கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில், புன்னம் சத்திரம் அருகே உள்ள குப்பம் கிராமத்தில் உள்ள காங்கேயம்பாளையத்தில் என்.டி.சி என்ற தனியார் கல்குவாரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் 12 மணி அளவில் டிப்பர் லாரி ஒன்றில் கற்களை ஏற்றிக்கொண்டு, சேங்கல் அருகே உள்ள பாப்பையம்பாடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா(41) என்பவர் கல்குவாரியில் இருந்து மேலே செல்ல வாகனத்தை இயக்கியுள்ளார். அப்போது, திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி திடீரென ஏற்பட்ட திடீர் மண்சரிவு காரணமாக சுமார் 500 டன் கொண்ட ராட்சத பாறை ஒன்று எதிர்பாரதவிதமாக லாரியின் மீது உருண்டு விழுந்தது.
இதனால், டிப்பர் லாரியில் இருந்த மூன்று பேரின் நிலை என்னவென்று தெரியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, கல்குவாரி நிறுவனம் அதிகாலை வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனடிப்படையில், காலை 6 மணியளவில் மீட்பு பணியை துவங்கிய தீயணைப்புத்துறையினர், மதியம் 2 மணி அளவில் கல்குவாரியில் சிக்கித்தவித்த ஹிட்டாச்சி ஓட்டுநர்கள் கார்த்திக்(23), ராஜ்குமார் (20) என்ற இரு இளஞர்களை உயிருடன் கயிறு கொண்டு மீட்டனர்.
ஆனால், லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் சுப்பையாவை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பாறையை வெடிவைத்து இரண்டாகப் பிளக்க முடிவெடுக்கப்பட்டது. அப்படி, அந்த பாறையை வெடி வைத்து தகர்த்ததோடு, இயந்திரம் மூலம் லாரியின் முன் பகுதியை அகற்றினர். இதில, உடல் நசுங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் சுப்பையா மீட்ககப்பட்டார். இதனிடையே கல்குவாரியில் மீட்கப்பட்ட உடலை போலீஸார் பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால், உயிரிழந்த சுப்பையாவின் உறவினர்கள், உரிய இழப்பீடு வழங்க கல்குவாரி நிறுவனம் உறுதி அளிக்க கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்படி, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீஸார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவதாக கல்குவாரி நிறுவனம் தெரிவித்தால், மாலை 5 மணியளவில் போராட்டத்தை கைவிட்டனர். இதனைத்தொடர்ந்து உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்த லாரி ஓட்டுநர் சுப்பையாவுக்கு உமாதேவி என்ற மனைவியும், காயத்ரி, திவ்யா, மதியழகன் என்ற மூன்று குழந்தைகளும் உள்ளனர். ராட்சத பாறை உருண்டு விழுந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/xutIKq7
via
