கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி கிராமத்தில், 5-வது சிப்காட் வளாகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் சுமார் 3,034 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென்னை மற்றும் மாந்தோப்பு, 30-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள், 50-க்கும் அதிகமான பசுமைக்குடில்கள், 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் அதற்கான நீர்வழித்தடங்கள் என 3 ஊராட்சிகளுமே வேளாண் நிலப்பரப்பைக் கொண்டவைதான்.
மலர்ச் சாகுபடி, புதினா, கொத்தமல்லி, கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் போன்றவையும் அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. நல்ல விளைச்சல் தரக்கூடிய 3 போக சாகுபடி பூமி என்பதால், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு அதன் உரிமையாளர்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமியும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்.
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று காலை 7 மணியிலிருந்து தனிநபராக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்துவருகிறார். அவரின் இந்த உண்ணாவிரதம் இன்று மாலை 5 மணிக்கு நிறைவடையும் என அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கே.பி.முனுசாமிக்கு உறுதுணையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்து அ.தி.மு.க நிர்வாகிகளும், விவசாயிகளும் அங்குத் திரண்டு வந்து கூடியிருக்கிறார்கள்.
இது குறித்து, அங்கிருக்கும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘தொழிற்சாலைக்காக விளை நிலங்கள் பறிக்கப்படுவதால், ஐந்தாயிரம் ஏழை விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மாநில அரசின் இப்படியான அராஜக நடவடிக்கைக்குக் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். விவசாயிகளை நசுக்கும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே கே.பி.முனுசாமி தனி ஒரு மனிதராகப் போராட்டம் செய்து வருகிறார். அவருக்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம்’’ என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/dW90ipZ
via
