல எங்கள் ஊரில் இருந்து பிள்ளைகள் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கிடைப்பதிலும் தடை உள்ளது. இதனால் அரசை எதிர்க்க இப்போது மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். மேலும் மத்திய, மாநில இரு அரசுகளையும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. அப்படி இத்தனை ஆண்டுகள் போராடியும் ஒன்றும் மாறாததால் மக்கள் சோர்ந்துவிட்டது வருத்தமாகத்தான் இருக்கிறது”.
எங்கேயாவது சென்றால் என்னால் ஆன எதிர்ப்பு குரலை வெளிப்படுத்துவதற்கு முயற்சி செய்கிறேன். இதனால் அனைத்தையும் மக்கள் ஏற்றுக்கொண்டு அமைதி ஆகிவிட்டார்கள் என்றாகிவிடும் என்பதற்காக பல இடங்களுக்கும் பயணப்பட்டு தன் எதிர்ப்புக்குரலை தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார் சுந்தரி. சமீபத்தில் இரண்டு நாள் சென்னை வருவதற்குக்கூட தன் இட்லி வியாபாரத்தை விட்டுவிட்டுதான் அவர் வர வேண்டி இருந்தது.
“ கூடங்குளம் சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் வாங்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். மேலும் அணு கழிவு மையத்திற்கு எதிராக இந்த அரசின் சார்பாக பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்ட செய்தியை கேட்க தாகத்தில் தவிப்பருக்கு தண்ணீர் கொடுத்தது போல மிகவும் சந்தோசமாக இருந்தது. எங்களால் முடிந்த போராட்டத்தை நடத்திவிட்டோம். இனி இறைவன்தான் வழி செய்ய வேண்டும். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக எங்கள் கிராம மக்களை வேறு இடங்களுக்கு இடம்பெயர செய்யலாமே என்று சிலர் கேட்பதுண்டு. அவர்களுக்கு நான் இதை கேட்டுக்கொள்கிறேன். என் மண்ணைவிட்டு விட்டு என் சொந்த நாட்டிலேயே நாங்கள் அகதிகளாக வாழ வேண்டுமா. அது நாங்கள் செத்ததற்கு சமம்.”
from மாவட்ட செய்திகள் https://ift.tt/JXI2qAz
via
