தஞ்சை திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?! -அதிரடி ஆணையர்; அதிர்ச்சியில் எம்.எல்.ஏ தரப்பு

0

தஞ்சாவூர் திமுக எம்.எல்.ஏ-வின் அக்கா மகன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் கவுன்சிலரின் உடன்பிறந்த தம்பி அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அதனை தனது வேட்பு னுவில் மறைத்து விட்டதாக கூறி கவுன்சிலராக இருப்பதற்கு தகுதியற்றவர் என குறிப்பிட்டு விளக்கம் கேட்டு அவருக்கு நேட்டீஸ் அனுப்பியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். இதனால் திமுக கவுன்சிலரின் பதவி பறிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. டி.கே.ஜி நீலமேகம் உடன் அண்ணா.பிரகாஷ்

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ, டி.கே.ஜி நீலமேகம். இவரின் அக்கா மகன் அண்ணா.பிரகாஷ் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 16-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடு வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கவுன்சிலராக போட்டியிடக் கூடியவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்ககூடாது. மாநகராட்சி மூலமாக வருமானம் ஈட்டக்கூடிய எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் உள்ளது.

அண்ணா.பிரகாஷின் உடன்பிறந்த தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். அதனை அவர் மறைத்து மனு தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்பட்டவரும், மாநகராட்சி கமிஷனருமான சரவணக்குமார் அண்ணா.பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவருடைய விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் அண்ணா.பிரகாஷ் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்டுவார் என கூறப்படுவது தஞ்சை திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவுன்சிலராக பதவியேற்கும் அண்ணா.பிரகாஷ்

இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தோம், ``கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மாநகராட்சி பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருக்க கூடாது. அதே போல் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிற கடைகளை டெண்டர் எடுத்து நடத்தக் கூடாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவும் இதனை செய்திருக்க கூடாது. வேட்பாளராக இருப்பவரின் ரத்த சொந்தங்களும் மாநகராட்சி மூலம் வருவாய் ஈட்டக்கூடிய எந்த பணியினையும் செய்யக்கூடாது என்பது தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அவை கடண்டுகொள்ளப்படவில்லை. அதிரடிப்பு பெயர் போன தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனரான சரவணக்குமார் குறிப்பிட்ட அந்த விதிமுறையில் கவனம் செலுத்தினார். வேட்புமனு தாக்கல் செய்திருந்த வேட்பாளர்கள் பலர் மாநகராட்சி மூலமாக வருவாய் ஈட்டக்கூடிய பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டதை அறிந்து மனுக்கள் பரிசீலனையின் போது அவர்களது மனுக்களை நிராகரித்தார். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார்

16வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திமுக எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகத்தின் அக்கா மகனான அண்ணா.பிரகாஷின் தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தன்னுடைய வேட்புமனுவில் அதனை மறைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து கமிஷனர் சரவணக்குமார் திமுக கவுன்சிலரான அண்ணா.பிரகாஷிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

அவருடைய விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். கவுன்சிலர் பதவி பறிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட அந்த 16 வது வார்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கான சூழல் ஏற்படும்” என்கிறார்கள் .

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ``அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து அதன் மூலம் லாபம் அடைந்து வருவதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதனால் நீங்கள் கவுன்சிலராக இருப்பதற்கு தகுதியில்லாதவராக இருக்கீங்கனு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். அவரிடமிருந்து விளக்கம் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும்” என்றனர்.

அண்ணா.பிரகாஷிடம் `பேசினோம், ``எனது மாமா டி.கே.ஜியின் அப்பாவும், எனது தாத்தாவுமான மறைந்த டி.கே.கோவிந்தன் காலத்திலிருந்தே நாங்கள் திமுக மீது பிடிப்பு கொண்டவர்களாக இருந்து வருகிறோம். மறைந்த தலைவர் கருணாநிதி 1962-ல் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது கருணாநிதியுடன் கூட இருந்து அனைத்து பணிகளையும் செய்தவர் டி.கே.கோவிந்தன். தாத்தாவை போலவே மாமாவும் கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் இரண்டு முறை எம்.எல்.ஏவாக்கி அழகு பார்த்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின்.

பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் டெண்டர் விட்ட போது எம்.எல்.ஏ என்கிற முறையில் மாமா வியாபாரிகளின் பக்கம் நின்றார். அதிலிருந்தே கமிஷனர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படத் தொடங்கினார். தேர்தலில் போட்டியிட என் மீது நம்பிக்கை வைத்து தலைமை எனக்கு சீட் வழங்கியது. நானும் பெரிய அளவில் வாக்குகளுடன் வெற்றி பெற்று கவுன்சிலராகவும் பதவியேற்றுக் கொண்டேன்.

தஞ்சாவூர் மாநகராட்சி

எனது தம்பி ராம்பிரசாத் அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த சூழலில் நான் கவுன்சிலராக இருப்பதற்கு தகுதியற்றவர் என கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யிருக்கிறார் கமிஷனர். தாத்தா காலத்திலிருந்தே எங்கள் பெயரில் எந்த ஒரு கடையும் வாடகைக்கு எடுத்து நாங்க நடத்தியதில்லை. எனக்கு திருமணமான பிறகு என் மனைவி உள்ளிட்டவர்களை சேர்த்து தனி ரேஷன் கார்டு பெற்று வசித்து வருகிறேன். அந்த வீட்டின் ஒரு பகுதியில் தம்பியும் இருக்கிறார்.

தஞ்சாவூர் மாநகராட்சி

ஆனால் நாங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதாக கூறி அதனை நான் மறைத்து விட்டதாக சொல்லி என் கவுன்சிலர் பதவியை பறிக்க பார்க்கின்றனர். என்னை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் கமிஷனர் வேட்பு மனு பரிசீலனையின் போதே எனது மனுவை நிராகத்திருக்கலாம். ஏன் செய்யவில்லை. திமுகவை சேர்ந்த சிலர் இதன் பின்னணியில் இருப்பதாக கருதுகிறேன். என்னிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கம் கொடுக்க இருக்கிறேன். மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் சட்டப்படி சந்தித்து இதனை முறியடிப்பேன்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/uBPI3Y7
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*