வேலூர், சின்ன அல்லாபுரம் பலராமன் தெருவைச் சேர்ந்தவர் துரைவர்மா. இவர், போட்டோ ஸ்டுடியோ வைத்து தொழில் செய்கிறார். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில்,13 வயதாகும் மகள் மோகன ப்ரீத்தியுடன் துரைவர்மா வசித்துவந்தார். சமீபத்தில் புதிதாக எலெக்ட்ரிக் பேட்டரி ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியிருக்கிறார் அவர். சிறிய வீடு என்பதால் வெளியில் நிற்க வைத்து, ஸ்கூட்டரின் பேட்டரிக்கு சார்ஜ் போடும் வசதியில்லை.
இதனால், வீட்டு ஹாலை ஒட்டிய முன்புறப் பகுதியில் வண்டியை நிறுத்தி சார்ஜ் போட்டுள்ளார். நேற்று இரவும் வழக்கம்போல், அதேப் பகுதியில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி சார்ஜ் போட்டுவிட்டு, மகளுடன் படுத்து தூங்கியிருக்கிறார். இன்று அதிகாலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ வீடு முழுவதும் பரவியது.
திடுக்கிட்டு எழுந்த துரைவர்மா தனது மகளுடன் அருகிலிருந்த குளியல் அறைக்குள் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு தஞ்சமடைந்தார். வீடு முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் குளியல் அறையில் இருந்த தந்தையும், மகளும் மூச்சுவிட முடியாமல் சுருண்டு விழுந்தனர். சிறிது நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது, குளியல் அறைக்குள் தந்தையும், மகளும் சடலமாகக் கிடந்தனர். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், வேலூரில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/YeAVSFo
via
