நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக பெருவாரியான வெற்றியை பெற்றது. மாநகராட்சி, நகராட்சிகளை திமுக முழுவதுமாக கைப்பற்ற, மொத்தமுள்ள 33 பேருராட்சிகளில் வெள்ளலூர் பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியது.
இதனிடையே, மறைமுகத் தேர்தல் நடைபெற இருந்த தினம் அங்கு திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக அங்கு தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
அதிமுக இதை கடுமையாக கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. இதையடுத்து மறைமுகத் தேர்தல் நடைபெறாத வெள்ளலூர், அன்னூர், திருமலையம்பாளையம் பேரூராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது.
வழக்கம் போல திமுக – அதிமுக இடையே மோதல் ஏற்பட்டது. 4-வது வார்டு திமுக கவுன்சிலர் குணசுந்தரி என்பவரின் கணவரை, அதிமுகவினர் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவினரும் கோஷம் எழுப்பி, தள்ளுமுள்ளாகி போலீஸ் வாகனத்தை சேதப்படுத்தினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து, திமுக கவுன்சிலர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு மறைமுகத் தேர்தலை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய அதிமுகவினரை போலீஸார் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து திமுகவினர், “போலீஸ் லத்தியை பிடுங்கி தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, தேர்தலை நடத்துங்கள் என்று கூறினோம். அதிகாரிகள் அதை கேட்காமல் எங்களை வெளியேற்றிவிட்டனர். தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது புகாரளிக்க உள்ளோம்.” என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/93EtjFz
via
